பற்பல தூதினை வாக்கினர்கள், பன்னாட்களாய்ச் சொன்னாலும், நற்பொருள் நடுவில் ஒன்றுண்டு. நாம் தேடுகிற மீட்புண்டு. கற்பதற்கரிய வாக்குரைகள் கற்பனை போன்று வந்தாலும், அற்புதம் அதிலே ஒன்றுண்டு. அன்பரேசு மீட்பருண்டு!
இதுபோல் இழந்தார் யூதெய நாட்டார்; எதிர்த்த பாபிலோன் முன் விழுந்தார். எதுவுமில்லாமல் அவரும் அழித்தார்; எழுபது ஆண்டுகள் சிறை பிடித்தார். பொது மறைத்தூதர் எரேமியா என்பார், புரிந்து முன்னே இதைச் சொன்னார். அது கேளாதார் அவமாய் அழிந்தார்; அறமுரைத்தாரோ, துடி துடித்தார்! (புலம்பல்)
அறம் தவறும் அரசர் தொடரவே அசிரிய நாட்டால் பிடி பட்டார். புறம் தள்ளப்படுதலும் நிகழவே, புவியில் சிதறி அடிபட்டார். திறம் இழந்த பத்தரை இனத்தார், தெரியாதின்றும் விடப்பட்டார். நிறம் பாரா நேர்மை இறையனார் நினைக்கவே, தொடப்படுவார்! (2 அரசர்கள் 17)
நல்லிறை வாக்கை நயமாய்ச் சொல்லி, நாட்டை நடத்தினாருமுண்டு. சொல்லிய வாக்கை நடித்துக் காட்டி, செயலில் வடித்தாருமுண்டு. எல்லாக் காலமும் அழியாதிருக்க, எழுதி வைத்தாருமுண்டு. கொல்ல வந்தார், கொள்ளாதிருக்க, குகையில் காத்தாருமுண்டு! (ஏசாயா 20, எரேமியா 13 & எசேக்கியேல் 4) e
தளர்ந்து எலியா தயங்கும் நாளில், தந்தார் இறை ஓர் இளைஞனை. வளர்ந்து எலிசா வரம் பெற்றோங்கி, வழி நடத்தினார் இரு கிளைதனை. மலர்ந்து மயக்கும் பணவேட்கையினை, மாற்றுபவராய் அவர் நின்றார். உலர்ந்து போவாய், ஊனின் விருப்பே; உணர்ந்த மனிதரே வென்றார்! (1 அரசர்கள் 19:9 – 2அரசர்கள்13)
எலியா என்கிற இறைவாக்கினரை, எண்ணிப் பார்க்கும் வேளையில், வலிதாய் இருக்கும் அவரது பற்றை, வழங்க இறை வேண்டுவோம். பலியாக்குகிற வெறியை மட்டும், பற்றிட வேண்டாம் என்கையில், தெளிவாய் தெய்வம் பேசுவதாயும், திருமறை ஆழம் தோண்டுவோம்! (1 அரசர்கள் 17:1 – 2 அரசர்கள் 2:14).
மறம் தழைக்க, மாண்புகள் இழக்க, மனிதம் மறைந்த அந்நாளில், அறம் செழிக்க, அரசரை இழுக்க, அங்கு வந்தார் இறைவாக்கினார். திறம் தெரியா மக்களை ஈர்த்து, தெய்வ வழியில் திருப்புதற்கு, நிறம் மாறா இறைவாக்குரைத்து, நேர்மையையே நோக்கினார்! (1&2 அரசர்கள் )
பின்னாள் வந்த அரசரில் இருந்த பிரிவினை எண்ணம் வலுக்கவே, ஒன்றாய் இருந்த இசரயெல் நாடும், உடைந்து இரண்டாய் ஆனதே. இன்னாள் இதனைக் கண்டு திருந்த, எண்ணா நெஞ்சம் உலுக்கவே, சொன்னேன் இன்று பாட்டு வழியாய்; சொல்லும் சூடாய்ப் போனதே! (2 குறிப்பேடு 10-13)
தொழுவதற்காகக் கட்டிய கோவில், துயருடன் ஒருநாள் அழிந்தாலும், எழுதி வழங்கிய சாலமொன் நூற்கள் இன்றும் இருந்து இறை பாடும். பழுதிலா வாழ்க்கை வாழ விரும்பி, பண்புகள் வளர்க்கும் யாவரும், விழுதுகள் விட்டு, விண்ணில் நிலைக்க, வீணானவற்றைக் கை விடும்! (2 குறிப்பேடு 2-8)
ஒருவனுக்கொருத்தி, ஒருத்திக்கொருவன், உண்மை இறையின் வாக்காகும். பருவம் வருமுன் பாலியல் இச்சையில், படுப்பது இன்றைய நோக்காகும். அருவருப்பாக ஆயிரம் வைப்பது அரசர்கள் செய்கிற தவறாகும். புரிய மறுத்த சாலமொன் வீழ்ச்சியில், புனிதம் கற்பார் எவராகும்? (1 அரசர்கள் 11)