இழப்பின் வலியும் மீட்பின் ஒலியும்,
இயம்பும் ஆட்டின் உவமை,
உழைக்கும் ஆயர் ஒவ்வொருவருக்கும்,
உணர்த்தப்படுகிற உண்மை.
விளக்கைக் கொளுத்தி வீட்டில் தேடும்,
விழுந்த காசின் உவமை,
அழைப்பைப் பெற்ற ஊழியர் களத்தில்,
ஆய வேண்டிய உண்மை!
(லூக்கா 15:1-10)
The Truth Will Make You Free
இழப்பின் வலியும் மீட்பின் ஒலியும்,
இயம்பும் ஆட்டின் உவமை,
உழைக்கும் ஆயர் ஒவ்வொருவருக்கும்,
உணர்த்தப்படுகிற உண்மை.
விளக்கைக் கொளுத்தி வீட்டில் தேடும்,
விழுந்த காசின் உவமை,
அழைப்பைப் பெற்ற ஊழியர் களத்தில்,
ஆய வேண்டிய உண்மை!
(லூக்கா 15:1-10)
நல்ல நிலத்தில் நல்விதை விதைத்தும்,
நயவஞ்சகனோ களை விதைப்பான்.
எல்லாம் வளர்கிற காட்சி கண்டால்,
எவன் களையை விட்டு வைப்பான்?
வல்ல இறையோ வளர வைக்கிறார்;
வளமும் நீரும் வாய்க்கச் செய்கிறார்.
நெல்லை அறுவடை செய்யும் நாளில்,
நீசரை முதலில் அறுத்தெரிக்கிறார்!
(மத்தேயு 13:24-30)
விதைக்கிறவன் கதையைக் கேட்டு,
விழுந்தவற்றின் நிலையைக் கண்டு,
பதைக்காமல் மனதில் கொள்வாய்;
பயனளிக்கவே பண்படுவாய்.
கதைக்காகச் சொன்னவை தெரிந்து,
கயமைவழி, கல், முள் துறந்து,
எதைக் கொண்டு நீ விதைப்பாய்?
இறைமொழியே, தென்படுவாய் !
(மத்தேயு 13:1-52)
ஒரு பக்கம் பார்த்து நடக்கிற நமக்கும்,
ஊரின் முழுமை தெரியாது.
மறு பக்கச் செய்தியைக் கேட்கும்போதும்,
மதி மயங்கினால் புரியாது.
வருவதும் வந்ததும் அறிந்த இறைதான்,
வாழ்வின் பொருள் உணர்த்தட்டும்.
பொருளை அறிய, உவமையைக் கற்போம்;
புனிதம் நம்மைப் புணர்த்தட்டும்!
(மத்தேயு 13:1-52)
போற்றும் இயேசு பொழிந்தது எல்லாம்,
புதிரை அவிழ்க்கும் உவமைகள்.
தூற்றும் மனித மடமைகள் போக்கும்,
தூய அறிவுப் புலமைகள்.
ஏற்றம் மிகுந்த இறைவனின் விருப்பை,
எளிமையாக்கும் நிகழ்ச்சிகள்.
மாற்றம் தருமே, மகிழ்ந்து கற்போம்;
மைந்தன் அருட் புகழ்ச்சிகள்!
(மத்தேயு 13: 1-52)
தாழ்மைப் பண்பைத் தவறாய் எண்ணும்,
தமிழக மக்களே வாருங்கள்.
ஏழ்மைக் கோல வடிவில் மின்னும்,
இறையின் மகனைப் பாருங்கள்.
வாழ்வில் உயர்வு காண விரும்பின்,
வரட்டும் நம்முள் தாழ்மை.
ஆழ்கடல் நோக்கித் தாழும் ஆற்றின்,
அமைதிக் கொடையே செழுமை!
(யோவான் 13:1-17)
இன்னொரு பண்பு பொறுமையாகும்;
இயேசுவின் வாழ்வே சான்று ஆகும்.
முன்னொரு நாளில் யோபுவில் கண்டோம்;
முழுமை காண, இயேசுவேயென்போம்.
என்னிலும் நம்மிலும் வருமா பொறுமை?
இல்லா இடத்தில் யாவுமே வறுமை.
நன்னெறி என்பது உரைப்பதில் இல்லை;
நாம் நடப்போம், அவரே எல்லை!
(லூக்கா 4:14-44)
இரக்கம் என்பது இறையின் பண்பு;
இயேசு மொழிந்தார் யூதர் முன்பு.
சிறக்கச் செய்வது செல்வம் என்று,
சிந்தித்தாரைத் திருத்த அன்று.
உரக்கப் பேசிச் செய்யார் கண்டு,
ஊரில் பற்பல கதைகள் உண்டு.
மறக்க மாட்டா இயேசுவோ வந்து,
மன்னிக்கிறார் தம்மைத் தந்து!
(லூக்கா 6)
நன்மை செய்து நடந்த இயேசு,
நவின்ற செய்தி அன்பாகும்.
பன்மை இனமும் சேர்ந்து வாழ,
பயிற்றுவிக்கும் பண்பாகும்.
வன்மை செய்து காட்டும் மாசு,
வழங்கும் முடிவு துன்பாகும்.
தன்மை என்ன? விதைப்பதுதான்
தரும் விளைச்சல், பின்பாகும்!
(யோவான் 13)