உன் வழி தவறு!
முன் வழி காட்டும் நன் மகனேசு,
பன் வழியாளரைப் பழித்தாரா?
“உன் வழி தவறு, என்வழி உயர்வு”
என்றவர் கூறி அழித்தாரா?
தன்னினமாயினும் அன்னியராயினும்,
அன்பினை மறந்து மொழிந்தாரா?
இன்னில மக்கள் வன்முறை ஒழிக்க,
நன்மைகள் மட்டும் பொழிவீரா?
-செல்லையா.
The Truth Will Make You Free
உன் வழி தவறு!
முன் வழி காட்டும் நன் மகனேசு,
பன் வழியாளரைப் பழித்தாரா?
“உன் வழி தவறு, என்வழி உயர்வு”
என்றவர் கூறி அழித்தாரா?
தன்னினமாயினும் அன்னியராயினும்,
அன்பினை மறந்து மொழிந்தாரா?
இன்னில மக்கள் வன்முறை ஒழிக்க,
நன்மைகள் மட்டும் பொழிவீரா?
-செல்லையா.
தண்டியா இறைவன்!
நற்செய்தி: யோவான் 3:17.
நல்வழி:
தண்டித்துக் கொல்லல் தவறிலை இன்று,
தம்மை மறந்தவர் கூறுகிறார்.
கண்டித்துத் திருத்தல் பயனிலை என்று,
கடுமைச் சட்டம் கோருகிறார்.
மண்டிட்டுத் தாழ்வார் மனநிலை கண்டு,
மாண்பின் இறையோ மாறுகிறார்.
துண்டிட்டுடைக்கா மீட்பு கொண்டு,
தூயோன் அன்பில் ஊறுகிறார்!
ஆமென்.
-செல்லையா.
இந்நாட்டார், அந்நாட்டார்!
என்னை ஆளும் இறைவழி சொன்னால்,
ஏற்க மறுப்பார், இந்நாட்டார்.
சொன்னால் கேட்பார்; சொற்படி நடப்பார்;
சொந்த நாட்டார், அந்நாட்டார்.
அன்பின் உறவு, அனைவரும் ஓன்று,
அடிக்கடிச் சொல்வார் இந்நாட்டார்;
பின்னால் சாதி, சமயமே பாரார்;
பிரித்து வையார் அந்நாட்டார்.
ஊரும் உறவும் பார்த்துச் செய்வார்,
உதவ மறுக்கும் இந்நாட்டார்.
யாரும் வந்தால், இறையாய்ப் பார்ப்பார்;
இனவெறி அற்ற அந்நாட்டார்.
சீரும் சிறப்பும் தேடிச் செல்வார்;
தேவை மிகுந்த இந்நாட்டார்.
பேரும் புகழும் தொண்டிலடைவார்;
பெருமை பேசார் அந்நாட்டார்.
ஏற்றம் நாடும் ஏழைக்கிரங்கார்,
ஏழ்மை வெறுக்கும் இந்நாட்டார்.
ஆற்றும் தொண்டு ஆண்டவர்க்கென்பார்;
அரசியல் செய்யார் அந்நாட்டார்.
மாற்றம் தருகிற வழியும் கேட்பார்,
மதிப்பிற்குரிய இந்நாட்டார்.
போற்றும் தூய்மை புரிந்து வாழ்வார்;
புனிதர் மட்டுமே அந்நாட்டார்!
-கெர்சோம் செல்லையா.
இறையன்பு!
நற்செய்தி: யோவான் 3:16.
நல்வழி:
இலை மேல் நீர்த்துளி இருப்பது போன்று,
இயங்கும் நமது புவி வாழ்வில்,
நிலை வாழ்வென்னும் மீட்பு கண்டு,
நெஞ்சை அதனிடம் கொடுப்போமா?
