தீய ஆவிக்கும் தெரியும்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:11-12.
“தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ‘ இறைமகன் நீரே ‘ என்று கத்தின. அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
தீயஆவியரும், தெரிந்தே ஆடுகின்றார்;
திருமகன் இயேசுவின்முன், தோற்று அடங்குகின்றார்.
மாயும் மனிதர்தான், மயங்கிக் கிடக்கின்றார்;
மன்னனின் இரக்கத்தை, மறுத்துத் தடுக்கின்றார்.
நேய நெறி உரைத்தும், நின்று கேட்பவர் யார்?
நேர்வழி தெரிபவர் யார்? நிம்மதி பெறுபவர் யார்?
காயம் நிறைந்தவராய், கண்முன் வருகின்றார்,
கடவுளின் திருமகனார்; காண்பார் மீட்புறுவார்!
ஆமென்.
இயேசுவின் தொடுதல் எப்படி?
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்!
நற்செய்தி மாலை: மாற்கு 3:7-8.
“இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா, எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.”
நற்செய்தி மலர்:
வேற்று நாட்டு இனத்தவர் வந்தார்;
விரும்பியேதாம் தம்மைத் தந்தார்.
ஏற்று மகிழும் இறையைக் கண்டார்;
இனிய வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
தோற்று போனோர் தீட்டு என்றார்.
தூய்மை அறியார் மாட்டுகின்றார்.
மாற்றுவதாக, வேட்டு வைத்தார்;
மாறா இறையோ மீட்டெடுத்தார்!
ஆமென்.

எது சிறந்தது?
எது சிறந்தது?
இரங்கி வேண்டுவோம்!
இயேசுவை இவர்கள் புரியலையே!
நற்செய்தி மாலை: மாற்கு 3:6
“உடனே பரிசேயர் வெளியேறி ஏரோதியரோடு சேர்ந்து இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
நற்செய்தி மலர்:
நன்மை செய்யும் இடங்களிலே,
நன்றி உள்ளோர் தெரியலையே.
இன்ப வாழ்வை ஈகையிலே,
இயேசுவை எவரும் புரியலையே.
என்ன உரைத்தும் பலனிலையே.
இடம் வலம் வேறென அறிவிலையே.
சொன்ன வாக்கு பலிக்கயிலே,
சூழும் வெட்கம், இவர் மேலே!
ஆமென்.
இறைமகன் சினத்தைப் பார்த்தீரா?
இறைமகன் சினத்தைப் பார்த்தீரா?
நற்செய்தி மாலை: மாற்கு 3:5.
“அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, ‘ கையை நீட்டும் ‘ என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது.”
நற்செய்தி மலர்:
இறைமகன் சினந்ததை அறிவீரா?
ஏன் சினந்தார் எனத் தெரிவீரா?
முறைதனில் சினத்திற்கிடமில்லை;
முற்றிலும் தவறு என்பீரா?
நிறைந்தவர் நன்மை வழங்குகையில்,
நெறியிலார் தடுப்பதை ஏற்பீரா?
சிறையினில் பூட்டி வைப்பதல்ல;
சினத்துள் அன்பைப் பார்ப்பீரா?
ஆமென்.
விண்மீன்களின் எண்ணிக்கையை விடவும் பெருகுவாய்!
விண்மீன்களின் எண்ணிக்கையை விடவும் பெருகுவாய்!
விசுவாசம் அல்லது நற்றமிழில் ‘பற்றுறுதி’ என்றுரைக்கும் கிறித்தவச் சொல்லின் பொருள் அறிவோம். இச்சொற்படி பற்றுறுதி கொண்டோரில் அறிவு (கேள்விப்படுதல்) இருக்கவேண்டும்; கேட்டவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; இத்துடன் முடிக்காது, ஏற்றுக்கொண்ட இறைவாக்கின்படி வாழ ஒப்புக் கொடுக்கவேண்டும். அறிவு+ ஏற்பு+ ஒப்படைப்பு = பற்றுறுதி. இதுவே, ஆபிரகாமினின் பற்றுறுதி; அவரது பிள்ளைகளின் பற்றுறுதி; புதிய ஏற்பாட்டு கிறித்தவர்களின் பற்றுறுதி. முதல்நிலையில் நிற்பவர் உண்டு; இரண்டாம் நிலையிலும் வருபவர் உண்டு. மூன்றாம் நிலையில் வந்தால் மட்டுமே பற்றாளர் எனும் விசுவாசியாகலாம். ஆபிராகாம் கேட்டார், ஏற்றுக் கொண்டார், கீழ்ப்படிந்தார். நாம் கேட்கிறோம், ஏற்கிறோம், கீழ்ப்படிகிறோமா? நன்றி; நல்வாழ்த்துகள். பற்றுறுதியில் வளர்வோம்.

எதை விதைத்தால் இன்பம் உய்ப்போம்?
பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பெற்றோரே.
இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே பெப்ருவரி பதினான்காம் நாளில்தான், எனது தாயார் கிளாறி பெல் செல்லையா அவர்கள் இவ்வுலக வாழ்க்கையை முடித்து, அவர்களை ஆண்டு வழி நடத்திய ஆண்டவருடன் இணைந்தார்கள்.
ஈத்தவிளை பாக்கியநாதன்-லீதியாவிற்கு மகளாய்ப் பிறந்த பெருமையும், திருவட்டாறு (புத்தன்கடை) செல்லையாவுக்கு மனைவியாய் வாழ்ந்த பேறும், ஆறு பிள்ளைகளை அறவழியில் நடக்கவைத்து, ஆங்காங்கே உயர்ந்த இடங்களில் அமரவைத்துப் பார்த்த மகிழ்வும் பெற்றவர்.
தனது வயிற்றில் உருவாகும்போதே, தன் மகனை இறைப்பணிக்கு ஒப்படைத்தவர்; தந்தை இறையை மறுத்துத் தவறாய் பேசித்திரிந்த தனது மகன், கிறித்துவில் புதுவாழ்வுபெற நீண்ட காலம் இறைவேண்டல் ஏறெடுத்தவர். கிறித்துவில் பிறந்த மகன் வெளிநாட்டு வேலை செய்த நாளில், கிறித்துவில் வளர்வதற்கு, கிறித்துவின் அறவழியைக் கடிதங்கள் வழியாய்க் கற்றுக் கொடுத்தவர்.
இறக்கும் வேளையில், இனிய கணவருடன் எல்லாப் பிள்ளைகளும் அருகிலிருக்க, இயேசுவிற்குக் கொடுத்த மகன் இல்லாதிருந்தும், அவனை ஆண்டவர் ஊழியப் பாதையில் வழி நடத்துவார் என்று உறுதியாய் நம்பியவர்.
வாழ்ந்த பகுதியில் இருந்த எளிய திருக்கூட்டம் வளர, அருட்பணியில் ஈடுபட்டவர்; வீழ்ந்து கிடந்த தனது ஊர்ப்பகுதி மக்கள் உயர, தான் கற்ற கல்வியாலும், தன்னுள் வாழ்ந்த கிறித்துவின் அருளாலும், நற்பணியாற்றியவர்.
இவரது மகன் என்று சொல்லும் பெருமையை எனக்குத்தந்து, எப்படி இறைப்பணி செய்யவேண்டும் என்று எனக்குக் கற்றுத்தந்து, இன்றும் எனக்கு வழி காட்டும் என் தாயாரை நினைக்கிறேன்.
“பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பெற்றோர்களே.”
நீதிமொழி 17: 6.
-கெர்சோம் செல்லையா.