நிலைவாழ்வு!
என்றும் நிலைத்த இறையருளாலே
என் நிலையாமையில் அஞ்சேனே.
அன்பின் உள் எனை நடத்துவதாலே,
அடியன் அளவில் மிஞ்சேனே.
நின்று நிலைக்கும் அவர் வாக்காலே,
நீடிய வாழ்வில் இணைவேனே.
நன்றாய் நடத்தி நல்லீவருளும்,
நல்லிறையருகில் அணைவேனே!
கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நிலைவாழ்வு!
என்றும் நிலைத்த இறையருளாலே
என் நிலையாமையில் அஞ்சேனே.
அன்பின் உள் எனை நடத்துவதாலே,
அடியன் அளவில் மிஞ்சேனே.
நின்று நிலைக்கும் அவர் வாக்காலே,
நீடிய வாழ்வில் இணைவேனே.
நன்றாய் நடத்தி நல்லீவருளும்,
நல்லிறையருகில் அணைவேனே!
கெர்சோம் செல்லையா.
நிலைத்தவை எவை?
நிலைத்தவை எவையென மனிதர் கேட்டார்.
நெஞ்சில் வைக்க என்னென்பேன்?
குலைத்திட முயன்றவர் மறுக்க மாட்டார்.
கொடுக்கும் இறை அன்பென்பேன்.
மலைத்திடச் செய்யும் மற்றொன்றென்றார்.
மானிடர் மீட்பு தான் என்பேன்.
விலைக்கு இல்லை, விரும்பித் தந்தார்;
விண் வாக்கிலே நான் கண்டேன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
பி.கு. நிலைத்தவை எவை?
1. இறை அன்பு/அருள்
2. இறை அரசு/மீட்பு/வாழ்வு
3. இறை வாக்கு
பிரிவு!
இறை மொழி: யோவான் 16:31-32.
31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.
32. இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.
இறை வழி:
தொட்டு, தொட்டுப் பார்த்தவர்
துணையாக இருந்தவர்,
விட்டு, விட்டுப் போகிறார்.
விண் மகனோ வருந்தவில்லை.
கட்டு கட்டாய் இணைத்தவர்,
கண் மணியாய்க் காப்பவர்,
கெட்டு விழக் கைவிடார்;
கேட்டும் ஏன் திருந்தவில்லை?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இறையிலிருந்து வந்தவர்!
இறையிலிருந்து வந்தவர்!
இறை மொழி: யோவான் 16:29-30.
29. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.
30. நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
இறை வழி:
தந்தையிலிருந்து வந்தார் யாவரும் மைந்தர்.
தவறோ சரியோ, வாழ்கிறார் கண் முன்னர்.
வந்தார் கூட்டத்தில் இயேசு இறை மைந்தர்.
வாக்காய் வாழ்ந்த அவரரோ தூய பொன்னர்.
முந்தைய நிகழ்வை அறிந்தவர் மண் மைந்தர்.
முரண் கருத்தே வரும் அவர் பின்னர்.
பிந்தைய காலம் காண்பவரோ இறை மைந்தர்.
பேரரசிணைக்கும் அவரே, நம் மன்னர்!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
கெர்சோம் செல்லையா.
இறை வழி:
இறை அனுப்ப இயேசு வந்தார்;
இறையன்பை காட்டித் தந்தார்.
நிறைவாக்கும் கொண்டு வந்தார்.
நேர்மையையும் ஊட்டித் தந்தார்.
முறை என்ன? சொல்ல வந்தார்.
முழு அன்பே, மூட்டித் தந்தார்.
குறை மனிதர் கேட்க வந்தார்.
கொண்ட பேறு, நீட்டித் தந்தார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
சாதி ஒன்றேயாம்!
எல்லோரும் எல்லாத் தொழிலும் செய்யவில்லையா?
இறைவேண்டும் வாக்குகளும் பெய்யவில்லையா?
பொல்லார் புகாதபடி வீட்டினையும் காக்கவில்லையா?
புறம் சென்று வாங்கி விற்கவும் நோக்கவில்லையா?
மல்லுக் கட்டாமல், மறைவிலுடல் துடைக்கவில்லையா?
மாற்றாரையும் இதுபோல் இறை படைக்கவில்லையா?
சொல்லுங்கள் இப்போது, நாம் யார் என்ன சாதியென்று.
சொந்தம், ஓர் உறவு, ஒரே சாதி; இதுதான் நன்று!
-கெர்சோம் செல்லையா.
வேண்டுகிறார்!
இறை மொழி : யோவான் 16:26.
வேண்டும் இறைமகன் காட்சி கண்டு,
வேண்டிக் கேட்போர் எத்தனை பேர்?
தூண்டும் அவரது பண்பு கொண்டு,
தூயர் ஆவோர் எத்தனை பேர்?
மாண்டும் மடிந்தும் விழுவோர் கண்டு,
மனதை மீட்போர் எத்தனை பேர்?
தோண்டும் குழியிலும் வேண்டிக் கொண்டு,
தூக்கப் போவோர் எத்தனை பேர்?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
மறைபொருள்!
நல் மொழி:யோவான் 16:25
25. இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
நல்வழி:
புரியாருக்கு இறையின் வாக்கு,
பொழுது போக்கும் புதிர்.
தெரிவாருக்கு, அத்திருவாக்கு,
தெளிவு ஆக்கும் கதிர்.
விரிவாய்க் கேட்க விரும்பாருக்கு,
விண்ணும் மண்ணும் எதிர்.
அறிவாய் நண்பா, இறை நோக்கு;
அகலும் நெஞ்சின் அதிர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இறை வழி:
என்ன கேட்பேன்? எப்படிக் கேட்பேன்?
என்றறியாதே கேட்கிறேன்.
சொன்ன உம் திரு வாக்கும் பிடித்தேன்.
சொற்படி மகிழ்வே கேட்கிறேன்.
சின்ன பிள்ளை அழுவது போல் நான்,
சிணுங்கியவாறே கேட்கிறேன்.
இன்ன விருப்பம் வேறு நான் கேளேன்;
இறையின் மகிழ்வே கேட்கிறேன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.