திரும்பிப் பார்க்கிறேன்!

திரும்பிப் பார்க்கிறேன்!

தாயின் அன்பு கண்டிருந்தும்,

தந்தை இறையை நோக்காது,

பேயின் வழிமுறை நாடினேன்;

பிணக்குழியிலே, வாடினேன்.

நோயின் கைப்பு கொண்டிருந்தும்,

நொந்து மடிய விரும்பாது,

நேயன் இயேசுவைத் தேடினேன்;

நிமிர்த்தப்படவே, பாடினேன்!

-கெர்சோம் செல்லையா.

வாரும், ஆண்டவரே வாரும்!


அறுபது, எழுபது, எண்பதென்று,     


அப்படி அகவை வளர்கிறதா?

ஒருவரும் அறியா நாளினின்று, 

ஓராண்டிழந்து தளர்கிறதா?

தெருமுனை வந்த நடுவரின்று,

தேடும் காட்சி தெரிகிறதா?

திருடன் நுழைவதுபோல் அன்று,

தெய்வமுமழைப்பார் புரிகிறதா? 


வாரும், ஆண்டவரே வாரும்!


-கெர்சோம் செல்லையா

ஒளி – இருள்!

ஓய்ந்து ஒடுங்கும் ஒரு காலம்!

நற்செய்தி: யோவான் 9: 4-5. 

5. நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார்.

நல்வழி:


ஓய்ந்து ஒடுங்கும் ஒரு காலம்,

உண்டு நமக்கும் இருட்காலம். 

சாய்ந்து ஒதுங்கும் செங்கதிரும்,

சவப்பெட்டிக்குள் அடங்கிவிடும். 

ஆய்ந்து பார்ப்போம்  எதிர் காலம்;

ஆண்டவர் திறக்கும் புதிர் காலம். 

பாய்ந்து பரவும் இறையொளியும்; 

பார்க்க, நாமும்  தெளிவாவோம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.  

யார் குற்றம்?

நற்செய்தி: யோவான் 9:1-3.

நல்வழி:

பெற்றோர் தவறா, பிள்ளை தவறா?

பேசிப் பொழுதை வீணாக்கி,

மற்றோர் மீது பழியைப் போடும்,

மனித அறிவியல் ஆன்றோரே,

அற்றோர் வாழ்வின் வறுமை போக்க,

அறிவால் உதவி செய்கின்ற,

கற்றோர் வழியை நீவிர் கண்டு,

கடை பிடிப்பின், சான்றோரே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

யோவான் 8: 59

வெறி!


நற்செய்தி: யோவான் 8:59. 

நல்வழி:


வெறியால் அழியும் வீண் மனிதர்,

வெறுப்பில் இயேசுவை ஏற்காமல்,

எறிவார் கல்லை, கொல்வதற்கு.

எடுக்கும் இடமோ திருக்கோவில்.

நெறியால் வழியும் விண் மனிதர்,

நேரெதிர் வாக்கு கேட்டாலும்,  

அறிவால் பொறுத்து அகன்றிடுவர்;

அவர் செல்லிடமே அருட்கோவில்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

நான் இருக்கிறேன்!

   

நான் இருக்கிறேன்!

நற்செய்தி: யோவான் 8:56-58.

56உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.57அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.58அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நல்வழி:

“நான்” என்ற சொல்லின் உறுதி,

நம்பும் இறையில்தான் உண்டு.

வான் வந்த வட்டப் பரிதி

வடிவு மகனிடமும் உண்டு.

ஏன் என்று கேட்கும் தாழ்வு,

இங்கொழிய என்ன உண்டு?

தேன் ஒழுகும் நிலை வாழ்வு,

தெய்வ வாக்கில்தான் உண்டு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இறை அறிவு!

இறையறிவு!

நற்செய்தி: யோவான் 8:54-55. 54.

இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.55. ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன்.

நல்வழி:

இறை அறிவுள்ளவர் நீவிர் என்றால்,

ஏன் இறுமாப்பு கொண்டுள்ளீர்?

குறை குற்றங்கள் பிறரில் கண்டால்,

குறுமதி உணவே உண்டுள்ளீர்.

முறை தவறாமல் முழங்கால் நின்றால்,

முதலில் உள்வினை கண்டிடுவீர்.

நிறைவறிவாகிய நேர்மை வந்தால்,

நிமிர்ந்து, நன்மை பண்ணிடுவீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

படைப்பின் அழகு!

படைப்பின் அழகு!


படைப்பின் அழகைப் பார்க்கும்போது,

படைக்கும் இறையைப்  பார்ப்போமே.

கிடைக்கும் பொருளைச்  சேர்க்கும்போது,

கொடுக்கும்  அறிவும் சேர்ப்போமே.

உடைக்கும் நம் வினை தோற்கும் என்று,

உணர மறுப்பின், தோற்போமே.

 துடைக்கும் மகனே ஏற்பார் இன்று;


தூய ஆவியில் ஏற்போமே!

-கெர்சோம் செல்லையா. 

யோவான் 8:51-53.

நல்வழி: 


வீட்டுப் பிள்ளையை வேலைக்காரர்,

விரும்பாப் பேயென விரட்டுகிறார். 

கூட்டுச் சேர்ந்து, கூக்குரல் போட்டு,

கொடியவனாக்கப் புரட்டுகிறார்.

கேட்டுப் பார்த்தால், கிறித்து நல்கும்,

கேடிலா வாக்கை யார் தருவார்?

நாட்டோர் நாட்டம் நஞ்சேயென்றால்,

நல் வாழ்வை யார் பெறுவார்? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

தன்னலமில்லாப் பணி!

தன்னலமில்லாப் பணி!
நற்செய்தி: யோவான் 8:50. 

என்னை உயர்த்தும் என் சொற்கள்,

 எந்தப் பயனும் தருவதில்லை.

முன்னே நிற்பவர் புகழுரைகள்,

முடிவு மட்டும் வருவதில்லை. 

பின்னே புகழ்ச்சி நமக்கெதற்கு?

பேசி எவரும் பெறுவதில்லை.

தன்னலமில்லாப் பணி செய்வோம்;

தருகிற மேன்மை அறுவதில்லை!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.