இறந்தவரை எழுப்பிவிடும்….

நற்செய்தி மாலை:மாற்கு 5:35-39.
“அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ‘ உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ‘ என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ‘ அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ‘ என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, ‘ ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
இறந்தவரை எழுப்பிவிடும் வலுமிக்க,
இறைமகனார் நெஞ்சுள்ளே இருப்பதனால்,
மறந்தவர்கள் கொண்டுவரும் துன்புகளும்,
மண்ணாகி மறைந்துவிடும்; நம்பி வாரிர்.
சிறந்தவர்கள் எனும் பதவி உயர்வுபெற,
சீரான பற்றுறுதி வேண்டுவதால்,
திறனின்றி அழுவதனை நிறுத்திவிட்டு,
தெய்வத்தின் காலடியில் அமர வாரீர்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

பற்றுறுதி சற்றுமற்ற …

பற்றுறுதி சற்றுமற்ற …

 நற்செய்தி மாலை: மாற்கு 5:30-34.

“உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ‘ என் மேலுடையைத் தொட்டவர் யார்? ‘ என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ‘ இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘ என்னைத் தொட்டவர் யார்? ‘ என்கிறீரே! ‘ என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், ‘ மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பற்றுறுதி சற்றுமற்ற
பாவியனாய் இருந்தும்,
மற்றவர்போல் துரத்தாது,
மகிழ்ந்தணைத்தார், புகழ்வேன்.
குற்றமுள்ள நெஞ்சமுடன்
குனிந்து தலை இருந்தும்,
முற்றிலுமாய் மன்னித்தார்;
முழு அன்பைத் தொழுவேன்!
ஆமென்.

உம் உடை தொடுவேன்!


​உம் உடை தொடுவேன்…

நற்செய்தி மாலை: மாற்கு 5:25-29.

“அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், ‘ நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ‘ என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.”
நற்செய்தி மலர்:
உம் உடை தொடுவேன்;
உடல் நலம் பெறுவேன்.
உம் கை பிடிப்பேன்;
உடனடி பிழைப்பேன்.
தம் உடை இழந்தோர் 
தவிப்பதும் அறிவேன்.
தருவீர் மீட்பை;
அவர் பெற  உழைப்பேன்!
ஆமென்.

உம் கையாலே தொட்டால் போதும்!

உம்கையாலே தொட்டால் போதும்!

நற்செய்தி மாலை: மாற்கு 5:21-24

“இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.”

நற்செய்தி மலர்:

எம் கையாலே எது செய்தாலும்,

எமக்கு வருதல் நோவு ஆகும்.

உம் கையாலே தொட்டால் போதும்,

ஒவ்வொருநோயும், ஓடிப் போகும்.

இம்மாப் பெரிய நோய் என்றாலும்

இலாது போகும், மருந்தைக் கூறும்.

நம்பாமலே நடப்போர்களுக்கும்,

நற்செய்தியாம் விருந்தைத் தாரும்!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

கடைநிலையோரும் பயன்பெறவே…..

​ கடைநிலையோரும் பயன்பெறவே….

நற்செய்தி மாலை: மாற்கு 5:18-20.

“அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.”

நற்செய்தி மலர்:

கற்ற அறிவும் பெற்ற மீட்பும்

கடைநிலையோர்க்கும் பயன்தரவே,

உற்று நோக்கும், ஊரும் உறவும்,

உயர்ந்து ஏற, இரங்கிடுமே.

குற்ற மில்லா வாழ்வு வாழும்

கிறித்து அன்பில் அவர் வரவே,

பற்று கொண்டு தொண்டு ஆற்றும்;

பரிசு மீட்பு இறங்கிடுமே!

ஆமென்.

வேண்டும் செல்வம் அன்பன்றோ!

வேண்டும் செல்வம் அன்பன்றோ!
நற்செய்தி மாலை 5:14-17.
“பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர், ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.”
நற்செய்தி மலர்:
மாடு பன்றி ஆட்டைவிட,
மனிதனின் மீட்பு பெரிதன்றோ?
பாடுபடுபவன் பாவியென்று,
பகைத்துத் தள்ளுதல் சரியி
ன்றோ?

