தீய ஆவியால்…..


​நற்செய்தி மாலை: மாற்கு 7:24-26.

“இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.”
நற்செய்தி மலர்:
தீய ஆவியின் அலைக்கழிப்பாலே, 
தெய்வத்தின் பிள்ளையும் விழுந்திடலாம்.
தூய ஆவியர் தூக்கிப் பிடிப்பார்;
தீமையை வென்று எழுந்திடலாம்.
பாயும் ஆற்றின் சுழியில் அமிழ்த்த 
பகைவரும் நம்மை இழுத்திடலாம்.
ஆயும் அன்பா, ஆண்டவரைப் பார்;
அமிழாதிருக்கத் தொழுதிடலாம்!
ஆமென்.

அழுக்கை அகற்றும் வழி!

அழுக்கை அகற்ற வழி என்ன?
நற்செய்தி மாலை: மாற்கு 7:20-23.
“மேலும், ‘ மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
எத்தனை எத்தனை நஞ்சுகளாம்?
அத்தனையும் நம் நெஞ்சினிலாம்!
இத்தனைத் தீமைகள் உள் வைத்து,
சித்தனாய் நடிப்பதில் மிஞ்சினோம் நாம்!
மொத்தமும் ஒழித்திட எது முறையாம்?
சுத்தனாம் இயேசுவின் புது மறையாம்!
பித்தளை பாத்திரக் களிம்பகலும்;
நித்தமும் துலக்குவோம், இது முறையாம்!
ஆமென்.

Gershom Chelliah's photo.

அவனும் உண்டான் காய்-கனி-இலை!

அவன் உண்டதுவோ காய்-கனி- இலை!
நற்செய்தி மாலை: மாற்கு 7:17-19.
“அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், ‘ நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது’ என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார்.”

நற்செய்தி மலர்:
உண்ணுவதாலே குறையுமில்லை;
உண்ணாதவரில் நிறையுமில்லை!
பண்ணும் தீமை உணவால் இல்லை;
பலபேர் இதனை உணரவுமில்லை!

அண்ணன் காயீன் செய்தான் கொலை;
அவன் உண்டதுவோ காய்கனி இலை!
எண்ணிப் பார்ப்பீர் ஏழையர் நிலை;
இறைவன் கேட்கிறார், பகிருதலை!
ஆமென்.

அன்பின் தெய்வம் ஆட்கொண்டதனால்….


​நற்செய்தி!

அன்பின் தெய்வம் ஆட்கொண்டதனால்,
அவருக் கடிமை ஆனேனே!
இன்பம் இதுவே என்றறிந்ததனால்,
இயேசுவின் வழியில் போனேனே!
நன்மை செய்வோர் வாழ்வாரதனால்,
நற்பணி செய்யத் துணிந்தேனே.
முன்பின் அறியா ஏழையர் மகிழ்வில்,
மும்மை இறையைப் பணிந்தேனே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

பயனில்லாரைத் தெரிவது தொல்லை!


​பயனில்லாரைத் தெரிவது தொல்லை!
ஏழ்மை ஒழிப்பே நோக்கு என்பார்;

ஏழையை ஒழிக்கவே நோக்குகின்றார்!
ஊழல் இல்லா ஆட்சி என்பார்;
ஊதிப் பெருக்கவே ஆளுகின்றார்!
வாழ வைக்கும் தலைவரும் இல்லை;
வறுமையை ஒழிக்கும் தலையும் இல்லை!
பாழாய்ப் போனது தேர்தல் இல்லை;
பயனில்லாரைத் தெரிவதே தொல்லை!
-கெர்சோம் செல்லையா.

மாசு பிறக்கும் இடம்!

அள்ளும் மாசு பிறக்கும் இடம்!
நற்செய்தி மாலை: மாற்கு 7;14-16.
“இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, ‘ நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும். ( ‘கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்’ ) என்று கூறினார்.”
நற்செய்தி மலர்:
கள்ளும் புகையும் கெடுதல் என்று,
கருத்தாய்ப் பாடல் பாடுகிறோம்.
உள்ளே போகும் உணவிலும் நஞ்சு
உண்டு என்று போடுகிறோம்.
அள்ளும் மாசு பிறக்கும் இடமோ,
அகமென மறந்து ஆடுகிறோம்.
துள்ளும் மனிதர் தூய்மை அடைவார்;
தெய்வ வாக்கைத் தேடுகிறோம்!
ஆமென்.

Gershom Chelliah's photo.
LikeShow More Reactions

Comment

பெற்றோர் சொற்படி நடத்தல்

பெற்றோர் விருப்பை மதித்து நடந்தால்….
நற்செய்தி மாலை மாற்கு 7:9-13.
“மேலும் அவர், ‘ உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். ‘ உன் தந்தையையும் தாயையும் மதித்துநட ‘ என்றும் தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ‘ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘ நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ″ கொர்பான் ″ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று ‘ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
பெற்றோர் சொற்படி பிள்ளை நடந்தால்,
பேரின்பமாகும் அவ்வீடு.
மற்றோர் கண்டு, அதனைத் தொடர்ந்தால்,
மகிழ்ச்சியில் நிறையும் நம் நாடு.
கற்றோர் வடிவில் வாழ்வோர் மறந்தால்,
காண்பார் பின்னர் பெரும்பாடு.
குற்றம் நீங்கும், குடும்பம் மகிழும்;
பெற்றோர் விருப்பை நீ நாடு!
ஆமென்.

கற்பு வேண்டும்!

கற்பு வேண்டும்!
நற்செய்தி மாலை: மாற்கு: 7:5-8.
“ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, ‘ உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்? ‘ என்று கேட்டனர். அதற்கு அவர், ‘ வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘ இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண் ‘ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
உடலைக் கழுவி கோயில் சென்றால்,
உள்ளில் தூய்மை வந்திடுமோ?
சடலம் கூட கழுவப்படுதே!
சடங்குகள் மீட்பைத் தந்திடுமோ?
மடமை வழியில் நடத்திச் செல்ல,
மனிதன் அல்ல நம் தெய்வம்!
கடமை, வாழ்க்கை, எண்ணம் எதிலும்,
கற்பு வேண்டும், நாம் உய்வோம்!
ஆமென்.

Gershom Chelliah's photo.

ஆறுதல் இல்லாத் தேர்தல்!

ஆறுதல் இல்லாத் தேர்தல்!

அள்ளி வீசும் காசுகளால்,
ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கின்றார்.
கொள்ளையடிக்கும் நோக்கில்தான்,
கூட்டணி என்று சேர்க்கின்றார்.
தள்ள வேண்டும் இவர்களை நாம்,
தன்மானத்தில் ஏற்பவர் யார்?
வெள்ளையடித்தக் கல்லறையை,
வீடாக்கிடுவோர் தோற்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

Gershom Chelliah's photo.

குளிப்போம்!

குளிப்போம் தெய்வ வாக்கினுள்ளே!
நற்செய்தி மாலை 7:1-4.
“ஒருநாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் அவரிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.”
நற்செய்தி மலர்:
வெளியின் கறையைக் கழுவுகிறோம்.
வெள்ளப் பெருக்கில் முழுகுகிறோம்.
எளிமை, தாழ்மை, உண்மையென்றால்
இறையை விட்டே நழுவுகிறோம்.

தெளிவைத் தேடும் அன்பர்களே,
தேவை தூய்மை நெஞ்சங்களே.
குளிப்போம் தெய்வ வாக்கினுள்ளே;
குற்றம் மறையும் வாழ்வினிலே!
ஆமென்.

Gershom Chelliah's photo.