கிறித்து பிறப்பு வாழ்த்துகள்
The Truth Will Make You Free
காலின் தூசும் சான்றுரைக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:10-11.
“மேலும் அவர், ‘ நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ‘ என்று அவர்களுக்குக் கூறினார்.”
நற்செய்தி மலர்:
நூலினைப் பார்த்து நிற்போரே,
நுண்மதி பெற்றிடக் கற்பீரே.
பாலினையொத்தத் திருவாக்கைப்
பருகி, மகிழ்வு சேர்ப்பீரே.
ஆலினைப் போன்று வளர்ந்துவரும்
ஆண்டவர் அரசைப் புறக்கணிப்பின்,
காலினில் ஒட்டிய தூசெழும்பிக்
கடுஞ்சான்றுரைக்கத் தோற்பீரே!
ஆமென்.

அன்று அவர்கள் உடைமை விற்றார்;
அதனால் ஏழையர் கல்வி பெற்றார்.
இன்று நம்மவர் கல்வி விற்றார்;
இதனால் எங்கும் மடமையுற்றார்!
-கெர்சோம்செல்லையா.

தெய்வமும் நாமும்.
மெய்மை தெய்வம் தந்தையே;
மீட்பைத் தருவது மைந்தனே.
பொய்மை களைவது ஆவியே;
புகழும் நானோ பாவியே!
தெய்வம் என்பவர் ஒருவரே,
தெளிவுப் பார்வை தருவரே.
ஐயம் அகன்று நாளுமே,
அன்பில் வாழ்ந்து ஆளுமே!
ஆமென்.

மழை நாளில் வெயில் தேடும் நண்பர்களே,
எழுபதுகளிலிருந்து சென்னையின் வெயிலையும் மழையையும் பார்த்து, இப்பட்டணத்தில் குடிபுகுந்தவன் நான். இப்போது வந்த மழையும் இறைவனின் கொடையே என்றும் எண்ணுபவன் நான். இழந்தவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்தான். இருப்பினும், இறைவனின் கொடையை எப்படிப் பயன்படுத்துவது என்று அறியாதவராய் நாம் செயலற்று இருக்கிறபடியால்தான் இவ்விளைவுகள் என்று நம்புகிறேன். எப்படியிருப்பினும், இது பழைய வரலாறாய் இருக்கட்டும். இந்தப் பெரு மழையும் நமக்கு பட்டறிவைப் புகட்டுகிறது. இனியாவது இறைவனின் கொடையாம் இயற்கையையும், அதன் ஈவுகளையும் இறைவனின் நேர்மையில் சீராய்ப் பயன்படுத்த முயல்வோம். வெள்ளப் பாதைகளைச் சீராக்குவோம். வெளியேறும் நீரைக் குளங்களில் சேர்ப்போம். வேண்டுமளவு குளங்களை ஆழப்படுத்துவோம். விரும்பிப் பார்க்கும் வகையில் அருகே பூங்காக்கள் அமைப்போம். அரசு நிலங்களை அரசுப் பணிக்கு மட்டுமே பயன்படுத்த வைப்போம். அவைகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் தவறான கொள்கையை விட்டுவிடுவோம். இழந்து நிற்போரின் வலியை உணர்வோம். இயன்றவரை நாமும் உதவியாய் இருப்போம். உதவும் உள்ளங்களை, நெஞ்சார வாழ்த்துவோம். எதுவும் செய்யாவிடின், திட்டுவதை நிறுத்துவோம்! நன்றி, நல்வாழ்த்துகள்.
-கெர்சோம் செல்லையா.
மழை வழி அடைத்ததால்…
வாழைப் பழத்தை உரித்துத் தின்று,
வழியில் தோலைப் போடுகின்றோம்.
நாளை அல்ல, இன்றே விழுவோம்,
என்பதை மறந்து ஓடுகின்றோம்.
ஏழை செல்வன் எனப் பார்க்காது,
இறங்கும் மழைவழி அடைத்துவிட்டோம்.
வேளை இதுவே, திருத்திக் கொள்வோம்.
விண்ணின் நேர்வழி நடந்திடுவோம்!
ஆமென்.

எளிமையின் ஊழியம்…
இறைவாக்கினர் போன்றே
பார் முழுதும் புகழ்ந்தாலும்….
தற்புகழ் வெறுக்குந் தன்மை!
நற்செய்தி மாலை: மாற்கு 5:40-43.
“அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ‘ தலித்தா கூம் ‘ என்றார். அதற்கு, ‘ சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ‘ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள். ‘ இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ‘ என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
நற்பணி செய்யும் ஆண்டவரின்,
நயந்த பண்பினைப் பார்ப்போமா?
தற்புகழ் எதுவும் கொள்ளாது,
தடுக்குந் தன்மையைச் சேர்ப்போமா?
பற்பல படங்கள் காட்டும் நாம்,
பணிந்து இறையிடம் கற்போமா?
அற்பராய் நம்மை மாற்றாது,
ஆண்டவர் போல நிற்போமா?
ஆமென்.
