வேண்டலின் மாதிரி கற்றுத் தந்து, 

விளிக்கும் கிறித்து உரைத்தபடி,

ஆண்டிட நம்மை இறையிடம் ஈந்து,

அவர் விருப்பு செய்வோமா?

மாண்டிடும் மக்கள் பெருந்திரள் கண்டு,

மடியு முன் உறவை மீட்பதற்கு,

நீண்ட நெடும்பணி நமக்கு உண்டு;

நிறைவுற அன்பு பெய்வோமா?

(மத்தேயு 26:36-44).

மற்றவர் உறங்கச் செல்லும் நேரம்,

மன்றாடுகிற இயேசுவைப் பார்.

உற்றவர் மூவர் உடன் சென்றாலும்,

உறங்கி விழுகிற காட்சியும் பார்.

கற்றவர் என்கிற கண்ணுடை நாமும்,

கனவில் நாளைக் கழிப்பது பார். 

கொற்றவர் இயேசு சொற்படி வேண்டு;

குறை இல்லாத மாட்சியும் பார்!

(மாற்கு 14:32-40).

ஏங்கும் இறைமகன் வேண்டல் காண,

யோவான் பதினேழு பாருங்கள்.

தூங்கா இரவில் தொடங்கும் அவரது, 

தூய மன்றாட்டைக் கேளுங்கள்.

நீங்காதிருக்கும் நிற, இனப் பிரிவுகள்

நேர்மையுள் இணைய வாருங்கள்.

வாங்கிய வாக்கை விற்றது போதும்;

வரட்டும் ஒற்றுமை, வாழுங்கள்!

(யோவான் 17: 20-26).