இறைவாக்கினர் போன்றே…

இறைவாக்கினர் போன்றே


இறைவாக்கினர் போன்று….

நற்செய்தி மாலை:மாற்கு 6:4-6.

“இயேசு அவர்களிடம், ‘ சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ‘ என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.”
நற்செய்தி மலர்:
உரைப்பதும்  கேளார், உணர்வையும் ஆளார்.
உள்ளூர் என்றே ஒதுக்கியும் தள்வார்.
குரைத்திடும் நாயின் நன்றியும் இழப்பார்;
குறைகள் கூறி தாமும் விழுவார்.
சிரைத்திட்ட தலையில் நோவை ஏற்று,
செய்தி கொடுத்த தூதுவர் போன்று,
நரைத்திட்ட நாமும் பழியினைச் சுமப்போம்;
நம்பிக்கையை வழியென அமைப்போம்!
ஆமென்.

பார் முழுதும் புகழ்ந்தாலும்…..


​பார் முழுதும் புகழ்ந்தாலும்….

நற்செய்தி மாலை: மாற்கு 6:1-3.

“அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர். ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ‘ இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.”
நற்செய்தி மலர்:
பார் முழுதும் புகழ்ந்தாலும்,
பாராட்டி மகிழ்ந்தாலும்,
ஊர் மனிதர் ஏற்பதில்லை;
உண்மையினைப் பார்ப்பதில்லை.
கூர் மழுங்கா பட்டயமாம்
கிறித்தரசன் வாக்காலே, 
ஏர் உழுத நெஞ்சமதில் 
ஏற்பவரோ தோற்பதில்லை!
ஆமென்.

தற்புகழ் வெறுக்குந் தன்மை!

தற்புகழ் வெறுக்குந் தன்மை!
நற்செய்தி மாலை: மாற்கு 5:40-43.
“அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், ‘ தலித்தா கூம் ‘ என்றார். அதற்கு, ‘ சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு ‘ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்மறந்து நின்றார்கள். ‘ இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது ‘ என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.”
நற்செய்தி மலர்:
நற்பணி செய்யும் ஆண்டவரின்,
நயந்த பண்பினைப் பார்ப்போமா?
தற்புகழ் எதுவும் கொள்ளாது,
தடுக்குந் தன்மையைச் சேர்ப்போமா?
பற்பல படங்கள் காட்டும் நாம்,
பணிந்து இறையிடம் கற்போமா?
அற்பராய் நம்மை மாற்றாது,
ஆண்டவர் போல நிற்போமா?
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..

முகநூற் படங்களைப் பார்க்கும்போது…..

பொய்யான வாழ்வினிலே

புகைப்படக் கண்காட்சி.
பொருத்தம் இல்லாத
பிசாசின் அரசாட்சி.
மெய்யான தாழ்மையிலே,
முகநூல் பாவிப்போம்.
மேன்மேலும் உயர்ந்திடுமே
மேலோன் அருளாட்சி!
-கெர்சோம் செல்லையா.

உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!

உங்கள் வாழ்வில், ஒளி பரவ வாழ்த்துகள்!
——————————————————-

இறையாய் இருப்போன் ஒளிர்கின்றான்;
இருளை எங்கும் ஒழிக்கின்றான்.
நிறைவாய் வெளிச்சம் பகிர்வதற்கு,
நமையும் விளக்காய் அழைக்கின்றான்.
பறையாய் வெடிக்கும் கரிமருந்தால்,
பறவையும் அஞ்சுதல் காண்கின்றான்.
சிறையாய்ப் பிடிக்கும் தீச்செயலைச்
சீக்கிரம் கைவிடக் கேட்கின்றான்!
-கெர்சோம் செல்லையா.

நற்செய்தி மாலை's photo.

இறந்தவரை எழுப்பிவிடும்….

நற்செய்தி மாலை:மாற்கு 5:35-39.
“அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், ‘ உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்? ‘ என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், ‘ அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர் ‘ என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, ‘ ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
இறந்தவரை எழுப்பிவிடும் வலுமிக்க,
இறைமகனார் நெஞ்சுள்ளே இருப்பதனால்,
மறந்தவர்கள் கொண்டுவரும் துன்புகளும்,
மண்ணாகி மறைந்துவிடும்; நம்பி வாரிர்.
சிறந்தவர்கள் எனும் பதவி உயர்வுபெற,
சீரான பற்றுறுதி வேண்டுவதால்,
திறனின்றி அழுவதனை நிறுத்திவிட்டு,
தெய்வத்தின் காலடியில் அமர வாரீர்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

பற்றுறுதி சற்றுமற்ற …

பற்றுறுதி சற்றுமற்ற …

 நற்செய்தி மாலை: மாற்கு 5:30-34.

“உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ‘ என் மேலுடையைத் தொட்டவர் யார்? ‘ என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ‘ இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘ என்னைத் தொட்டவர் யார்? ‘ என்கிறீரே! ‘ என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், ‘ மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
பற்றுறுதி சற்றுமற்ற
பாவியனாய் இருந்தும்,
மற்றவர்போல் துரத்தாது,
மகிழ்ந்தணைத்தார், புகழ்வேன்.
குற்றமுள்ள நெஞ்சமுடன்
குனிந்து தலை இருந்தும்,
முற்றிலுமாய் மன்னித்தார்;
முழு அன்பைத் தொழுவேன்!
ஆமென்.

உம் உடை தொடுவேன்!


​உம் உடை தொடுவேன்…

நற்செய்தி மாலை: மாற்கு 5:25-29.

“அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், ‘ நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன் ‘ என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.”
நற்செய்தி மலர்:
உம் உடை தொடுவேன்;
உடல் நலம் பெறுவேன்.
உம் கை பிடிப்பேன்;
உடனடி பிழைப்பேன்.
தம் உடை இழந்தோர் 
தவிப்பதும் அறிவேன்.
தருவீர் மீட்பை;
அவர் பெற  உழைப்பேன்!
ஆமென்.

உம் கையாலே தொட்டால் போதும்!

உம்கையாலே தொட்டால் போதும்!

நற்செய்தி மாலை: மாற்கு 5:21-24

“இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.”

நற்செய்தி மலர்:

எம் கையாலே எது செய்தாலும்,

எமக்கு வருதல் நோவு ஆகும்.

உம் கையாலே தொட்டால் போதும்,

ஒவ்வொருநோயும், ஓடிப் போகும்.

இம்மாப் பெரிய நோய் என்றாலும்

இலாது போகும், மருந்தைக் கூறும்.

நம்பாமலே நடப்போர்களுக்கும்,

நற்செய்தியாம் விருந்தைத் தாரும்!

ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

கடைநிலையோரும் பயன்பெறவே…..

​ கடைநிலையோரும் பயன்பெறவே….

நற்செய்தி மாலை: மாற்கு 5:18-20.

“அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.”

நற்செய்தி மலர்:

கற்ற அறிவும் பெற்ற மீட்பும்

கடைநிலையோர்க்கும் பயன்தரவே,

உற்று நோக்கும், ஊரும் உறவும்,

உயர்ந்து ஏற, இரங்கிடுமே.

குற்ற மில்லா வாழ்வு வாழும்

கிறித்து அன்பில் அவர் வரவே,

பற்று கொண்டு தொண்டு ஆற்றும்;

பரிசு மீட்பு இறங்கிடுமே!

ஆமென்.