அறத்தின் பேரரசர்!
நற்செய்தி மாலை: மாற்கு: 15:1-2.
“பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, ‘ நீ யூதரின் அரசனா? ‘ என்று கேட்க அவர், ‘ அவ்வாறு நீர் சொல்கிறீர் ‘ என்று பதில் கூறினார்.”
நற்செய்தி மலர்:
அடிமைக் கோலம் எடுத்தவராயினும்,
அவர்தான் அறத்தின் பேரரசர்.
கொடியோர் வெறியில் கட்டியிழுத்தும்,
குறையேயில்லா நேரரசர்.
விடியுங்காலம் நீளும் எனினும்,
விரைவில் வருவார் விண்ணரசர்.
தடியும் வாளும் எடுப்பவர் விழுவார்;
தரணியை ஆள்வார் என்னரசர்!
ஆமென்
சேவல் கூவும் முன்னே!
சேவல் கூவும் முன்னே!
நற்செய்தி மாலை: மாற்கு 14:72.
“உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ‘ சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ‘ என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.”
நற்செய்தி மலர்:
இருமுறை சேவல் கூவும் முன்னே,
இயேசுவைப் பேதுரு மறுதலித்தார்.
ஒருமுறை முன்பே உரைத்தது எண்ணி,
உடைந்தவர் தமையே அருவருத்தார்.
திருமறைச் செய்தி பலமுறை கேட்டும்,
தெய்வத்தின் மக்களோ இதை மறந்தார்.
மறுமுறை கேட்கும் பேற்றைப் பெற்றார்,
மனந்திரும்பின் அவர் சிறந்தார்!
ஆமென்.

வாழ்வானாலும் தாழ்வானாலும்…
வாழ்வானாலும் தாழ்வானாலும்…
நற்செய்தி மாலை: மாலை: மாற்கு 14:69-71.
அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழ இருந்தவர்களிடம், ‘ இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான் ‘ என்று மீண்டும் கூறத் தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் சூழ இருந்தவர்களும், ‘ உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே. ஏனெனில் நீ ஒரு கலிலேயன் ‘ என்று மீண்டும் பேதுருவிடம் கூறினார்கள். அவரோ, ‘ நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை எனக்குத் தெரியாது ‘ என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார்.”
நற்செய்தி மலர்:
வாழ்வானாலும் சாவானாலும்,
வந்தோம் உம்முடன் என்பவரும்,
தாழ்வானாலும் உயர்வானாலும்,
தந்தோம் தம்முடல் என்பவரும்,
வீழ்வார் உலகில் வீழக்கண்டோம்;
விண்ணரசே எமை நோக்கிடுமே.
பாழாய் நாங்கள் மாளாதிருக்க,
பாவப் பழியும் நீக்கிடுமே!
ஆமென்.

கறுப்பாடு!
கறுப்பாடு!
நற்செய்தி மாலை: மாற்கு
“அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக் குருவின் பணிப் பெண் ஒருவர் வந்து,67 பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து நோக்கி, ‘ நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே ‘ என்றார்.68 அவரோ, ‘நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, புரியவுமில்லை’ என்று மறுதலித்து, வெளி முற்றத்திற்குச் சென்றார். (அப்பொழுது சேவல் கூவிற்று).”
நற்செய்தி மலர்:
மறுத்துரைத்த பேதுரு போன்று,
மாபெரும் தவற்றைச் செய்கின்றோம்;
வெறுத்து இயேசு கைவிடவில்லை;
விரும்பி ஏற்க, உய்கின்றோம்.
பொறுத்து நாமும் அமைதிகொண்டு,
பொய்யருக்காக வேண்டிடுவோம்;
கறுத்துபோன ஆடுகள் மீளும்;
கடவுளின் அருஞ்செயல் கண்டிடுவோம்!
ஆமென்.

தறிகெட்ட ஆடுகள்!
தறிகெட்ட ஆடுகள்!
வெறியும் வெறுப்பும் பதுக்கி வைத்து,
வெளியே அன்பைக் கூறுகிறோம்.
நெறியும் பண்பும் ஒதுக்கி வைத்து,
நேர்மை உருபோல் மாறுகிறோம்.
குறி தவறாகும் வினையே செய்து,
குற்றங்களில்தான் தேறுகிறோம்.
தறிகெட்ட ஆடுகள், தவற்றில் விழுந்தோம்;
தாங்கும் இறையே, ஏறுகிறோம்!
-கெர்சோம் செல்லையா.

அவர் அடிக்கப்பட்டபோது!
அவர் அடிக்கப்பட்டபோது!
நற்செய்தி மாலை: மாற்கு: 14:65.
“பின்பு சிலர் அவர்மேல் துப்பவும், அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி, ‘ இறைவாக்கினனே, யார் எனச் சொல் ‘ என்று கேட்கவும் தொடங்கினர். காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.”
நற்செய்தி மலர்:
வந்தவர் போனவர் அடிக்கின்றார்;
வசைச் சொல்லாலும் இடிக்கின்றார்.
தந்தவர் யார் எனத் தெரியவில்லை;
தலையை மூடிப் பிடிக்கின்றார்.
இந்தியக் கிறித்தவர் துடிக்கின்றார்.
எதிர்க்கும் சொல்லையும் வெடிக்கின்றார்.
மைந்தனின் வழியில் வருபவரோ,
மன்னிப்பருளி முடிக்கின்றார்!
ஆமென்.

வரி!
என்ன வரியில்லை இந்தத் திரு நாட்டில்?
எங்கே போயிற்று, அவை காட்டில்?
சொன்னதெல்லாம் மறைந்தனவே இவர் ஏட்டில்!
சொறிவதற்கும் வலுவில்லை, உடற் கூட்டில்!
-கெர்சோம் செல்லையா.

இறைவனைப் பழித்தாரா இயேசு?

பொய்யுரைப்பார் முன்னிலையில்….

உண்மையுரைப்பவரே வெல்வார்!
உண்மையுரைப்பவரே வெல்வார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:56-59.
“பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, ‘ மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம் ‘ என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.”
நற்செய்தி மலர்:
வழக்கில் வெற்றி காண்பதற்கு,
வாய்நிறையப் பொய் சொல்வார்.
இழக்கும் மானம் எண்ணாது,
இழிவினிறுதிக்கும் இவர் செல்வார்.
கிழக்கு தொடங்கி மேற்குவரை,
கிறித்தவப்பெயரிலும் பலர் கொல்வார்.
உழக்கு படியாய் மாறாது;
உண்மையுரைப்பவரே வெல்வார்!
ஆமென்.
