இறைவனின் படைப்பு பேரழகு;
இதனை வளர்க்க நீ பழகு!
அறைக்கு வெளியே வந்தமர்ந்து,
அதனில் மகிழ நீ முந்து!
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
இறைவனின் படைப்பு பேரழகு;
இதனை வளர்க்க நீ பழகு!
அறைக்கு வெளியே வந்தமர்ந்து,
அதனில் மகிழ நீ முந்து!
-கெர்சோம் செல்லையா.

கனவிலும் உண்மை வெளிப்படுமே!
இறைவாக்கு: மத்தேயு 27:19.
“பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, ‘ அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன் ‘ என்று கூறினார்.”
இறைவாழ்வு:
கனவிலும் உண்மை வெளிப்படுதே;
கடவுளின் பிள்ளையர் கணித்திடவே.
இன, மொழிப் பிரிவுகள் இல்லாமல்
யாவரும் புரிந்திட அருள் வருதே.
நினைவினில் இதனை உணர்பவர் யார்?
நேர்மையைத் தூக்கிப் பிடிப்பவர் யார்?
வினை பொறுத்தருளும் விண்ணரசின்
விருப்பங்கூட வேண்டும் பார்!
ஆமென்.

யாரை விடுவிப்பீர்?
அருள்வாக்கு: மத்தேயு 27:17-18.
“மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், ‘நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?’ என்று கேட்டான். ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.”
திருவாழ்வு:
இருவரில் ஒருவர் விடுதலை என்றால்,
எவரை விடுதலை செய்வாரோ?
ஒருவர் செல்வர், மற்றவர் ஏழை,
யார்தான் வெளியில் வருவாரோ?
திருடரும், பொய்யரும் தீர்ப்பு அளித்தால்,
தெய்வமும் விடுதலை ஆவாரோ?
இருமுறையல்ல, பலமுறை எண்ணி,
ஏழைக்கு நீதி தாரீரோ?
ஆமென்.

பரபா என்று இன்னொரு இயேசு!
இறைவாக்கு: மத்தேயு 27:15-16.
இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்:
“மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான்.”
இனியவாழ்வு:
பரபா என்றொரு இயேசிருந்தான்;
பாழாய் வாழ்க்கை வாழ்ந்திருந்தான்.
அரவாய் நஞ்சை அவன் வைத்து,
அடிக்கடி கொள்ளை கொலைசெய்தான்.
இரவாய் பகலாய் இவன் செய்த
இரக்கம் இல்லாச் செயல்களினால்,
திறவாதிருந்த சிறைக்கதவு,
திடுமெனத் திறக்க, பிடிபட்டான்!
ஆமென்.

சுவையான வாக்கருள்வீர்!
இறைவாக்கு: மத்தேயு 27:12-14.
“மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம், ‘ உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா? ‘ என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.”
இறைவாழ்வு:
பொய்க் குற்றம் சாட்டுகையில்
பொறுமையுடன் நின்றீர்.
பொறுப்பாளர் நிலைகண்டு,
பேசாமல் வென்றீர்.
செய்க் குற்றம் சூழ்வதனால்
சொல்லிழக்கும் என்னில்
சுவையான வாக்கருளி,
சொந்தத்தை மீட்பீர்!
ஆமென்.

நல்வாழ்வு:
நாட்டைப் பிடித்து ஆட்டிப் படைக்கும்,
நன்மை யற்றோர் அரசரெனில்,
கேட்டை ஒழித்து, கூட்டை ஆளும்
கிறித்து நமக்கு வேந்தனன்றோ?
கோட்டை கொத்தளம் ஏறி இறங்கி,
கிறித்து அரசரைத் தேடாதீர்.
ஏட்டில் இறைவன் எழுதிய உண்மை
என்றும் ஆள இடங்கொடுப்பீர்!
ஆமென்.

இறைவாக்கு: மத்தேயு 27: 9-10.
“இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ‘ என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.”
இறைவாழ்வு;
நிலை குலைந்த மனிதரை மீட்டு,
நிம்மதி வழங்க வருபவரை
விலை மதிப்பு அறியாதவரோ
வெறுங்காசுகளில் அளக்கின்றார்.
இலை மறைவாய் இதை உரைக்கும்
எரேமி நூலை வாசிப்போர்,
குலை நடுங்கும் கொடுமையைக் கண்டு,
கிறித்துபின்னால் அழைக்கின்றார்!
ஆமென்.


நல்வாக்கு: மத்தேயு 27:3-5.
யூதாசின் தற்கொலை:
“அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, ‘ பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ‘ என்றான். அதற்கு அவர்கள், ‘ அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ‘ என்றார்கள். அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.”
நல்வாழ்வு:
வருந்துதல் மட்டும் போதாது;
வாழ்வின் கறைகள் போகாது.
திருந்துதல் உள்ளில் இல்லாது,
தெய்வம் தொழுதல் செல்லாது!
இருந்து நன்மை சேர்ப்பதற்கு,
என் செய்வேன் எனக் கேட்பவர்க்கு,
விருந்து போன்றதே இறைவாக்கு;
வேண்டாம் தீய வழிப்போக்கு!
ஆமென்.

தொடுவானத்தைத் தொடுவதற்கு……
விண்ணும் கடலும் தொடுவதைக் காண
விரைந்து அலைக்குள் நீந்துகிறேன்.
கண்ணில் காணும் வானமுந் தொடர,
கவலையின் நெஞ்சை ஏந்துகிறேன்.
மண்ணின் மனிதர் தருந்துயர் புதைக்க,
மறதிக் குழியைத் தோண்டுகிறேன்.
எண்ணிப் பார்க்க விரும்புவ தொன்றே;
இறையின் அருள்தான், வேண்டுகிறேன்!
ஆமென்.
