இறை தொழுதல்!

இறை தொழுதல்!

விதி என்றிறையை, வணங்கல் உண்டு.

வினை ஒழியென்று, இணங்கலுமுண்டு.


மதி எங்கென்று, பிணங்கல் உண்டு.

மத வெறிகொண்டு, சுணங்கலுமுண்டு.

சதி பகை விட்டு, எழுதல் உண்டோ?

சமமாய்க் கருதும், தழுவலுமுண்டோ?


கதியே இறையென விழுதல் உண்டோ?


கண்ணீரகற்றும் தொழுதலுமுண்டோ?


-கெர்சோம் செல்லையா.

யூதர்!

யூத இனத்தின் பெருமை!  

நற்செய்தி: யோவான் 4:22

நல்வழி: 

அறிவைத் தேடின கிரேக்கரென்றாலும்,

ஆற்றலில் உயர்ந்த உரோமரென்றாலும்,

வெறியுடன் எழுந்த வேற்றினத்தாளும், 

வியந்து எதனை யூதரில் கண்டார்?

நெறிமுறையான மறைவாக்குகளும்,

நேர்வழி சொன்ன இறைவாக்கினரும், 

புரிந்திட இயலா புனிதரின் மீட்பும்,

புவியோரடைந்தது யூதரில் என்பார்!

ஆமென்.  


-செல்லையா.

மறையோம் நாம்!

மறைந்து போகிற   வாழ்க்கை!

மறந்து போகிற மனிதக் குழுவில், 

மறையாதிருப்போர் ஒரு சிலரே. 

திறந்து வைக்கிற அவரது வாழ்வில்,

தெரிகிற உண்மையும் ஒரு சிலவே.

பிறந்து இறந்து மறந்து போகிற,

பெருந்திரளில் மறையும் நாம்,

சிறந்து விளங்க, ஒன்று செய்வோம்.

சிறியருக்கிரங்க,  மறையோம் நாம்!


-கெர்சோம் செல்லையா. 

ஏன் கோயில் செல்கிறோம்?

ஏன் கோயில் செல்கிறோம்?
நற்செய்தி: யோவான் 4:19-21.

நல்வழி: 

எங்கு நோக்கினும் இறைவனிருக்க,

ஏன் நாம் கோயில் செல்கிறோம்?

தங்குமறையில் தனி மரமல்ல;

தரணியர் இணையச் சொல்கிறோம்.

அங்கு செல்வதால் அவர் விருப்பறிய,

அருட் சொற்படியே செல்கிறோம்.

இங்கு காண்கிற எளியருக்கிரங்க, 

ஈசனுள் பிணையச் சொல்கிறோம்!

ஆமென்.


-செல்லையா. .

ஒருத்திக்கொருவன்!

ஒருத்திக்கொருவன்!

நற்செய்தி: யோவான் 4:15-18.  

நல்வழி:

ஒருத்திக்கொருவன் ஒருவனுக்கொருத்தி;

உண்மையில் இதுதான் இறைவிருப்பு.

இருக்கிற இணையின் நெஞ்சைக் குத்தி,

இன்னமும் தேடின், கறையிருப்பு.

நெருக்கிடும் காமம் உருக்கிடும் என்று,

நினைக்க மறப்பின் எரிநெருப்பு.

பெருக்கிடும் தீட்டில் பெரிது திருட்டு;

பிழைக்க விரும்பின் மனந்திருப்பு! 

ஆமென்.

-செல்லையா.

உயிர் நீர் தாருமே!

உயிர் நீர் தாருமே!

நற்செய்தி: யோவான் 4:13-14.  

நல்வழி: 


காய் அற்று, கனியற்று, கறங்கிடும் எனது,


கனவு வாழ்க்கை பாருமே.


ஓய்வற்று, உயர்வற்று, உறங்கிடும் மனது,


உயிர்பெற வேட்கை தீருமே.


நோய் அற்று, நோவற்று, பறந்திட எந்தன்,


நெஞ்சுள் உயிர் நீர் தாருமே. 

தேய்வற்று, தீங்கற்று, சிறந்திடும் உந்தன், 

திருவருட் காலடி சேருமே!


ஆமென்.


-செல்லையா.

திருந்துவோமா?

திருந்துவோமா?
பிள்ளை செய்யும் பிழைகள் கண்டு,
பெற்றோர் நெஞ்சம் வருந்தாதோ?
கொள்ளை போகும் மனிதம் கண்டு, 
கொஞ்சும் இறையும்  வருந்தாரோ?
வெள்ளம் போன்று வடியும் முன்பு,
வீணாம் வாழ்வும்  திருந்தாதோ?  
உள்ளம் உணர உண்மை முன்பு, 
ஒவ்வொரு மனிதரும் திருந்தாரோ? 

-செல்லையா.

வாழ்வித்து வாழ்!

வாழ்வித்து வாழ்!
அடுத்தவரை ஆள்வது தான் வாழ்வு என்று,
கெடுத்தவரைக் கீழாக்க உழைப்போரே,
கொடுத்தவராய் வாழ்வித்து வாழ் என்று,
படுத்துறங்கார் கூறுகிறார், தழைப்பீரே!
-செல்லையா.

பெரியவர் எவருண்டு?

பெரியவர் எவருண்டு? 
நற்செய்தி: யோவான் 4:12.

நல்வழி: 


வீட்டில் பெரியோர் சிலருண்டு;

வெளியில் தெரிவோர் எவருண்டு?

நாட்டில் அறிவோர் பலருண்டு;

நன்மை புரிவோர் எவருண்டு?

தீட்டில் கிடப்போர் ஆங்குண்டு.

திருந்தி நடப்போர் எவருண்டு?

ஏட்டில் நடிப்பார் ஈங்குண்டு.

இறை பிடிப்பார் எவருண்டு?

ஆமென்.

-செல்லையா.

எதுவுண்டு?

என்ன உண்டு?
நற்செய்தி: யோவான் 4:10-11.

நல்வழி: 
உண்டு ருசிக்க உணவும் இல்லை; 
உடுத்த மாற்று உடையும் இல்லை.
மொண்டு குடிக்க கலயம் இல்லை.
மொத்தம் பிடிக்கும் கவலையுமில்லை.
கொண்டு திரிய எது தான் உண்டு?
கிறித்து நோக்கிக் கேட்டோர் உண்டு.
தொண்டு, தொண்டு, தொண்டே உண்டு;
தூயோர் கண்டு புரிவதுமுண்டு!
ஆமென்.
-செல்லையா.