ஒப்புரவு!

சட்டம் தன் கடமையைச் செய்யும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:58-59.

58உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.
59நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
சட்டமென்னை என்ன செய்யும்?
சரிதான் போய்யா என்பவரே,
திட்டமிட்டவர் இறைவன் ஆகும்;
திமிராய் நடப்பின் தண்டனையே.
கெட்டநேரம் துரத்தும் முன்னே,
கேட்டுப் பெறுவீர் ஒப்புரவே.
விட்டுவிட்டால், கட்டி விடுவார்;
விடுதலை இல்லை அப்புறமே!
ஆமென். 

எப்படி இருக்கும் 2020?

எப்படி இருக்கும் 2020?


வந்த இவ்வாண்டு எப்படி இருக்கும்?

வழியறியாதோர் கேட்கின்றார்.

முந்தைய நாட்களில் விதைத்தது விளையும்;

மும்மை தெய்வம் ஆள்கின்றார்.

எந்த நன்மையை எவர்க்களித்தோமோ,

இரண்டல்ல, நூறெனத் தருகின்றார்.

ஈந்தது தீமை என்றாயிருந்தால்,

இறைவன் உணர்த்த வருகின்றார்!


-கெர்சோம் செல்லையா.

2020

2020 புத்தாண்டு வாழ்த்துகள்!


எழுபது நெருங்கும் கிழவன் நானும்,

இருபது இருபதை வாழ்த்துகிறேன்.

செழுமையின் நாட்கள் யாவரும் காண,

சேயோன் முன் தலை தாழ்த்துகிறேன்.

அழுகுரல் கேளா ஆட்சியைக் கேட்டு,

அவரிடம் நாளும் வேண்டுகிறேன்.

தொழுவோர் தொண்டில் நாடும் மகிழ,

தூய ஆவியால் தாண்டுகிறேன்!


-கெர்சோம் செல்லையா.

மெய் அறிந்தோமா?

அறிந்தோமா?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:54-57.

54பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும்.
55தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாக்குமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும்.
56மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?
57நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?

கிறித்துவில் வாழ்வு:
காற்றை அறிந்தோம்;
கடலில், கரையில் சீற்றம் அறிந்தோம்.
தோற்றம் அறிந்தோம்;
தொலை வானேறி மாற்றம் அறிந்தோம்.
ஏற்றம் அறிந்தோம்;
ஏறும் மனிதரின் ஆற்றலும் அறிந்தோம்.
போற்றும் மனிதர் நாம்;
பொய்யினின்று, மெய்அறிந்தோமா?
ஆமென்.

கிறித்து பிறப்பு!

கிறித்து பிறப்பு வாழ்த்துகள்!


பிறப்பின் நோக்கம் புரியாமல்,

பேசித் திரியும் மாந்தரினை,

இறப்பின் வழியாய் மீட்பதற்கு,

இறையே மகனாய், புவி வந்தார்.

திறப்பின் வாசல் எதுவென்று,

தெரிந்து நடக்கும் அடியவரை,

சிறப்பின் வாழ்வில் சேர்ப்பதற்கு,

சிறுமையாகியே தமைத் தந்தார்!


-கெர்சோம் செல்லையா.

கிறித்து பிறப்பு வாழ்த்துகள்!

அன்பர்கள், நண்பர்கள், என்கிற உறவுகள்,

இன்பமாய் வாழ, எளியனின் வாழ்த்துகள்!


விண் மாட்சி என்னும் விருப்பம் செய்வோம்;

மண் ஆட்சி எதிலும் அமைதி நெய்வோம்.

கண் காட்சி  நிலைக்கும் அன்பைப் பெய்வோம்.

நன் மீட்சி வழங்கும் இறையால் உய்வோம்!

கிறித்து பிறப்பின் வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள்!

பற்றிழந்தோர் பிரிக்கிறார்!

பற்றிழந்தோர் பிரிக்கிறார்! 

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:51-53.

51நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.52எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.
தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பற்றை இறைவன் பகிரும்போதே
பலபேர் பகடியாய்ச் சிரிக்கிறார்.
உற்றாரில் சிலர் உதவாதென்றே,
உண்மையைச் சினந்து எரிக்கிறார்.
குற்றம் இல்லா இயேசுவின்மீதே,
குற்ற வலையை விரிக்கிறார்.
வெற்றிடமாக வாழ்வை இழந்தே,
விண்ணின் அமைதியும் பிரிக்கிறார்!
ஆமென்.

உம்முள் முழுகுகிறேன்!

உம்முள் முழுகுகிறேன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:49-50.

49பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
துறத்தல் என்றும் பொருள் கொண்டிடுவார்,
தூய தமிழ்ச் சொல் முழுகலுக்கு.
இறத்தல் என்றே பொருளைக் கண்டீர்,
எம்மை மீட்டு எழுப்புதற்கு.
புறத்தில் காணாத் தீமையும் மிகுதி;
புரியா நெஞ்சுள் அழுகுகிறேன்.
அறத்தின் வழிதான் மீட்பு என்று,
அறிந்து உம்முள் முழுகுகிறேன்.
ஆமென்.

அறியு முன், அறிந்த பின்!

அறியு முன், அறிந்த பின்!

கிறித்துவின் வாக்கு:லூக்கா 12:47-48.

47தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
48அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அறியாது செய்யும், அனைத்துத் தவறும்,
ஆண்டவர் அருளால் பொறுக்கப்படும்.
சரியாகக் கேட்டு, தவற்றைத் தவிர்த்தால்,
சாவின் கட்டுகள் அறுக்கப்படும்.
தெரியாது ஆண்டவர் விடுவாரென்று,
துணிகரம் கொண்டால், வெறுக்கப்படும்.  
பரியாகப் போர் வெறி நிறைந்தவராகி,
பாவம் தொடர்ந்தால், நொறுக்கப்படும்!
ஆமென்.

வெங்காயம்!

வெங்காயம்!

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன?
எங்காய உடல் வளர்க்க,
எங்கெங்கோ பாடியவர்,
பொங்காத உணவினுக்கு,
வெங்காயம் இல்லையென்று,
சங்காக மனை முழங்க,
தங்கம்போல் தேடுகிறார்!

-கெர்சோம் செல்லையா.