கொல்லும் பலிகள் கொடுப்பது நன்றா? கீழ்ப்படிந்து நடப்பது நன்றா? வெல்லும் வீரர் புகழ்தல் நன்றா? வெறியில்லாத இரக்கம் நன்றா? சொல்லும் இறையின் வாக்கு நன்றா? சொந்தமான மடமை நன்றா? இல்லை வேறு இனிமை இல்லை; இறையே நமக்கு என்றும் நன்று! (1 சாமுவேல் 15:22).
உயர்ந்து நின்ற ஒருவரைத் தேர்ந்து, உடனடி அரசர் ஆக்குகிறார். நயந்து செய்கிற நல்லோர் போன்று, நடித்து நாள் அவர் போக்குகிறார். அயர்ந்து கிடக்கிற இசரயெல்லரை, அந்த சவுலும் காக்கவில்லை. ஐயோ, அதுபோல் பலரைக் கண்டோம். அவரும் இறை நோக்கவில்லை! (1 சாமுவேல் 9-31)
அடுத்த வீட்டையும் அண்டை நாட்டையும், அவாப் பெருக்கினில் பார்க்கிறோம். எடுத்த எடுப்பிலே,இலாதவை காணவும், ஏக்கம் பொறாமை கோர்க்கிறோம். தொடுத்து வந்திடும் துயர்கள் தீர்க்கும், தெய்வ அரசையோ மறுக்கிறோம். கெடுத்து ஆள்வதை அறியாதழியும், கீழோர் போற்றியும் சிறுக்கிறோம்! (1 சாமுவேல் 8:1-22).
மன்னர்கள் இல்லா அன்றைய நாளில், மதிப்பில் சிலபேர் சிறந்தனர். தன்னிகர் இல்லாத் தலைவர்களாகி தகுந்த முடிவும் எடுத்தனர். என்றிருந்தாலும் இவர்களை உணர்த்த, இறை வாக்கினரும் பிறந்தனர். அன்னாள் மகனாம் சாமுயெலுக்கு, அவரில் முதலிடம் கொடுத்தனர்! (1 சாமுவேல்)
அந்நாள் வந்த பஞ்சம் தவிர்க்க அயல் நாடுற்ற தாயார் பின், எந்நாள் ஆயினும் புகழ் தழைக்க, எழுந்த பெண்ணே ரூதாவார். பின்னாள் இவளே தாயாராகி, பிறக்க வைத்த அரசர்களை, இந்நாள் கண்டு இறையுமறிவார், ஏழ்மை நீக்கும் தூதாவார்! (ரூத்து 1-4).
எப்படி மனிதர் செயல் புரிந்தாரோ, யார் யாருக்குத் தீங்கிழைத்தாரோ, அப்படி அவரும் அடைந்தது காட்டும், அறிவுத் திருமறை வாசிப்பீரே. இப்படி நம்மைத் திருத்தியமைக்கும், இதுவே வாழ்வு என்றும் உணர்த்தும், செப்பிட இயலா ஆசிகள் நிறைந்த, செயல்வழி நூலிதை நேசிப்பீரே! (நீதித் தலைவர்கள்: 1:1-7;8:30-9:57)
அடுத்த முந்நூற்றைம்பது ஆண்டில், அரசர் என்பவர் இல்லா நாளில், தடுத்து ஆளும் இறையைப் பிரிந்தார். தமக்குச் சரியென்பதும் புரிந்தார். கெடுப்பதும் கெடுவதுமாகத் திரிந்தார்; கேட்டின் வேரும் பாராதிருந்தார். இடுக்கணில் மட்டும் இறைவா என்றார். இழிநிலைக்கே இப்படிச் சென்றார்! (நீதித் தலைவர்கள் (21:25)
நானூறு ஆண்டுகள் ஆயினும், நல்லிறை வாக்கு பலித்ததே. தேனூறு நாட்டை வழங்கினும், திருந்தி வாழவும் விளித்ததே. ஆனாலும் இசரயெல் மறந்ததால், யோசுவா எழுதி எழுகிறார். தானும் தன் வீட்டார் அனைவரும், தாழ் பணியத் தொழுகிறார்! (யோசுவா 24).
உன்னை விட்டு, விலகவும் மாட்டேன், ஒருபோதும் கை, விடவும் மாட்டேன் என்றும் எங்கும், உன்னோடிருப்பேன். இவ்வாக்காலே, இறை அழைத்தார். அன்றதை நம்பி, யோசுவா சென்றார். ஆண்டவராலே, தலைவருமானார். இன்றிதைக் கேட்டு, நடப்பவர் யாரோ? எங்கள் தலைவரோ, பிழைத்தார்! (யோசுவா 1:1-9)
ஐந்து நூற்களை முதற்கண் அருளி, ஆண்டவர் நேர்மை காட்டுகிறார். அந்த நூற்களைத் தோரா என்று, அழைத்து நன்மை நாட்டுகிறார். தந்த நூற்களின் உண்மை கண்டு, தாழ்வோர் பேரருள் கூட்டுகிறார். இந்த வாழ்க்கைப் பயணம் காக்க, இறையே தம் கை நீட்டுகிறார்!