2. இல்லாமையிலிருந்து எல்லாம்!
ஒன்றுமற்ற நிலையே அன்று;
ஓழுங்கில்லை. ஒளி இல்லை.
என்று கண்டு இறையுரைத்தார்,
நன்கு இதை எண்ணிப் பார்ப்பீர்,
நம்மிலும் தேவை ஒளியே.
இன்று இந்த வேட்கையோடு,
இறையிடம் கேட்பதே நன்று!
(தொடக்க நூல் 1:1-3)

The Truth Will Make You Free
இறைவன் எங்கே?
(எழுதி வழங்குபவர்:
கெர்சோம் செல்லையா)
அங்குமில்லை, இங்குமில்லை,
ஆண்டவர் எனும் இறைவன்;
எங்குமில்லை, எங்குமில்லை,
என்கிறான் அறியா மனிதன்.
உங்களுள்ளே உங்களுள்ளே
ஒளிந்து கடந்திருப்பேன்.
இங்கு எனை ஏற்பவர் யார்?
என்கிறான் நல்லிறைவன்!
இன்று இறை காண்பதற்கு
என்னவெல்லாம் உண்டு?
என்று இங்கு கேட்பவர்க்கு,
நல்ல விடை உண்டு.
நின்று அசைந்தாடுகின்ற
நிலையில்லா இயற்கை
அன்று முதல் சொல்கிறது,
அதுவே படைப்பென்று!
படைப்பு ஒன்று உண்டு எனில்,
படைத்தவர் அவர் எங்கே?
கிடைத்திடும் வரலாறுகளில்
கேட்கிறார் பலர் இங்கே.
துடைத்திடும் கண் காட்சிகளில்,
தெரியாது இருப்பதினால்,
விடைக்கெல்லாம் அடித்தளமாம்
விவிலியம் பார், அன்பே!
தொடரும்……
போதாது! போதாது!
இறை மொழி: யோவான் 21:25.
25. இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்
இறைமகன் செய்த அருஞ்செயல் கண்டு,
எழுதிய நூல்கள் போதாது.
குறைவற அவற்றின் விளக்கம் கொண்டு
கொடுத்த தாள்கள் போதாது.
மறைநூல் கற்கும் மகிழ்வில் நின்று,
மாட்சி சொல்வரும் போதாது.
நிறைவின் வாழ்வு இறைதானென்று,
நேர்வழி செல்வரும் போதாது!
ஆமென்.
எழுதி வழங்கியவர்: கெர்சோம் செல்லையா. சென்னை-99.
கண்டவன் சான்று!
இறை மொழி: யோவான் 21:24.
24. அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
அன்று கண்ட அடியார் யோவான்
அதனைச் சான்றாய் எழுதினார்.
நன்கு கண்ட காட்சியைத்தான்,
நம்பி மெய்வழி ஒழுகினார்.
பின்பு நமக்கு எழுதும் முன்னர்
பெரிய அன்பிலே முழுகினார்.
இன்று இதனை வாசித்தறிவோர்,
ஏற்பின் தம் கறை கழுவுவார்!
ஆமென்.
இறை விருப்பு!
இறை மொழி: யோவான் 21: 20-23.
20. பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.
21. அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
22. அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.
இறை வழி:
பேரிடி முழங்க இறைவாக்கீந்து
பேர் புகழ் பெருக்க விழைகையில்,
ஓரடி மட்டும் என் முன் சென்று,
ஒளி வீசும் என் கிறித்துவே,
ஆறடி மண்ணுள் அடங்கு முன்பு,
அடியன் கனி தரும் விளைச்சலில்,
சீரடி வைத்துச் சிறியருக்குதவ,
சிந்தை ஈவாய் கிறித்துவே!
ஆமென்.
எந்த நிலை என்றாலும்!
இறை மொழி: யோவான் 21:18-19.
18. நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19. இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.
இறை வழி:
எந்நிலை என்பதில் இல்லை;
இயேசுவே எனக்கு எல்லை.
அந்நிலை நோக்கிச் செல்வேன்;
அதுவே வாழ்வெனச் சொல்வேன்.
இந்நிலை அடைந்த முன்னோர்,
இவ்வழி நடந்து சொன்னோர்,
செந்நிலைக் கென்றே அழைத்தார்;
சிலுவை சுமந்துயிர் பிழைத்தார்!
ஆமென்.
மும்முறை கேட்டார்!
இறை மொழி : யோவான் 21:15-17.
இறை வழி:
தவற்றை உணர்ந்த பேதுரு அடிகள்,
தயங்கி நொந்து நிற்கையில்,
அவற்றை அறிந்த இறைப்பேரருள்,
அவரை விடாது அணைக்கிறார்
.எவற்றை நாமும் அடிப்படைகள்
என்று எண்ணிக் கற்கையில்,
இவற்றை நமக்குச் சொல்லித் தந்து,
இறையன்பாலே இணைக்கிறார்!
ஆமென்.
கேட்டு வந்தவர் கொடுக்கிறார்!
இறை மொழி: யோவான் 21: 12-14.
12. இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
13. அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
14. இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம்.
இறை வழி:
கேட்டு வந்தவர் கொடுத்திடுவதும்,
கேளார் மீட்பு எடுத்தடைவதும்
ஆட்டுவிக்கும் ஆண்டவர் அருள்;
அருஞ் செயலில் மகிழுவோம்.
மீட்டு நமக்கும் பணி தருவதும்,
மீளார் அறிய நல்வாக்கருள்வதும்,
தீட்டு கழிக்கும் இறையின் செயல்;
தெய்வ மகனை, புகழுவோம்!
ஆமென்.
உணவாம் ஆண்டவர்!
இறை மொழி : யோவான் 21:9-11.
9. அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள்.
10. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
இறை வழி:
உழைத்துக் கிடைக்கும் உணவும் உண்டு.
உண்ண உண்ண, இன்பம்.
பிழைத்துக் கிடைக்கும் உணவும் உண்டு;
பின்னால் வருமே துன்பம்.
அழைத்தவர் தருகிற உணவும் உண்டு.
அதுதான் மா பெரும் இன்பம்.
தழைக்கச் செய்யும் இறையும் உண்டு;
தரார் நமக்குத் துன்பம்!
ஆமென்.
உணவு தரும் ஆயர்!
இறைமொழி: 21:7-8.
7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
8. மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டுவந்தார்கள்.
இறை வழி:
வசிக்க இடமின்றி வாழ்ந்தவர் அன்று,
வழி தவறியவரைத் தேடினார்.
புசிக்க ஏதேனும் உண்டோ வென்று,
புரியா அடியரையும் நாடினார்.
ருசிக்க ஒன்றும் இல்லார் கண்டு,
தெய்வமும் பசியிலே வாடினார்.
கசக்குமுண்மை, கண்டவர் உண்டு;
காய்ந்தவர் உண்டிடக் கூடினார்!
ஆமென்.