கொடுத்தவர் வாக்கை நம்பாமல்,
கொடியோன் பொய்யை ஏற்கிறார்.
அடுக்கடுக்காய் பல தவறிழைத்து,
அடிமையாய்த்தமை விற்கிறார்.
கெடுப்பவர் யார் என அறியாமல்,
தடுப்பவர் ஒருவர் இருக்கிறார்;
தலைவனை நம்பார் தோற்கிறார்!
(தொடக்க நூல் 3:1-24).

The Truth Will Make You Free
ஒவ்வொரு படைப்பும் கண்டு,
இறையே மகிழ்வு கொண்டு,
அவ்வகை அனைத்தும் நன்று,
என்று சொன்னார் அன்று.
இவ்வித படைப்பில் மிக நன்று
எவ்விதத்திலும் மனிதனென்று,
இறை வாக்குரைப்பதுண்டு.
இப்படிச் சொல்கிற போது
எப்படி என்பாருமுண்டு.
தப்புகள் நீங்கும் என்று,
தருகிறேன் ஏது இன்று.
ஒப்பிலாப் பிறவி மனிதர்;
உண்மையில் இறை சாயல்.
அப்படியாகத்தான் படைத்தார்;
அனைவரையுமே அன்று!
(தொடக்க நூல் 1:4-27)

இறைவன் எங்கே?
(எழுதி வழங்குபவர்:
கெர்சோம் செல்லையா)
அங்குமில்லை, இங்குமில்லை,
ஆண்டவர் எனும் இறைவன்;
எங்குமில்லை, எங்குமில்லை,
என்கிறான் அறியா மனிதன்.
உங்களுள்ளே உங்களுள்ளே
ஒளிந்து கடந்திருப்பேன்.
இங்கு எனை ஏற்பவர் யார்?
என்கிறான் நல்லிறைவன்!
இன்று இறை காண்பதற்கு
என்னவெல்லாம் உண்டு?
என்று இங்கு கேட்பவர்க்கு,
நல்ல விடை உண்டு.
நின்று அசைந்தாடுகின்ற
நிலையில்லா இயற்கை
அன்று முதல் சொல்கிறது,
அதுவே படைப்பென்று!
படைப்பு ஒன்று உண்டு எனில்,
படைத்தவர் அவர் எங்கே?
கிடைத்திடும் வரலாறுகளில்
கேட்கிறார் பலர் இங்கே.
துடைத்திடும் கண் காட்சிகளில்,
தெரியாது இருப்பதினால்,
விடைக்கெல்லாம் அடித்தளமாம்
விவிலியம் பார், அன்பே!
தொடரும்……
போதாது! போதாது!
இறை மொழி: யோவான் 21:25.
25. இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்
இறைமகன் செய்த அருஞ்செயல் கண்டு,
எழுதிய நூல்கள் போதாது.
குறைவற அவற்றின் விளக்கம் கொண்டு
கொடுத்த தாள்கள் போதாது.
மறைநூல் கற்கும் மகிழ்வில் நின்று,
மாட்சி சொல்வரும் போதாது.
நிறைவின் வாழ்வு இறைதானென்று,
நேர்வழி செல்வரும் போதாது!
ஆமென்.
எழுதி வழங்கியவர்: கெர்சோம் செல்லையா. சென்னை-99.

கண்டவன் சான்று!
இறை மொழி: யோவான் 21:24.
24. அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
அன்று கண்ட அடியார் யோவான்
அதனைச் சான்றாய் எழுதினார்.
நன்கு கண்ட காட்சியைத்தான்,
நம்பி மெய்வழி ஒழுகினார்.
பின்பு நமக்கு எழுதும் முன்னர்
பெரிய அன்பிலே முழுகினார்.
இன்று இதனை வாசித்தறிவோர்,
ஏற்பின் தம் கறை கழுவுவார்!
ஆமென்.

இறை விருப்பு!
இறை மொழி: யோவான் 21: 20-23.
20. பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.
21. அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
22. அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.
இறை வழி:
பேரிடி முழங்க இறைவாக்கீந்து
பேர் புகழ் பெருக்க விழைகையில்,
ஓரடி மட்டும் என் முன் சென்று,
ஒளி வீசும் என் கிறித்துவே,
ஆறடி மண்ணுள் அடங்கு முன்பு,
அடியன் கனி தரும் விளைச்சலில்,
சீரடி வைத்துச் சிறியருக்குதவ,
சிந்தை ஈவாய் கிறித்துவே!
ஆமென்.
