நல் வெள்ளி!
நல்வெள்ளி எனும் நாளில்,
நாங்கள் செல்வோம் கோயில்.
சொல்லேழு தரும் போதில்,
சுமைகள் விழுமே அதில்.
பல்லாண்டாய் வந்தப் பேறு,
பாதித்ததை எண்ணிப் பாரு.
இல்லமதில் வேண்டிக் கூறு.
இறையருளே நம் சோறு!
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நல் வெள்ளி!
நல்வெள்ளி எனும் நாளில்,
நாங்கள் செல்வோம் கோயில்.
சொல்லேழு தரும் போதில்,
சுமைகள் விழுமே அதில்.
பல்லாண்டாய் வந்தப் பேறு,
பாதித்ததை எண்ணிப் பாரு.
இல்லமதில் வேண்டிக் கூறு.
இறையருளே நம் சோறு!
-கெர்சோம் செல்லையா.
கொல்லும் தொற்று!
பல்வகைத் தொற்று பார்த்த எனக்கு,
பரவும் கொரோனா பொருட்டல்ல.
இல்லம் பூட்டி அடைந்து கிடக்க,
இப்பகல் வேளை இருட்டுமல்ல.
சொல்லும் ஊரார் சுற்றுகின்றாரே,
சொல்லின் விளைவு புரியாமல்.
கொல்லும் தொற்று கீழ்ப்படியாமையே;
கொண்டோர் அழிகிறார் அறியாமல்!
-கெர்சோம் செல்லையா.
அறுப்பவர் வரலாறு!
மறுப்பவர் என்று தொடங்குபவர்,
மனதில் வேறாய் மாறுகிறார்.
வெறுப்பவர் என்று வளருமவர்,
வெறித்தன வேராய்த் தேறுகிறார்.
பொறுப்பவர் என்று மாறாதார்,
பொறுமை அற்றுச் சீறுகிறார்.
அறுப்பவராகி அறுபடுவார்,
அழிவுப் பாதை கூறுகிறார்!
-கெர்சோம் செல்லையா.
குதிரையா? கழுதையா?
பதின்மடங்காகப் பயன் தந்தாலும்,
பணியும் கழுதையை விரும்பாமல்,
அதிவிரைவாகப் பகைவருள் பாயும்,
அரபுக் குதிரையை விரும்புகிறோம்.
எதிரியை நண்பர் என்று ஏற்கும்,
இயேசுவோ அப்படிப் பாராமல்,
குதிரை அல்ல, கழுதை கேட்டார்;
கழுதையில் அமைதி திரும்பிடுவோம்!
-கெர்சோம் செல்லையா.
உண்மை உண்டோ?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:11-12.
11 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?
12 வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?
கிறித்துவில் வாழ்வு:
உண்மை என்றால் என்னவென்று,
உலகோர் கேட்கும் காலமிது.
நன்மை செய்யும் இறையுமின்று,
நம்முள் தேடும் பண்புமிது.
அன்றே கொன்ற நாட்களன்று;
அரசிலும் தேடவேண்டுமிது.
என்றானாலும் சொல்வேன் ஒன்று;
இன்றும் விடுதலை கொடுக்குமிது!
ஆமென்.
ஐந்து காசு உண்மை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:10.
10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.
கிறித்துவில் வாழ்வு:
ஐந்து காசு இருந்தபோது,
அதையே ஏய்த்து எடுத்தவர்,
வந்து கொட்டும் கோடி கண்டு,
வடி கட்டாமல் போவாரா?
சொந்த வீட்டில் உண்மையற்று,
சீர் அழியச் செய்பவர்,
இந்த நாட்டை ஆள்வதற்கு,
ஏற்ற தலை ஆவாரா?
ஆமென்.
கறுப்புப் பணமும் கடவுள் அருளும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:9.
9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.
கிறித்துவில் வாழ்வு:
கணக்கில் வராத கறுப்புப் பணத்தை,
கடவுள் அருவருப்பென்றாலும்,
உணவுக்கென்று தவிக்கும் ஏழை
உண்ணப் பெற்றால், ஏற்கின்றார்.
பணத்தால் வாங்க இயலா அருளை,
பரமன் விற்காவிட்டாலும்,
மனத்தால் கொண்ட மாற்றம் கண்டு,
மகிழும் நட்பில் சேர்க்கின்றார்!
ஆமென்.
கொரோனா கூறும் செய்தி!
என்னால் கூடும், யாவும் கூடும்;
என்பது அல்ல, இறைவேண்டல்.
தன்னால் அல்ல, இறையால் கூடும்;
தாழ்ந்து சொல்வதே, இறைவேண்டல்.
முன்னால் நிற்கும் நோயும் கூறும்,
முதற்கண் தேவை, இறைவேண்டல்.
சொன்னால் கேட்கும், நாடே மகிழும்;
சொல்வோம் நாமும், இறைவேண்டல்!
-கெர்சோம் செல்லையா.
கள்ளனை ஏற்கும் வள்ளன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:7-8.
7 பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.
8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
கிறித்துவில் வாழ்வு:
தப்புக் கணக்கு, எழுதி வைத்து,
தப்பமுயன்றான், ஒரு கள்ளன்.
ஒப்புக்கொண்டு, உச்சி முகர்ந்து,
உயர்த்துகின்றான், ஒரு வள்ளன்.
துப்புத் துலக்கி, ஆயும் முன்பு,
தெரியுமிவனே, அக்கள்ளன்.
செப்பும் எளியன் இழிவு கண்டு,
சேர்க்குமிறையே, அவ்வள்ளன்.
ஆமென்.
கொரோனா போன்ற கொடுங்கணக்கு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா16:3-6.
3 அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.
4 உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;
5 தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.
6 அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.
கிறித்துவில் வாழ்வு:
இன்று நீங்கள் எழுதும் கணக்கு,
எப்படிப்பட்டது எனக்கேட்டால்,
நின்று நாமும், நேர்மையென்று,
நிமிர்ந்து சொல்ல இயலாதே!
தொன்றுதொட்டு, தூய்மையற்று,
தொடர்ந்து எழுதும் பொய்க்கணக்கு,
கொன்றுபோடும் கொரோனாவாகும்;
கொடுமையில் செல்ல முயலாதே!
ஆமென்.