யோவான் 11:5-7

  1. காலம் தாழ்ந்து வருபவர் என்று
  2. கடவுளை சிலபேர் பார்க்கிறார். 
  3. ஓலம் கூட உச்சியில் சென்று
  4. ஒலிக்கவே பலரும் ஏற்கிறார்.
  5. வேலம் பட்டைக் கருத்து தின்று, 
  6. வீணாய் நிற்பவர் தோற்கிறார்.
  7. ஞாலம் மீட்க, நீட்டம் நன்று;
  8. நம்பின், நல்லிறை சேர்க்கிறார்! 
  9. ஆமென். 
  10. -கெர்சோம் செல்லையா. 

யோவான் 11:4

இறை மாட்சி!


எதைச் செய்தாலும் இறையாட்சிக்கு,

என்று வாழ்தல் கிறித்தவம். 

அதன் விளைவும் அவர் மாட்சிக்கு, 

அமைய விரும்பின் நெறித்தனம்.  

இதைத் துறந்த இன்றையப் போக்கு,

எதனால் என்றால், வெறித்தனம். 

விதைக்கும் முன்னே, விளைவை நோக்கு;

வேண்டாம் என்றும் நரித்தனம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 11:1-3

வாக்கு: யோவான் 11:1-3. 

வாழ்வு:


பிணி, மூப்பு, சாவு,

பிறப்பு தொட்டு உண்டு.

இனி வராது என்று, 

இயம்புகிறவர் மண்டு!

அணி அணியாய் அன்று,

அழைக்கு முன்னே கண்டு,

பணி இயேசுவை இன்று,

பகிரும் அன்பு கொண்டு!


ஆமென்.

இறை அதிசயம்!

இறை அதிசயம்!
வாக்கு: யோவான் 10:41-42.

வாழ்வு:


அருட்பணி ஆயிரம் புரிந்தாலும், 

அன்பில் சேர்ந்து திரிந்தாலும்,

விருப்புடன் மனிதர்கள் தேடுவது,

விதியை மாற்றும்  அதிசயமே!

திருப்பணித் தளங்களில் காணுகிற,

தேய்ந்தோர் நலத்தைப் பேணுகிற 

பெருந்திரள் கூட்ட  அருஞ்செயல்கள், 

புரிவாய், இறை அதிசயமே!


ஆமென். 

கெர்சோம் செல்லையா. 

எவ்வளவு உண்மை?

எத்தனை விழுக்காடு உண்மை?


எத்தனை விழுக்காடென்று  பார்த்தேன்;

என்னுள் உண்மை எவ்வளவு?

அத்தனை அளவாய்  ஆண்டவர் பார்த்தேன்;

அறிவுக் குறைவு அவ்வளவு!

மொத்தமும் உண்மையாக்கக் கேட்டேன்;

மும்மை இறையின் அளவு. 

நித்தமும் வளரச் சொல்வதும் கேட்டேன்;

நிறைக்கும் அருளின் அளவு!


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 10:39-40.

காப்பவர் இறைவன்!

வாழ்வு:


என்னிடம் ஒருவர் சொன்னதுபோலே, 

என் தலை போகலை கழுத்துமேலே. 

இன்றின்னேரமும் அதே நிலையே; 

இயேசுதானே என் தலையே! 

முன்னவர் குறித்த நாளின் முன்பே,

முடிவு வருமோ? முடியாதன்பே!

நன்னாள் அந்நாள் இறைநாளென்றே,

நம்பி முடிப்போம் நற்பணி ஒன்றே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

வன்முறை!

வன்முறை!


வன்முறை என்றும் நன்முறை  அல்ல. 

வாள், தடி, குண்டுகள் கொன்று விடும்.

தன் முறை வரும்வரை பொறுப்பது நல்ல

தன்மையேயென்று சென்று விடும்.

என்முறை தவறிய பேச்சிலும் கூட 

இருக்கிற தீமையை அழித்து விடும். 

பன்முறை கேட்கும் அன்பையே நாட, 

பாவி நெஞ்சைக் கிழித்து விடும்!


-கெர்சோம் செல்லையா. 

பிறந்த நாள் வாழ்த்து அக்கா!

பிறந்த நாள் வாழ்த்து, அக்கா!

அக்கா என்கிற அம்மா,

அமைவதில்லை சும்மா.

இக்காலம் நான் கண்டு,

எழுத ஒருவர் உண்டு.

திக்கறு நாளில் நன்மை,

தெரிந்துதவிய தன்மை.

எக்குலம் என்று சொல்லும்;

இறை வழியில் வெல்லும்!

-கெர்சோம் செல்லையா.

படைத்தவர் பண்பு!

படைத்தவர் பண்பு!
வாக்கு: யோவான் 10:37-38.  

வாழ்வு:


படைத்தவர் பண்பு யாரில் உண்டு?

பாரில் பலரிடம் தேடினேன்.

உடைத்தவர், உடைப்பவர் பலரைக் கண்டு,

உள்ளில் வருந்தி வாடினேன். 

கிடைப்பவர் இனிமேல் இல்லை என்று,

கேள்விப் பெட்டியை மூடினேன்.

அடைத்திடும் வேளை, இயேசு நின்று,

அன்பிலணைக்கவே, பாடினேன்!


ஆமென். 


கெர்சோம் செல்லையா.  

இறை மைந்தன்!

இறை மைந்தன்!
வாக்கு: யோவான் 10:34-36.


34. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா?
35. தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,
36. பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?  

வாழ்வு:  


பிறந்து, வளர்ந்த, வாழ்வும் சொல்லும்,

பிறப்பில் இயேசு இறைமைந்தன். 

இறந்து, எழுந்த, உயிர்ப்பும் சொல்லும்,

இவரே நமக்கு இறைமைந்தன். 

மறந்து கூடத் தீமையும் எண்ணார்;

மாட்சி வடிவே இறைமைந்தன்.

துறந்து வந்த விண்ணிலும் சேர்ப்பார்;

தூயர் விடிவே இறைமைந்தன்! 


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.