அழைக்கும் இயேசு!

அழைக்கும் இயேசு!

செய்தி; யோவான் 11:28-30.  

செய்யுள்:


இறைமகன் வருகிறார் பாருங்கள். 

இயேசு அழைக்கிறார் வாருங்கள். 

குறையினை நீக்குவார் பாருங்கள்.

கொடுக்கும் ஆசிகள் வாருங்கள்.

அறையினில் அழுபவர் வாருங்கள். 

ஆண்டவர் அதிசயம் பாருங்கள். 

நிறைவாழ்வடைவீர் வாருங்கள்; 

நிரம்பும் மகிழ்வும் பாருங்கள்!


-ஆமென்.


-கெர்சோம் செல்லையா.  

அம்மா!

அம்மா, எங்கள் அம்மா!


பேறுபெற்ற பெற்றோர் கண்டார். 

பெயருற்ற  கணவனும் கொண்டார். 

ஊறு செய்யா வாழ்க்கை  கண்டார்;

ஊர்ப்பணியில்  மகிழவும்  கொண்டார்.

ஆறு பிள்ளைகள் பெற்றுத் தந்தார்;

அறிவூட்டியே   வளர்த்தும்  வந்தார்.

கூறு போடாப்  பற்றைத்  தந்தார்; 

கிறித்தவராகவும்  நடத்தி வந்தார். 

மாறுமுலகில் நேர்வழி என்றார்;

மறையா அன்பும் தந்து சென்றார். 

நூறு பேறுகள் பெறுவீர் என்றார்;

நோக்கும்போதே, இறையுள் சென்றார்!


(இன்று எங்கள் அம்மா,

கிளாறிபெல் செல்லையாவின், 

நினைவு நாள்)

இறைமகன்!

செய்யுட் செய்தி!
இறை மைந்தன்!செய்தி:யோவான் 11:27. 

செய்யுள்:


பல்லுயிர் படைத்துப் பரிவுடன் காக்கும்,  

பரத்தின் அரசே இறைவன். 

நல்லருள் வாக்கின் வலுவால் மீட்கும்,

நன்மையின் உருவே இறைவன். 

இல்லையென்பாரும் இரக்கம் சேர்க்கும்,

இனிய தந்தையே இறைவன்.

எல்லா இனத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும்,


இயேசு மைந்தனே இறைவன்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.

உயிர்ப்பு!

உயிர்ப்பு!
வாக்கு: யோவான் 11:23-26.

வாழ்வு:


இறப்பின் பின்னர் எது நடக்கும்?

எம்மறிவிற்குத் தெரியலையே!

பிறப்பின் ஏதும் புதிராயிருக்கும்; 

பேசும் உயிர்ப்பும் புரியலையே! 

திறப்பின் வாசல் எதுவாயிருக்கும்?

தெய்வம் தவிர பேறிலையே. 

சிறப்பின் வாழ்வு நமதாயிருக்கும்;

சேர்க்க, பற்றன்றி வேறிலையே! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

பாழிடம் பார்க்குமுன்!

பாழிடம் பார்க்குமுன்!
வாக்கு; யோவான் 11: 21-22.

வாழ்வு:


வாழ்வின் பொருளே இயேசு;

வழங்குபவரும் இயேசு. 

வீழ்வோர் வேண்டுவார் இயேசு. 

விடுதலையாக்குவார் இயேசு.

தாழ்வில் நினைப்போம் இயேசு. 

தகுதியாக்குவார் இயேசு. 

பாழிடம் பார்க்குமுன், இயேசு

பார்க்க, பார்ப்போம் இயேசு!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.   

யார் ஏழை? கேட்டது அன்பு!

யார் ஏழை? கேட்பது அன்பு!

ஈரேழு ஆண்டுகள் முன்பு

ஏழையூர் ஒன்று சென்றோம்.

சீரேசு ஆண்டவர் பின்பு

சிலபேர் வருவது கண்டோம்.

தீராத ஆவல்கள் கொண்டு,

திரும்பவும் அங்கு சென்றோம்.

யாரேழை? கேட்டது அன்பு!

எம் தலை தாழக் கண்டோம்!

-கெர்சோம் செல்லையா.

இருவேறு காட்சிகள்!

இருவேறு காட்சிகள்!
வாக்கு: யோவான் 11:20.

20. இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.

வாழ்வு: 

இருவேறு காட்சி தருகிற பெண்கள்.
இயேசுவிற்கும் அன்புக் கண்கள். 
மார்த்தாள் அறிந்ததும் ஓடுகிறாள். 
மரியாள் அமர்ந்தே வாடுகிறாள். 
ஒருவரின் பற்றை அளக்கின்றவர்கள்,
ஒரே பக்கம் வளையாதிருங்கள்.
திருஅவையிலும் பன்னிலையாட்கள்.
தேவை இன்று நன்மையாளர்கள்!

ஆமென். 
-கெர்சோம் செல்லையா. 

ஆறுதல்!

இழப்பில் ஆறுதல்!
வாக்கு: யோவான் 11: 17-19.

17. இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.

18. பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.

19. யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். 

வாழ்வு:

ஆறுதல் சொல்லப் பலர் இருந்தாலும்,
ஆற மறுக்கிற இழப்பு,
தேறுதல் என்கிற இறை வரப்போகும்.
தெளியாதிருப்பது பிழைப்பு.    
மாறுதல் கண்டவர் மகிழ்ந்துரைக்கும்,
மாற்றி அமைக்கும் அழைப்பு,
பேறுடன் உம்மை அண்டிக் கொள்ளும். 
பிழை நீக்கவே, உழைப்பு!   

ஆமென் 

-கெர்சோம் செல்லையா. 

யோவான் 11:16.

இறை வாழ்வு:


ஈராறு அடியரில் ஒருவர் தோமா. 

இவரது துணிவைப் பார்க்கலாமா?

ஊரார் கொலைவெறி தெரிந்திருந்தும் 

ஒளியார், இவர் தோற்கலாமா?

பேராறு அருளைப் பெற்றவர் தோமா. 

பிறரை இழுப்பதும் பார்க்கலாமா?

தேறாது அழுகிற துயருற்றவரும் 

தெளிவார், இவரை ஏற்கலாமா? 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

கிறித்து பிறப்பின் வாழ்த்து!

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!

பிறக்கும் நோக்கம் புரியார் புரிய,
பிள்ளை ஒருவர் பிறக்கிறார்.
திறக்கும் புது வழி தெரியார் தெரிய,
தெய்வ மகனாய்ப் பிறக்கிறார்.
இரக்கம் அவ்வழி, என்றே உணர்த்த,
இரங்கும் மீட்பர் பிறக்கிறார்.
நிறைக்கும் அன்பில், நேர்மை புணர்த்த,
நெஞ்சில் இயேசு பிறக்கிறார்!

Merry Christmas ❣️

-கெர்சோம் செல்லையா.