நாலடி நற்செய்தி!
நல்வாழ்க்கை எது?
அன்பில் தொடங்கும் வாழ்க்கை,
அன்பாய் நடப்பதே நன்மை.
நன்மைப் புரியட்டும் வாழ்க்கை – இது
நல்லிறையின் தன்மை!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நாலடி நற்செய்தி!
நல்வாழ்க்கை எது?
அன்பில் தொடங்கும் வாழ்க்கை,
அன்பாய் நடப்பதே நன்மை.
நன்மைப் புரியட்டும் வாழ்க்கை – இது
நல்லிறையின் தன்மை!
-கெர்சோம் செல்லையா.
நன்றி!
இறைவாக்கு: யோவான் 12:1-3.
1. பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்குமுன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார்.
2. அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
3. அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
இறைவாழ்வு:
விருந்து சமைத்து, படைப்பதும் நன்றி;
விரும்பி நளதம் உடைப்பதும் நன்றி.
அருந்த தண்ணீர் கொடுப்பதும் நன்றி.
அன்புச் சொற்கள் தொடுப்பதும் நன்றி.
திருந்துபவரில் தெரியட்டும் நன்றி.
தீப்பந்தமாக எரியட்டும் நன்றி.
புரிந்த நெஞ்சில் பெருகட்டும் நன்றி.
புரிய வைத்து, உருகட்டும் நன்றி!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இரு வேறு எண்ணம்!
நற்செய்தி: யோவான் 11: 55-57.55.
யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.56. அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.57. பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.
நல்வாழ்வு:
இரு வழி முறைகள் கொண்டார்,
இறை அடிவாரம் கண்டார்.
ஒரு சிலர் தூய்மை என்றார்;
உள்ளில் பெற்று நின்றார்.
மறு கரை மனிதரும் வந்தார்;
மனதின் தீதைத் தந்தார்.
திருவருள் தேடின் கொள்வார்;
தேடாவிட்டால் வீழ்வார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
காட்டிலும் வாழ்ந்தார்!
நற்செய்தி: யோவான் 11:54.
54. ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.
நல்வாழ்வு:
காட்டிலும் வாழ்ந்து ஊழியம் செய்தார்,
கடவுளின் மைந்தன் ஏசு.
நாட்டிலே இன்று நடப்பது என்ன?
நற்பணிப் பெயரில் தூசு.
கோட்டையும் மேட்டையும் கேட்டவர் யாரோ?
கொணர்ந்தவை யாவும் மாசு.
கேட்டினுள் நுழையும் முன்பே திருந்து;
கிறித்துவாய் எளிமை பேசு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
கொடியரின் திட்டம்!
நற்செய்தி: யோவான் 11:51-53.
51. இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,
52. அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.
53. அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.
நல்வழி:
குருதி எடுக்கும் கொடுமைக்கென்று,
கோடி மக்கள் சேர்ந்தாலும்,
அருகு வந்து ஆண்டவர் நின்று,
அடியர் நம்மைக் காத்திடுவார்.
உறுதி கெடுக்கும் ஐயம் சென்று,
உள்ளுடம்பே சோர்ந்தாலும்,
திரிபு இல்லா தெய்வம் இன்று,
தீமை வராது பார்த்திடுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஊருக்காக ஒருவரைக் கொல்லல்!
நற்செய்தி: யோவான் 11:49-50.
49. அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது;
50. ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான்.
நல்வழி:
ஒருவரைக் கொன்று ஊரைக் காத்தல்,
உயர்ந்த அறிவு ஆகாது.
தெருமுனை ஏழையும் வாழ வேண்டும்;
தெய்வ விருப்பு நோகாது.
எருவெனச் செல்லும் இப்புவி வாழ்வில்,
எவரையும் இழக்கல் ஆகாது.
அருவருப்பான கருத்துப் பருப்பும்,
அறத்தின் நீரில் வேகாது!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
தலைவர்கள்!
நற்செய்தி: யோவான் 11: 46-48.
46. அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
47. அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து: நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
48. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
நல்வாழ்வு:
தங்கள் வளத்தை நாடிச் செல்வர்,
தலைவர் என்று வந்துவிடின்,
உங்கள் வளர்ச்சி எண்ண மாட்டார்.
ஊரறிந்த உண்மை.
திங்கள் ஞாயிறு பாடிச் சொல்வர்,
தெரியும் மெய்யே தந்துவிடின்,
எங்கும் மக்கள் வாழ்வடைவார்;
எண்ணுவோமா நன்மை?
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
நான்கு நாளான உடல்!
நற்செய்தி: யோவான் 11: 44-45.
44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
45. அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
நல்வாழ்வு:
நான்கு நாளாய் அழுகிய உடலும்,
நன்றாய் உயிர் பெறுகிறது.
ஏங்குகின்ற உறவின் முன்பும்,
எழுந்து வந்து நிற்கிறது.
தாங்குகிறவர் இறையென அறியும்,
தகுந்த பற்றே தருகிறது.
தூங்கும் உடல்கள் எழும்பும் காலம்,
துரிதமாகவே வருகிறது!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
வாக்கின் வல்லமை!நற்செய்தி: யோவான் 11: 43-44.43. இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். நல்வாழ்வு: வாக்கின் வலிமை காண விரும்பின்,வருவோம் இயேசு கிறித்திடம்.நோக்கும் யாவும் அருஞ்செயலாகும்;நோக்க மறுப்பதே நம் விடம்.ஆக்கம் செய்தல் இறை விருப்பாகும்;அதுவே நமக்கு வரை படம்.போக்கும் ஐயம், புது வாழ்வுறும்;புறப்படுவோமா இவ் வழித்தடம்?ஆமென். -கெர்சோம் செல்லையா.
பெண்மையே வாழ்க!
யாரும் எனக்கு உயர்வன்று;
யாரும் எனக்கு கீழன்று.
பாரிலெவரும் இணையென்று,
பண்படைவோம், நன்று!
– கெர்சோம் செல்லையா.