அலை கீழ் ஆழம், மலை மேல் உயரம்,
அளந்தும் வளர்கிற இறையன்பு,
சிலை போல் நின்று வியக்கும் நமக்கு,
சிலுவையில் உண்டு, எடுப்போமா?
ஆமென்.
-செல்லையா.
பல்லும் சொல்லும்!
சொல்லாடும் அந்நாளில்,
சுவையறியா என் பற்கள்,
தள்ளாடும் இந்நாளில்,
தனியாக்கி ஓடுவதேன்?
பல்லாடும் நிலை கண்டும்,
பண்பறியா என் சொற்கள்,
மெல்லாத கீழ் வாயை,
மேலிருந்து மூடுவதேன்?
-செல்லையா.
சிலுவைப் பலி!
நற்செய்தி: யோவான் 3:13-15.
நல்வழி:
எந்த பலியால் என்வினை சாகும்?
இப்படி எவரும் நினைத்தோமா?
அந்த வழியால் நல்மீட்பாகும்,
ஆண்டவரோடு இணத்தோமா?
இந்த வாழ்க்கை வீணாய்ப் போகும்;
இதனால் இறையை நினைப்போமா?
சொந்த மகனைப் பலியாய் ஈகும்,
சிலுவையோடு இணைப்போமா?
ஆமென்.
-செல்லையா.
எப்படி அறிவேன்?
நற்செய்தி : யோவான் 3:9-12.
நல்வழி:
அக்கமும் அறியேன், பக்கமும் அறியேன்.
அடுத்திருப்போரின் நெஞ்சமும் அறியேன்.
இக்கட்டு நேரமே இறைவா என்பேன்.
இதர நாளிலோ யார் அவர் என்பேன்.
திக்கெட்டாத் தொலை எப்படி அறிவேன்?
தேவை இயேசு என்றும் அறிவேன்.
கைக்கெட்டுமருகில் காண்பேன் என்பேன்;
கடவுள் அருளே இயேசு என்பேன்!
ஆமென்.
-செல்லையா.
தவற்றின் முடிவு தண்டனை!
நற்செய்தி: யோவான் 3:18.
நல்வழி:
தவற்றின் முடிவு தண்டனை என்று,
தவறிக்கூட நினைக்காது,
இவற்றில் அன்பு எங்கே என்று,
இன்றைய மாந்தர் கேட்கின்றார்.
அவற்றை அறிந்த ஆண்டவர் அன்று,
அருமை மகனையே பலிதந்து,
சிவப்புக் குருதி வழியாய் இன்று,
சீர்பெற நம்மை மீட்கின்றார்!
ஆமென்.
-செல்லையா.
காற்று போன்ற ஆவியர்!
நற்செய்தி: யோவான் 3:7-8.
நல்வழி:
காற்றின் ஒலியை நாம் கேட்டோம்;
காற்றைக் கண்ணில் காணவில்லை.
ஆற்றல் அறிவில் குறை கண்டோம்;
ஆயினும் நாமோ நாணவில்லை.
மாற்றும் ஆவியர் குரல் கேட்போம்;
மறுப்பின் என்றும் பேணலில்லை.
போற்றும் புதுவழி நாம் காண்போம்;
புனித வாழ்வில் கோணலில்லை!
ஆமென்.
-செல்லையா.
மறுமுறை பிறத்தல்!
நற்செய்தி: யோவான் 3:3-6.
நல்வழி:
ஒருமுறை பிறத்தல் இறையருளாகும்;
இரண்டாம் பிறப்போ பேரருளாகும்.
மறுமுறை பிறத்தல் எப்படியாகும்?
மைந்தன் அருளால் அப்படியாகும்.
இருமுறை பிறந்தால் ஓரிறப்பாகும்.
ஏற்காதிறந்தால் ஈரிறப்பாகும்.
அருள்வழி வாழ்வு யாரால் ஆகும்?
ஆண்டவர் இயேசு பேரால் ஆகும்!
ஆமென்.
-செல்லையா.