நற்செய்தி மாலை: மாற்கு 1:12-13.
இயேசு சோதிக்கப்படுதல்:
“உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.”
நற்செய்தி மலர்:
எவ்வழி நடத்தல் ஏற்றதென்று
எண்ணும் பண்பு நம்மிலுண்டு.
செவ்வழி நடக்க முடிவெடுப்பின்,
சோதனைப் பாடும் வருவதுண்டு.
இவ்வழி வந்து நமை மீட்கும்
இறைமகன் துணையும் இன்றுண்டு.
கவ்விடும் சூது ஒழிந்துவிடும்;
கடவுளின் வாக்கை நம்பிவிடு!
ஆமென்.
இறைவன் மகிழ்ந்தார்.
நற்செய்தி மாலை: மாற்கு 1:11.
“அப்பொழுது, ‘ என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ‘ என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.”
நற்செய்தி மலர்:
எதை முடிக்க இறைமகன் வந்தார்?
எண்ணிப் பார்த்து ஏற்றிடுவோம்?
அதைக் கண்டு இறைவன் மகிழ்ந்தார்.
அவருள் இணைந்து போற்றிடுவோம்.
இதைக் கேட்கும் நம்பணி என்ன?
இந்த வாழ்வின் பொருளறிவோம்.
உதை பந்தாய்த் துள்ளுதல் அல்ல;
உண்மை மகனாய் அருள்பெறுவோம்!
ஆமென்.

புறாவைப்போல்
நற்செய்தி மாலை: மாற்கு 1:10.
“அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.”
நற்செய்தி மலர்:
சுறாக்கள் சுழலும் நீர்நிலையில்,
சொரியும் கண்ணீர் பெருகுகையில்,
சோர்ந்து அடியேன் விழுகின்றேன்;
சொல்லத் தவித்து அழுகின்றேன்.
புறாக்கள் காட்டும் அமைதியினில்,
பொய்மை அழுக்கு அகற்றுகையில்,
பொறுமை கொண்டு தொழுகின்றேன்;
புனிதா, உம்மால் எழுகின்றேன்!
ஆமென்.

இவர்களின் மீட்பை நினைப்பது யார்?
இவர்களின் மீட்பை நினைப்பது யார்?
இவர்களுக்குதவி செய்பவர் யார்?
அவரவர் வழியைப் புகழ்கின்றீர்;
அத்துடன் இவரையும் எண்ணிடுவீர்!
-கெர்சோம் செல்லையா.

யோவானைப் பார்!
யோவானைப் பார்!
நற்செய்தி மாலை: மாற்கு:1:7-8.
“அவர் தொடர்ந்து, ‘ என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ‘ எனப் பறைசாற்றினார்.”
நற்செய்தி மலர்:
தனது நீராட்டின் தரமறிந்தார்;
தாழ்மையை யோவான் தரித்திட்டார்.
இனங்களை மீட்கும் பணிசெய்வார்,
எங்கும் தாழ்மை கொண்டிருப்பார்.
எனது செயலே எனப்புகழ்வார்,
இவரைப் பார்த்தால் தாழ்ந்திடுவார்.
கனவு போன்ற உலகினிலே,
கறையை நீக்கி வாழ்ந்திடப் பார்!
ஆமென்.

நல்லுணவு தருகிறார்!
நல்லுணவு தருகிறார்!

எந்த நீரால் நீக்கிடலாம்?
நற்செய்தி மாலை: மாற்கு 1:5.
“யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.”
நற்செய்தி மலர்:
உடல்மேல் அழுக்கு படிந்துவிடின்,
ஓராற்றுள் மூழ்கிக் கழுவிடலாம்.
உள்ளில் கறைகள் உறைந்துவிடின்,
எந்த நீரால் நீக்கிடலாம்?
கடல்போல் நீரைக் கொணர்ந்தாலும்,
கறைகள் போக்க வழியில்லை.
கடவுளின் அருள்நீர் கேட்டிடுவோம்;
கருத்தாய் அதனுள் மூழ்கிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி மாலை.
நற்செய்தி மாலை.
மாற்கு 1:1-4.
திருமுழுக்கு யோவானின் உரை:
“கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்: ‘ இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ‘ என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது. இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.”
நற்செய்தி மலர்:
காட்டில் இறையொலி கேட்கிறதே.
கடவுளின் பாதை தெரிகிறதே.
நாட்டில் வாழும் மனிதரிடம்
நல்வழி திரும்பச் சொல்கிறதே.
ஏட்டில் இதனை வாசித்தோம்;
எத்தனை பேர் நாம் செவிகொடுத்தோம்?
பாட்டில் இனிமேல் பாடிடுவோம்.
பாவம் நீங்கத் திருந்திடுவோம்!
ஆமென்.

மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!
மத்தேயுவின் நற்செய்தி கேட்பீரே!
விண்ணை ஆளும் இறைமகனே!
விண்ணை ஆளும் இறைமகனே!
நற்செய்தி: மத்தேயு 28:16-17.
இயேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்:
“பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள்.”
நமது பதில்:
விண்ணில் ஆளும் இறைமகனே,
வீழ்ந்து, பணிந்து, தொழுகின்றேன்.
மண்ணில் வந்து உமைக் கொடுத்து,
மனிதனை மீட்டீர், புகழ்கின்றேன்.
கண்ணில் காணும் நாள் வரையில்
காக்கும் தெய்வம் நீர் அதனால்,
எண்ணம் முழுதும் உமை நிறுத்தி,
எந்நிலையிலும் மகிழ்கின்றேன்!
ஆமென்.


