ஒரு முட்டாளின் அறிவு!

முட்டாளாய் பிறந்து, முட்டாளாய் பறந்து,

முழு அறிஞனாக நான் நடிக்கிறேன்.

கெட்டாளாய் மலர்ந்து கெட்டாளாய் உலர்ந்து, 

கெடுப்பேன் எனத்தான் வெடிக்கிறேன்.

தொட்டாள்வேன் இன்று, தூய்மைக்கே என்று;

தொடங்கும் அறிவிறை பிடிக்கிறேன்.

மட்டாகா மகிழ்ச்சி, மடமையின் வீழ்ச்சி;

மண் தருமோ? உரை முடிக்கிறேன்!

–கெர்சோம் செல்லையா.

எழும்பி நின்ற அடியவர் நடுவே, 

இறை வாக்களித்தார் பேதுரு.

குழம்பி நின்றவர் தெளிவு பெறவே, 

கிறித்து நல்கிய புத்துரு.

அழுக்குணந்தவர் உளம் திருந்தவே, 

அளித்தார் அந்நாள் முழுக்கு. 

இழுக்கு துறந்தார் பத்து முன்னூறு;

இதுவே திரு அவை, விளக்கு!

(திருத்தூதர் பணிகள் 2).

அரேமிய மொழியைப் பேசும் அடியார், 

ஆவியில் நிறைந்து எழும்புகிறார். 

பிறமொழி பேசும் பெரும் வரம் பெற்று, 

புறத்தியாரையும் எழுப்புகிறார். 

ஒரேமொழி இணைக்கும் என்கிற கருத்தை, 

உடைத்து இறையே எழும்புகிறார். 

யார் யார், எம்மொழி என்னும் பிரிவினை,

இல்லாதாரையும் எழுப்புகிறார்!

(திருத்தூதர் பணிகள் 2).

பன்னிரு அடிகளும், பற்றுள்ளோர்களும், 

பாங்காய் இணைந்து வேண்டுகையில்,

சொன்ன தம் வாக்கை நிறைவேற்றிடவே,

தெய்வம் ஆவியர் ஆகிறார்.

அன்னிறை நாளும், ஐம்பதென்றிருக்க,

அவை பிறந்துத் தோன்றுகையில், 

என்னிலத்தோர்களும், இயேசுவில் ஒன்று,

என்று இறையும் ஏகிறார்!

(திருத்தூதர் பணிகள் 2.1-47)

மதித்தலே மதி!

ஏற்றத் தாழ்வுகள் என்கிற நிலைமை,

எங்கும் இருப்பது நாம் அறிவோம்.

மாற்றார் மதிக்கும் மதியில்லாமை,

மரமாய்க் கனிவது நாம் அறிவோம்.

போற்றற்குரிய இறைமகன் நமக்கு, 

பொழியும் வாக்கும் நாம் அறிவோம். 

நேற்றைய இழிவின் நிழலை இழக்க, 

நிற்பது யார்? நாம் அறியோம்!

-கெர்சோம் செல்லையா.