வெள்ளம் இழுக்கும் வேளையிலே,
வேற்றுமை பார்ப்பவர் மனிதரில்லை.
உள்ளம் திறந்து உதவிடுவோம்;
உயிரைக் காப்பதே நம் வேலை.
– கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
வெள்ளம் இழுக்கும் வேளையிலே,
வேற்றுமை பார்ப்பவர் மனிதரில்லை.
உள்ளம் திறந்து உதவிடுவோம்;
உயிரைக் காப்பதே நம் வேலை.
– கெர்சோம் செல்லையா.

எவ்வழி தலைவன்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:19-20.
19 காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்து கொள்ளப்பட்டபோது,
20 தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான்.
கிறித்துவில் வாழ்வு:
எவ்வழி தலைவர் செல்கின்றாரோ,
அவ்வழிதானே தொண்டரும் செல்வர்.
செவ்வழி எதுவென அறியாத் தலைவர்,
சேர்க்கும் இடமோ படுகுழி, சொல்வர்!
இவ்வகைத் தலைவர்கள் இருப்பதனால்தான்,
இன்று நம்நாட்டில் எதற்கும் பஞ்சம்.
ஒவ்வொரு மனிதரும் இதனைப் புரிந்தால்,
ஒழுகும் ஆறாய் ஒழுக்கம் மிஞ்சும்!
ஆமென்.

மறக்காதீர்! இறக்காதீர்!
மார்வாடி செட்டியர் வர்த்தகம்போல்,
மக்கள் ஆட்சி நடக்குமெனில்,
ஏர்வாடி மனநலக் காப்பகங்கள்,
இங்கே பெருகும்; மறக்காதீர்!
போராடி அழுவோர் உரிமைகளைப்
புரியும் அரசு இருக்குமெனில்,
சீராடி உயரும் நம் வாழ்வு;
சிறியரைத் தாழ இறக்காதீர்!
-கெர்சோம் செல்லையா.

வெளியே தெரியா வெறி!
வெளியே சிரித்து, உள்ளே மறைத்து,
வெறித்தனம் கொள்ளும் ஒருகூட்டம்.
தெளிவாய்த் திட்டம் தீட்டுவதாலும்,
தெரியாதிருக்கும் இவ்வட்டம்.
எளிதாய் எவரும் அறியாதிருக்க,
இவர்களுக்கிருக்கும் பல பட்டம்.
புளியாம் இவரை இனிக்க வைக்க,
புரிவோம் அன்பின் திருச்சட்டம்!
-கெர்சோம் செல்லையா.

ஏழையின் நல்லுயர்வே!
ஐந்தினைக் கொடுத்து ஐநூறெடுக்கும்,
அரசியல் வித்தகரே,
மந்தைகள்போன்று, மக்களை விற்கும்,
மாபெரும் வர்த்தகரே,
விந்தைகள் புரிந்து, வங்கிகள் ஏய்க்கும்
வேந்தர்கள் நல்லுறவே,
இந்திய நாட்டின் வளர்ச்சி என்பது,
ஏழையின் நல்லுயர்வே.
-கெர்சோம் செல்லையா.

திருவட்டாறே!
வளமிகு வட்டாறே,
வந்து பாய்வதோ பருளியாறே.
இளமையில் கண்டவாறே,
இன்றும் இருக்கின்றாயே.
குளமெலாம் பாயும் நீரே;
கொடுக்கிறாள் கோதையாறே.
அளவிட அறியாதாரே,
அழகு வேறென்பாரே!
-கெர்சோம் செல்லையா.

விடுதலை நாள் விழா!
இரவில் வந்த விடுதலையை,
இன்று பகலில் நினைந்திட்டோம்.
உறவில் வாழும் குடியிருப்பில்,
ஒற்றுமை மழையில் நனைந்திட்டோம்.
சிறகில் வைத்துப் பறப்பதற்கு,
செய்வோம் நற்பணி என்றிட்டோம்.
விரைவில் நாடு வளருமென,
வேண்டி, வீடு சென்றிட்டோம்!
-கெர்சோம் செல்லையா.

விடுதலை நாள் வாழ்த்துகள்!
உணவு வரும், உடையும் வரும்.
உறைவிடமும் கூட வரும்.
உரிமை வரும், உயர்வு வரும்;
ஊர் முழுக்க நன்மை வரும்.
கனவில் வரும், காட்சி தரும்,
களிப்பெல்லாம் வந்திடுமோ?
கால் வயிறும் நிரம்பார்க்கு,
காந்தி நாடு தந்திடுமோ?
-கெர்சோம் செல்லையா.

பொய்மை எரியும்!
கிறித்துவின் வாக்கு:4:17-18.
17 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
18 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
கிறித்துவில் வாழ்வு:
நெல்லுக்கு மட்டும் மழையைப் பொழிந்து,
நேர்மை என்கிற இறைவனில்லை.
புல்லுக்கும் கொடுத்து, களையும் வளர்க்கும்,
பொறுமைப் பண்பில் குறைவுமில்லை.
நல்லார் எனினும், அறுவடை நாளில்,
நல்மணி பிரிப்பார், தவறுமில்லை.
பொல்லாப்பழியும், பொய்மை எரியும்,
போக்குச் சொல்லவும் எவருமில்லை!
ஆமென்.

கிறித்துவுள் முழுக வாரீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 3:15-16.
15 யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில்,
16 யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார்.
கிறித்துவில் வாழ்வு:
நீரில் மூழ்கி எழும்பிவிட்டால்,
நேரே விண்ணென எண்ணாதீர்!
பாரில் இப்படி நினைத்துவிட்டு,
பலரை மூழ்கப் பண்ணாதீர்!
போரில் கிறித்தவன் வெல்வதற்கு,
புனித எரிப்பில் முழுகட்டும்.
நேரில் வந்து முழுக்குகின்ற,
நேர்மை வாக்கில் ஒழுகட்டும்!
ஆமென்.
