சாதியும் நிறமும்!

அழுவோர், அழுதுகொண்டே இருக்கலாம்!

சாதி பார்க்கும் நாடுகளில், சாதியைப் பார்த்து, உயர்வு தாழ்வு என்று மக்களைப் பிரிக்கிறார்களேயன்றி, சமயம் பார்த்து ஒருவரை ஏற்பதுமில்லை, புறக்கணிப்பதுமில்லை. சமயம் மாறுமுன் இருந்த, தேவர்கள், தேவேந்திரர்கள், நாடர்கள், நாயுடுகள், பிள்ளைகள், பிராமணர்கள், சமயம் மாறிய பின்னரும், சாதியை விடாமல் பார்க்கிறார்கள், சாதியாலேயே பார்க்கப்படுகிறார்கள்! அரசு ஆவணங்களிலும் அவர்கள் சாதியுடன்தான் சேர்க்கப்படுகிறார்கள்! சமயம் மாற உரிமையுள்ள நாட்டில், சாதி மாற உரிமையில்லையே!நிறம் பார்த்து மக்களைப் பிரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். சமயம் மாறினாலும், சற்று விலகி வேறு நாடு சென்று குடியேறினாலும், நிறம் மாறாதே! இறைவன் முன்னிலையில் யாவரும் ஒன்றுதான். ஏறத்தாழ எல்லா நாடுகளின் சட்டமும் இதுபோலத்தான். இருப்பினும், மனிதர் மனிதரைப் பிரித்துத்தான் பார்க்கிறார். இந்த பிரிவினை எங்கும் உளது; இந்தியாவிலும் உளது!இதை எப்படி மாற்ற இயலும்? ‘யாவரும் ஒரே உதிரத்திலிருந்து பிறந்தவர்கள்’, ‘எல்லா மனிதரும் இறை சாயலில் தோன்றியவர்கள்’, ‘எல்லோரும் இணையானவர்கள்’, ‘அனைவரும் ஒன்றே’ எனச் சொல்லும் இறைவாக்குகளின் நல்லெண்ணம் எப்போது நம்மனைவர் உள்ளில் குடிவருமோ, அப்போதுதான் எல்லா சாதிப் பேய்களும் தொலையும்; பிரித்தாளும் பிசாசுகளின் கூடாரங்களும் கலையும்!அதுவரை எழுதுவோர் எழுதலாம்; அழுது வடிப்போர்… அழுதுகொண்டே இருக்கலாம்!-கெர்சோம் செல்லையா.

இருவேறு கருத்துக்கள்!

  1. யோவான்: 12: 17-19.

இறைவாழ்வு:


எப்படி இயேசுவைப் பார்த்தார் என்னும்,

இரு வேறு கருத்து பார்க்கிறோம். 

அப்படி இன்றும் பார்ப்பார் செய்யும், 

அவலங்களையும் சேர்க்கிறோம். 

தப்பிதமாகச் சொல்பவர் எனினும், 

தனி உரிமையை மதிக்கிறோம். 

இப்படி இழிவாய் யார் செய்தாலும், 

இயேசு மாறார், துதிக்கிறோம்!


ஆமென். 


கெர்சோம் செல்லையா. 

குதிரையா? கழுதையா?

குதிரையா? கழுதையா?

இறைவாக்கு: யோவான் 12:14-16.14.

அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக,15. இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.16. இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

இறைவாழ்வு:

கழுதையும் குதிரையும் வந்து நின்றால்,

கழுதையை எவர்தான் விரும்புவார்?

கொழுமையும் எளிமையும் தேர்வு சென்றால்,

கொழுமையின் பக்கமே திரும்புவார்.

அழுகுரல் அழிக்கும் அமைதிக்கென்றால்,

அறிஞர் எதைத்தான் விரும்புவார்?

எளிமையின் வடிவம் எடுத்த இறைபோல்,

இனிய கழுதை பின் திரும்புவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஓசன்னா!

இறைவாக்கு: யோவான் 12:12-13.

இறை வாழ்வு:


இன்றே மீட்க வேண்டும் என்று 

ஏங்கும் எங்கள் குரல் கேளும்.

அன்றேழையர் விளித்தது போன்று,

அழைப்பவர் பட்டியல் நீளும்.

ஒன்றோடொன்று மோதிக் கொண்டு,

ஊரை அழிக்கிறார் நாளும்.

என்றோ ஒரு நாள் என்று அல்ல;


இன்றே மீட்டு எமை ஆளும்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

கொலைவெறி!

நற்செய்தி: யோவான் 12:9-11. 

நல்வழி:


வெறுக்கத் தொடங்கும் நெஞ்சு வளர்ந்து,

வெறியில் நிரம்பி வழிவது பார். 

நொறுக்கத் துடிக்கும் தீவினை கலந்து,

நேர்மையின் மேல் பொழிவது பார்.

பொறுத்துப் போகும் பண்பு குறைந்து,

புவியை விட்டு ஒழிவது பார். 

நிறுத்துப் பார்க்கும் இயேசு மறந்து

நில்லார் என்று மொழிவது யார்? 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

முன்னறிவிப்பு!

முன்னறிவிப்பு!
நற்செய்தி: யோவான் 12: 7-8. 

7. அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்.

8. தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார்.

நல்வாழ்வு: 

எனது நடையின் அடுத்த நகர்வு,
எங்கே எப்படி என்றறியேன்.
தனது பணியின் இறுதி நிகழ்வை, 
தலைவரே முன்னுரைத்தார்.
மனது வைத்து அருளுமாறு,
மண்டியிட்டு நானின்றேன்.
கனிவு இரக்கம் அன்பு காட்டி,
காலடியே என்றுரைத்தார்! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

உயிர்த்தெழுதல் வாழ்த்து!

இயேசுவின் உயிர்த்தெழுதல்!

பிறப்பின் முடிவு இறப்பு என்று 

பேசுகின்ற  மாந்தர் முன்,

இறப்பின் பின்பு  வாழ்வு உண்டு,

என்கிறார் ஏசு உயிர்த்து.

திறப்பின் வாசல் இதுவே என்று,

தேடுவார்க்கு  அவர் பின்,

சிறப்பு வாழ்வு ஒன்று உண்டு;

சேர்வோம் நாம் உயிர்த்து!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

இல்லார் பெயரைச் சொல்லி!

இல்லார் பெயரைச் சொல்லி!

நற்செய்தி: யோவான் 12: 4-6.

4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.6. அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

நல்வாழ்வு:

இல்லார் அடைய வழங்குவதற்கு,

இங்கே பலரும் வாங்கினார்.

நல்லாராகக் காட்டிய பிறகு,

நன்கொடைமேல் தூங்கினார்.

எல்லாரையும் அறிந்த இறையோ,

இவரைத் திருத்த ஏங்கினார்.

பொல்லாராகத் தொடரின் அழிவார்;

புரிந்தால், இறையே தாங்குவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

புனித வெள்ளிச் செய்தி!

புனித வெள்ளிச் செய்தி!

வீட்டின் வளமென எண்ண வைத்து,

விரும்பார் ஒழித்து, வெல்கிறார்.

நாட்டின் நலமென நம்ப வைத்து,

நல்லூர் அழிக்கச் சொல்கிறார்.

ஏட்டில் மட்டும் கற்றார் இவரும்,

இறையறிவின்றிச் செல்கிறார்.

கேட்டை விரும்பின் கெட்டு விழுவார்;

கிறித்துவை இன்றும் கொல்கிறார்!

– கெர்சோம் செல்லையா.