ஒவ்வொரு வரியும் உண்மை என்று, உரைக்கும் நூலே தானியெல். அவ்வரு நூலை எழுதிய அவர்க்கு, அளித்தார் பரிசு அரிக் குகை. எவ்விதம் இவரால் இப்படி எழுத இயன்றது என்று பார்க்கையில், கவ்விடும் தெய்வ ஆவி அறிவு; களைவோம் நம் வெறிப் பகை! (தானியேல்)
விழுகிற காட்சியை, முன்னர் கண்டு, விழாதிருக்க எச்சரித்தார். எழுகிற காட்சியைப் பின்னர் கண்டு எசேக்கி யெல் உச்சரித்தார். தொழுகிற அடியர் துவளாதிருந்து, தூய அறிவை வேண்டிடுவார். அழுகிற எலும்புகள் ஆவியிலெலுழுந்து அந்நாள் அரசாண்டிடுவார்! (எசேக்கியேல்)
கேடு வருவது கண்டுரைத்தும், கெடுவார் அதை ஏற்கவில்லை. ஏடு எழுதி எரேமியா தந்தும், யூதேயாவும் பார்க்கவில்லை. நாடு அழியும் நிலைக்கு வந்தும், நம்பாதாரை வெறுத்ததில்லை. தேடுகின்ற இறை வாக்கினரும், திருக்கண்ணீர் நிறுத்தவில்லை! (எரேமியா & புலம்பல்)
ஒருவரை ஒருவர் வெறுக்கும் குடியை, ஓருள அன்பினில் சேர்ப்பதற்கு, பெரு நூலெழுதி இறை வாக்குரைத்த, பெரியரில் ஐசையா முதல்வர். வருமெதிர் கால நற்செய்தி வடிவை, வழங்கும் ஐசையாவின் எழுத்து, திருடரை மீட்கும் இறைவாக்காகும்; திருந்தின் இறை புதல்வர்! (ஏசாயா)
தொல்லியல் காலந் தொட்டு தொடங்கி, தூயர் நோக்கிய மீட்பு அது. நல்லருஞ் சட்டம் உள்ளில் அடங்கி, நன்மைக்கழைத்த மீட்பு அது. பல்வகை நூற்களில், பாய்ந்து பதுங்கி, பரன் பணி செய்த மீட்பு அது. இல்லை என்பரும் பின்னர் ஒதுங்கி, ஏற்கிற இறை மீட்பு அது!
பற்பல தூதினை வாக்கினர்கள், பன்னாட்களாய்ச் சொன்னாலும், நற்பொருள் நடுவில் ஒன்றுண்டு. நாம் தேடுகிற மீட்புண்டு. கற்பதற்கரிய வாக்குரைகள் கற்பனை போன்று வந்தாலும், அற்புதம் அதிலே ஒன்றுண்டு. அன்பரேசு மீட்பருண்டு!
இதுபோல் இழந்தார் யூதெய நாட்டார்; எதிர்த்த பாபிலோன் முன் விழுந்தார். எதுவுமில்லாமல் அவரும் அழித்தார்; எழுபது ஆண்டுகள் சிறை பிடித்தார். பொது மறைத்தூதர் எரேமியா என்பார், புரிந்து முன்னே இதைச் சொன்னார். அது கேளாதார் அவமாய் அழிந்தார்; அறமுரைத்தாரோ, துடி துடித்தார்! (புலம்பல்)
அறம் தவறும் அரசர் தொடரவே அசிரிய நாட்டால் பிடி பட்டார். புறம் தள்ளப்படுதலும் நிகழவே, புவியில் சிதறி அடிபட்டார். திறம் இழந்த பத்தரை இனத்தார், தெரியாதின்றும் விடப்பட்டார். நிறம் பாரா நேர்மை இறையனார் நினைக்கவே, தொடப்படுவார்! (2 அரசர்கள் 17)
நல்லிறை வாக்கை நயமாய்ச் சொல்லி, நாட்டை நடத்தினாருமுண்டு. சொல்லிய வாக்கை நடித்துக் காட்டி, செயலில் வடித்தாருமுண்டு. எல்லாக் காலமும் அழியாதிருக்க, எழுதி வைத்தாருமுண்டு. கொல்ல வந்தார், கொள்ளாதிருக்க, குகையில் காத்தாருமுண்டு! (ஏசாயா 20, எரேமியா 13 & எசேக்கியேல் 4) e
தளர்ந்து எலியா தயங்கும் நாளில், தந்தார் இறை ஓர் இளைஞனை. வளர்ந்து எலிசா வரம் பெற்றோங்கி, வழி நடத்தினார் இரு கிளைதனை. மலர்ந்து மயக்கும் பணவேட்கையினை, மாற்றுபவராய் அவர் நின்றார். உலர்ந்து போவாய், ஊனின் விருப்பே; உணர்ந்த மனிதரே வென்றார்! (1 அரசர்கள் 19:9 – 2அரசர்கள்13)