வந்த மகனை வாரி அணைத்தார்.

வாய் மணக்க முத்தி இணைத்தார்.

நிந்தை அகற்ற, புத்துடை கொடுத்தார்.

நேர்மை வழிக்கு, காலணி தொடுத்தார்.

நொந்த அவனுக்கு மோதிரம் இட்டார்;

நீயும் மகனே, உடன்படி போட்டார். 

எந்த தந்தை இப்படி மகிழ்வான்?

எனக் கேட்பான், இறை புகழ்வான்!

(லூக்கா 15:11:32)

திரும்பி வருவான் தன்  மகனென்று,

தேடும் தந்தை காத்திருந்தார்.

இருந்த வீட்டில் நிலை கொள்ளாது,

ஏங்கி எங்கும் பார்த்திருந்தார்.

வருந்தி வருகிற மகனை அணைக்க,

வயது முதிர்விலும் ஓடுகிறார்.

தெரிந்து கொள்வீர் இறையின் அன்பை;

தெய்வம் நம்மைத் தேடுகிறார்!

(லூக்கா 15:11-32).

இரு மைந்தரும் ஒரு தந்தையும் 

இணைந்து வாழ்கையில் இன்பம்.

சிறு மைந்தனோ சொத்தைப் பிரித்து,

சென்று விட்டதால் துன்பம்.

குறு மதியால் அனைத்தையும் இழக்க,

குடல் சுருங்கினான் இளையான்.

வறுமையில்தான் அறிவு பிறக்கும்;

வருத்தும் தீமை களைவான்!

(லூக்கா 15;11-32)

இழப்பின் வலியும் மீட்பின் ஒலியும்,

இயம்பும்  ஆட்டின் உவமை,

உழைக்கும் ஆயர் ஒவ்வொருவருக்கும்,

உணர்த்தப்படுகிற உண்மை.

விளக்கைக் கொளுத்தி வீட்டில் தேடும், 

விழுந்த காசின் உவமை, 

அழைப்பைப் பெற்ற ஊழியர் களத்தில்,

ஆய வேண்டிய உண்மை!

(லூக்கா 15:1-10)

இன்னும் பற்பல உவமைகள் கண்டேன்.

இறையரசு ஒரு முத்தெனக் கண்டேன்.

முன்னோர் காத்த புதையலைக் கண்டேன்.

முழுதும் கொணரும் வலையும் கண்டேன்.

என்னுள் வளர்ந்திடும் புளியும் கண்டேன்.

எழுகிற மா மரம் வெளியிலும் கண்டேன்.

சொன்னால் புரிகிற எளிமையும் கண்டேன்.

சொல்லும் இயேசுவில் தெளிவே கண்டேன்!

(மத்தேயு 13: 1-52)

நல்ல நிலத்தில் நல்விதை விதைத்தும்,

நயவஞ்சகனோ களை விதைப்பான்.

எல்லாம் வளர்கிற காட்சி கண்டால்,

எவன் களையை விட்டு வைப்பான்?

வல்ல இறையோ வளர வைக்கிறார்;

வளமும் நீரும் வாய்க்கச் செய்கிறார்.

நெல்லை அறுவடை செய்யும் நாளில், 

நீசரை முதலில் அறுத்தெரிக்கிறார்!

(மத்தேயு 13:24-30)

விதைக்கிறவன் கதையைக் கேட்டு,

விழுந்தவற்றின் நிலையைக் கண்டு,

பதைக்காமல் மனதில் கொள்வாய்;

பயனளிக்கவே பண்படுவாய்.

கதைக்காகச் சொன்னவை தெரிந்து,

கயமைவழி, கல், முள் துறந்து,

எதைக் கொண்டு நீ விதைப்பாய்?

இறைமொழியே, தென்படுவாய் !

(மத்தேயு 13:1-52)

ஒரு பக்கம் பார்த்து நடக்கிற நமக்கும்,

ஊரின் முழுமை தெரியாது.

மறு பக்கச் செய்தியைக் கேட்கும்போதும்,

மதி மயங்கினால் புரியாது.

வருவதும் வந்ததும் அறிந்த இறைதான்,

வாழ்வின் பொருள் உணர்த்தட்டும்.

பொருளை அறிய, உவமையைக் கற்போம்;

புனிதம் நம்மைப் புணர்த்தட்டும்!

(மத்தேயு 13:1-52)

போற்றும் இயேசு பொழிந்தது எல்லாம்,

புதிரை அவிழ்க்கும் உவமைகள்.

தூற்றும் மனித மடமைகள் போக்கும்,

தூய அறிவுப் புலமைகள்.

ஏற்றம் மிகுந்த இறைவனின் விருப்பை,

எளிமையாக்கும் நிகழ்ச்சிகள்.

மாற்றம் தருமே, மகிழ்ந்து கற்போம்;

மைந்தன் அருட் புகழ்ச்சிகள்!

(மத்தேயு 13: 1-52)

தாழ்மைப் பண்பைத் தவறாய் எண்ணும்,

தமிழக மக்களே வாருங்கள்.

ஏழ்மைக் கோல வடிவில் மின்னும்,

இறையின் மகனைப் பாருங்கள்.

வாழ்வில் உயர்வு காண விரும்பின், 

வரட்டும் நம்முள் தாழ்மை.

ஆழ்கடல் நோக்கித் தாழும் ஆற்றின்,

அமைதிக் கொடையே செழுமை!

(யோவான் 13:1-17)