போதும், உனது கையை நிறுத்து!

போதும் உந்தன் கையை நிறுத்து!

“தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார். (2 சாமுவேல் 24:16)

சூதும் வாதும் பெருகியபோது,

சொற்படி வாதை வந்தது அன்று.

ஏதும் அறியார் இறப்பது கண்டு,

ஏங்கினார்கள் இறைவனின் முன்பு.

‘போதும் உனது கையை நிறுத்து’,

பொழிந்த அருளால், தோற்றது தொற்று.

தீதும் துன்பும் அதுபோல் இன்று,

தொலைவதற்கு இறையை வேண்டு!

-கெர்சோம் செல்லையா.

எனக்கீந்தத் திருக்கொடைகள்!

Image result for luke 16:1-2
Image result for luke 16:1-2

எனக்கீந்தத் திருக்கொடைகள்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:1-2.

1   பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

2   அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒப்புவித்த உடமைகளில்,

ஒருங்கிணைந்த கடமைகளில்,

தப்பிதமாய் நானிருப்பின்,

தடுக்கிறதே, உம் ஆவி.

இப்புவியின் வாழ்க்கையினில்,

எனக்கீந்தத் திருக்கொடைகள்,

எப்பொழுதும் உம் புகழே;

இலாவிடில், நான் பாவி!

ஆமென்.

ஊரடங்கு!

ஊரடங்கு!
அடங்க மறுத்துப் போவோர் செல்லும்,
அழகிய சென்னைச் சாலைகளை,
முடங்க வைத்து, அறிவுரையூட்டும்
முதல் ஆசான் குரோனாவாம்.
கிடங்கு போலப் பிறரது இடத்தில்,
கொட்டும் நமது குப்பைகளை,
சடங்கு செய்தல் போலகற்றின்,
சாவு எப்படி வருவானாம்?

-கெர்சோம் செல்லையா.

கொடுக்கும் இறையைத் தடுக்காதே!

தடுக்கும் மனிதனும், கொடுக்கும் இறையும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:29-32.

29  அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.

30  வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.

31  அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.

32  உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:

தம்பிகள் மீள்வதைத் தடுக்கும் மனிதர்,

தரணியில் பலபேர் உண்டய்யா.

வெம்பிடும் ஏழையர் வாழ்வடைவர்,

விண்ணின் அணைப்பு கொண்டய்யா.

நம்பிடும் அடியர் மகிழ்ந்துரைப்பர்,

நற்செய்தியாலே மீளய்யா.

எம்பிரான் இயேசு இறையரசர்;

எம்மை என்றும் ஆளய்யா!

ஆமென்.

விரும்பா நோய்கள் ஒழியட்டும்!

விரும்பா நோய்கள் ஒழியட்டும்!

ஒருநாள் வீட்டில் ஒளித்திருந்தால்,
உள்ளே வராது தொற்றென்று,
கொரோனா ஒழிப்புத் திட்டம் தந்தது,
கோலோச்சும் மைய அரசின்று.
திருநாள் ஞாயிறு கூடும் நமக்கும்,
தேவை இறையின் அருளென்று,
விரும்பா நோய்கள் ஒழிந்துபோக,
வீட்டில் வேண்டுவதே நன்று!

-கெர்சோம் செல்லையா.

அன்பற்ற அண்ணன்!

அன்பற்ற அண்ணன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:25-28.

25 அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;26 ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.27 அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.28 அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.

கிறித்துவில் வாழ்வு:

ஒழுக்கம் நேர்மை ஊருக்குரைக்கும்,

உள்ளில் அன்பு இல்லையெனில்,

புழுக்கம் கொண்டு, புண்ணாகிடுமே;

புரிந்து, நன்மை செய்வோமா?

அழுக்கை முதற்கண் தன்னிலகற்றும்,

அரிய பண்பு இல்லையெனில்,

மழுக்கம் கண்டு, மண்ணாகிடுமே;

மனம் திரும்பி உய்வோமா?

ஆமென்.

ஏற்கும் அன்பு!

ஏற்கின்ற அன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15:21-24.21  
குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.22  அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.23  கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.24  என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
இறந்தவன் எழுந்து வருவதுபோன்று,
இளையவன் வீட்டுள் வருகின்றான்.
பிறந்தநாள் மகிழ்வு தருவதுபோன்று,
பேரின்ப மகிழ்வும் தருகின்றான்.
சிறப்புடை, மோதிரம், செருப்பும் கொடுத்து,
சிறியனைத் தந்தை ஏற்கின்றான்.
மறக்கயியலா விருந்தும் படைத்து,
மன்னிப்பன்பில் சேர்க்கின்றான்.
ஆமென்.

கொரோனா!

தொற்றாது தொற்று நோய்!

இறைவாக்கு: சங்கீதம்/திருப்பாடல் 91

இறைவேண்டல்:

இத்தனை ஆண்டுகள் இங்கே வாழ்வாய்,

என்று அனுப்பிய என் இறையே,

அத்தனை காலம் நலமாய் வாழ்வேன்,

அதனால் இல்லை, ஒரு குறையே.

எத்தனை விதமாய் நோய் வந்தாலும்,

எனக்கு மருந்து உன் மறையே.

பித்தன் என்று பிறர் பழித்தாலும்,

பெருகும் அருளால் எனை நிறையே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பழுத்த அன்பு!

பழுத்த அன்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 15: 18-20.

18  நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.

19  இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;

20  எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

கிறித்துவில் வாழ்வு:

அழுக்கு உடையில், அவல வடிவில்,

ஆங்கே ஒருவன் தெரிகின்றான்.

கழுத்து நீட்டிக் காத்தவன் தந்தை,

கண்டு மகனென அறிகின்றான்.

இழுத்து மூடி, ஒளித்திராமல்,

எழுந்து ஓடி அணைக்கின்றான்.

பழுத்த அன்பு, தந்தையில் கண்டேன்;

பரமனும் இதுபோல் இணைக்கின்றான்!

ஆமென்.

பட்டினிக் காலம்!

பட்டினிக் காலம்!

கிறித்துவி வாக்கு: லூக்கா 15:16-17.
16  அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.17  அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
கிறித்துவில் வாழ்வு:
அட்டிலில் உணவு பெருக்கெடுத்து,
அழகு தட்டினில் வழியும்போது,
கொட்டினார் அதனை வெளிப்புறத்து,
கொடாது ஏழை எளியவருக்கு.
பட்டினிக் காலம் என்று ஓன்று,
பலரது வாழ்வில் வரலாமென்று,
சுட்டினார் உவமை கிறித்து அன்று;
சுவையும்கூட மிகமிக நன்று!
ஆமென்.