அன்பு ஒன்றே வழியாகும்!

அன்பு ஒன்றே வழி!

முன்னொரு காலத்து மூடம் இல்லை;
முடிவு கட்ட நீ கேளு.
இனொரு பிறவி என்பதும் இல்லை;
இதையுமறிந்து, வாழு.
பன்வகை வழிகள் சேர்ப்பதும் இல்லை;
பரன் வழி அன்பை நாடு.
சொன்னவர் இயேசு, பிழையே இல்லை;
சொந்தமாக்கு, இறை வீடு!

-கெர்சோம் செல்லையா.

இறை வாக்கும், இறையன்பும்!

இறை வாக்கும் இறையன்பும்!

இறை வாக்கு: யோவான் 13:34-35.

  1. நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
  2. நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.

இறையன்பு:

இறையடியானெனச் சொல்கிற என்னில்

இறை அன்புண்டோ, அளக்கிறேன்.

குறை நிறைவாக அளக்கும் முன்னில்,

கொடுமை செய்து பிளக்கிறேன்.

உறையிலொளிக்கும் கத்தியை உருக்கும்;

உள்ளன்பில்லை, வெறுக்கிறேன்.

அறைய வேண்டாம், அன்பைப் பெருக்கும்;

அழிக்கும் வெறுப்பை நொறுக்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இப்போது வரயியலாது!

இப்போது வரயியலாது!

இறைவாக்கு: யோவான் 13: 33.

  1. பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.

இறையறிவு:

இப்போது வர இயலாவிடினும்,
இன்னொரு நாள் வருவனே.
அப்போது உம்மிடம் வந்ததும்
ஆவியை பாவி தருவனே.
எப்போது ஆயினும் ஆயத்தம்
என்று கூறுதல் அருமையே.
தற்போது உம் திரு வாக்கருளும்;
தரணிக்கதுதான் பெருமையே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஆன்மீகம் என்பது என்ன?

இறை மாட்சியுறுதலே ஆன்மிகம்!

இறைவாக்கு: யோவான் 13: 31-32.

  1. அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
  2. தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார்.

இறையறிவு:

ஆன்மயியல் அறிவறிய,
அலைகின்ற மானிடனே,
மேன்மையுற கிறித்துரைத்த,
மெய்வழி காட்டுகிறேன்.
ஏன் பிறந்தேன் என்பதற்கு,
ஏற்ற பதில் கேட்போனே,
நான் அவர்போல் இறைமாட்சி,
நல்கவே கூட்டுகிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இராக்காலம்!

இராக்காலம்!

இறைவாக்கு: யோவான் 3:30.

  1. அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.

இறையறிவு:

இரவின் கருமை இழுக்கும் வேளை,
இயேசுவை விட்டுப் போனானே.
உறவை முறித்துச் சென்றதனாலே,
உயிர் மீட்பிழந்தவன் ஆனானே.
தரகுக்கென்று தலை தாழ்ந்தாலே,
தவறு இறுக்க, மாள்வாரே.
பரனை நோக்கி, பணவெறி நீக்கி,
பரிந்து உதவின், ஆள்வாரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏழைக்கிரங்கு !

மூட நெஞ்சே கேள்!
இறைவாக்கு: யோவான் 13:29.

  1. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.

இறையறிவு:

இறைப்பணி என்பது பேசுதல் தானா?

இல்லா ஏழை எளியருக்கிரங்கு.

முறைப்படி நானும் செய்கின்றேனா?

மூடநெஞ்சே, பணிந்து கறங்கு.

அறையக் கொடுத்தவன் கையில் அன்று

ஆண்டவர் காசு இருந்ததை எண்ணு.

குறையறத் திருப்பணி செய்வேன் என்று,

கொடுத்து ஏழைக்குதவி பண்ணு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

எண்ணம் அறிந்தவரே!

எண்ணம் அறிந்தவரே !

இறைவாக்கு: யோவான் 13:26-28.

26. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.

27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.

28. அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.

இறை வாழ்வு:

மங்கலமாயினும், அமங்கலமாயினும்,

மனதின் எண்ணம் நீர் அறிவீர்.

எங்கள் செயலின் விளைச்சல் பயனும்,

எந்நாளென்றும் நீர் தெரிவீர்.

இங்ஙனம் யாவும் அறிகிற இறையே,

ஏன் நீர் இதனைத் தடுக்கவில்லை?

அங்ஙனமாயினும், நன்மையாய் மாற்றும்,

அருளாயிருப்பதால், கெடுக்கவில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

கிறித்து மார்பில்!

கிறித்து மார்பில்!

இறைவாக்கு: யோவான் 13: 23-25.

23. அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.

24. யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.

25. அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.

இறைவாழ்வு:

பாய்ந்து ஓடும் காட்டாறைப் போல்
பக்குவம் இன்றி ஓடுகிறேன்.
சாய்ந்து மகிழ இடமில்லாமல்,
சகதி சேறும் தேடுகிறேன்.
மேய்ந்து இளைப்பாறும் வீடாய்,
மெய்யடியாரை அணைப்பவரே,
காய்ந்து நானும் கடக்கும் முன்பே,
கழுவி நெஞ்சில் இணைப்பீரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

மைத்துனர்!

மைத்துனர் விக்டர் மோகன் சுந்தர் அவர்கள்!

எந்தையும் தாயும் காத்தது போன்று,

என்னைப் பார்த்த விக்டர் இவர்.

மைந்தனுக்களிக்கும் மனப் பாங்கோடு,

மகிழ்ந்துதவிய மோகன் இவர்.

சிந்தையில் கூட கெடுதலெண்ணாது,

சிறியரைக் காத்த சுந்தர் இவர்.

விந்தை கிறித்து இறையுள் இணைந்த,

விக்டர் மோகன் சுந்தர் இவர்!

-கெர்சோம் செல்லையா.

ஏன் கலக்கம்?

ஏன் கலக்கம்?

இறைவாக்கு: யோவான் 13:21-22.

  1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.
  2. அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.

இறை வாழ்வு:

உடன் இருந்தும் உணர்வடையாமல்,
ஒழிந்து போவோன் நிலை கண்டு,
திடன் இருந்தும், தெரியுமிழப்பால்,
தெய்வ மகனே கலங்குகிறார்.
இடர் கொடுத்தும், ஏய்த்து பெருத்தும்,
இழந்து போவோர் தலை கண்டு,
அடர் நமக்கு ஒன்றும் வேண்டாம்;
அன்பு இறையே கலங்குகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.