இவரெல்லாம் எம்கோவில் ஊழியர்;

இதனால் பெருமை கொள்கிறோம்.

அவரது பெயரைப் புகழ்ந்துரைத்து, 

அவர்போல் உழைக்கச் சொல்கிறோம். 

பவுலைத் தொடர்ந்து பலபேர் உழைத்த, 

பழைய எபேசைத் தேடினோம்.

எவரது வாழ்வில் அன்பு இலையோ,

இழப்பது கண்டு, வாடினோம்!

(திருத்தூதர் பணிகள் 19 & 20, 

எபேசியருக்கு எழுதிய திருமுகம்,

திருவெளிப்பாடு 2;1-7).

தோலை வெட்டும் சடங்கு செய்தாலே,

தெய்வ மீட்பு வருமென்று,

வேலை வெட்டி இல்லார் உரைத்தார்;

விழுந்த கலாத்தியர் பதைத்தார்.

வாலை நிமிர்த்தச் சடங்குகள் வேண்டாம்;

வாழும் பற்றே தருமென்று, 

நூலை எழுதிப் பவுல் எச்சரித்தார், 

நெறிப் பிழையும் புதைத்தார்!

(கலாத்தியர்)

நான்கு தடவை கடிதம் எழுதி, 

நன்கு செய்தி நவின்றிட்டும்,

ஈங்கு மறையில் இரண்டேயுண்டு,

இதையாவது நாம் கற்போம். 

தூங்கு மனிதர் உயிரோடெழும்பும்,

தெய்வப் புதிரையும் இனி கற்று, 

ஏங்குவாரைத் தேறச் செய்வோம்; 

இறை வாக்கில் நாம் நிற்போம்!

(1 கொரிந்தியர் 15).

விரிந்து பரந்த நிலம் அற்றிருந்தும்,

வெற்றிக்கு ஓட்டம் நடந்தது. 

கொரிந்து சிறந்த துறை பெற்றிருந்தும்,

கூடா அழுக்கிலே கிடந்தது. 

எரிந்து ஒழிந்து போவோரிருந்தும்,

இறையின் இரக்கம் தெரிந்தது. 

புரிந்து பவுலார் ஊழியம் செய்தார்;

புனித வாழ்வும் பிறந்தது!

(திருத்தூதர் பணிகள் 18:1-18)

பகரைன் NEC திருக்கோவிலில் பெற்ற,

இறை வாக்குறுதி:

ஏசாயா 59:21.

ஈர் இருபத்தொன்று ஆண்டுகள் முன்னே,

இறையகம் நோக்கி ஒருவன் வந்தான்.

ஓரமாய் தனது உடமையை வைத்து,

உள்ளில் திருமண ஆசி கேட்டான்.

தூரமாய் வருவதும் அறிந்த இறையோ,

தொடரும் பின்னடியார்க்குந் தந்தான்.

கோரிய விண்ணப்பம் ஒன்றே ஆயினும்,

கொடுக்கும்படி பல கோடி இட்டான்!

(இன்று 43-ஆம் ஆண்டின் மணநாள்!)

பற்றால் மீட்பு பெற்றவர் இனிமேல்,

பழைய தீவினை வெறுக்கட்டும்.

பெற்றோம் உரிமம் என நினையாமல்,

பிழைகள் தவிர்க்க, நொறுக்கட்டும். 

வற்றாவூற்றாய் வடியும் வகையில்,

வளரும் நேர்மை பிறக்கட்டும். 

கற்றோம் என்கிற இறுமாப்பின்றி,

கயமை யாவும் துறக்கட்டும்!

(உரோமர் 6)