கோடுபோடும் இறை முன்னே,

குறைந்திருப்பவர் நாமன்றோ?

வீடுபேறு அடைவதற்கு,
வேண்டும் செல்வம் அன்பன்றோ!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

ஆயிரம் பன்றி மாட்டைவிட…

ஆயிரம் பன்றி மாட்டைவிட…

நற்செய்தி மாலை: மாற்கு 5:11-13.

“அங்கே மலைப்பகுதியில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. “நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்” என்று தீய ஆவிகள் அவரை வேண்டின. அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.”

நற்செய்தி மலர்:

நாயினைக் கொஞ்சும் நல்லவரே,

நடப்புச் செய்தியும் கேட்பவரே,

பாயிரம் என்று உதறாமல்,

படைத்தவர் விருப்பெது அறிவீரே!

ஆயிரம் பன்றி மாட்டை விட

அழியும் ஒருவன் உயர்வாமே.

வாயினை மூடி உறங்காமல்,

வாழ, மனிதனைக் காப்போமே!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

எண்ணப் பேய் விரட்டல்!

எண்ணப் பேய் விரட்டல்!

நற்செய்தி மாலை: மாற்கு 5:9-10.

“அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் “இலேகியோன் “, ஏனெனில் நாங்கள் பலர்” என்று சொல்லி, அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று அவரை வருந்தி வேண்டினார்.”

நற்செய்தி மலர்:

ஒன்றல்ல, நம்மைப் பிடித்த

எண்ணப் பேய்கள், ஒன்றல்ல.

என்றல்ல, என்றே உரைத்து

இழந்தோர் புகழ்தல், என்றல்ல.

நன்றல்ல, பேய்கள் பின்னால்

நாமும் செல்லல், நன்றல்ல.

இன்றல்ல, இப்படி நாளும்

எதிர்ப்போம் தீமை, இன்றல்ல!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

பசாசும் பேசுகிறது!

பசாசும் பேசுகிறது!

நற்செய்தி மாலை: மாற்கு 5:6-8.

“அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு ஓடிவந்து அவரைப் பணிந்து, “இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார். ஏனெனில் இயேசு அவரிடம், “தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ” என்று சொல்லியிருந்தார்.”

நற்செய்தி மலர்:

யார் இவர் என்று இயேசுவைப் பார்த்து,

ஏளனமாகக் கேட்பவரே,

பார் இவர், இறையின் மைந்தன் என்று,

பசாசு உரைப்பதும் கேட்பீரே.

மார் நிறை பற்று கொள்ளும்போது

மாற்றான் கூற்று தேவையில்லை.

நீர் இதையறிந்து, நேர்வழி வந்தால்,

நிம்மதிக்கென்றும் குறையுமில்லை!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

வேண்டும் கிறித்துவிற்கு, இவர்களுந்தான்!

வேண்டும் கிறித்துவிற்கு, இவர்களுந்தான்!

நற்செய்தி மாலை: மாற்கு 5:1-5.

“அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள். இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக் கட்டி வைக்க முடியவில்லை. ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டியிருந்தும் அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார். எவராலும் அவரை அடக்க இயலவில்லை. அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும் மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்; தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.”

நற்செய்தி மலர்:

கட்டிப் போட்டாலும் உதறுகின்றார்;

கல்லறை வீடாக்கிக் கதறுகின்றார்.

கெட்டுப் போனவராய்க் குதறுகின்றார்;

கீழ்மக்கள் என்றாகிப் பதறுகின்றார்.

விட்டுச் செல்லாதீர், இவர்களைத்தான்;

வேண்டும் கிறித்துவிற்கு, திருந்தத்தான்.

எட்டுத் திசைகளிலும் புகழைத்தான்,

இவர்களும் உரைப்பார், இயேசுவில்தான்!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.
  • Comments
  • நற்செய்தி மாலை

    Write a comment…