இவன்தான் தமிழன்!

இவன்தான் தமிழன்!
திரை கடல் ஓடி திரவியம் சேர்த்தான்;
கரை தெரியாது கடலினைப் பார்த்தான்.
துரைபோல் வந்தவர் காலில் விழுந்தான்;
இரையாய் இவனே தன்னை இழந்தான்!
-கெர்சோம் செல்லையா.

South Asia expert John Guy says that South India traders in the first millennium were driven by an appetite for gold.
SCROLL.IN

குற்றம் கண்டு பிடிப்பதே தொழில்!

​படைத்தவர் வாக்கு முடிக்கிறது!

நற்செய்தி மாலை: மாற்கு 3: 1-2
“அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர்.”
நற்செய்தி மலர்:
குற்றம் குறையைக் கண்டுபிடிக்கக்
கூட்டம் ஓன்று துடிக்கிறது.
மற்றோர் செய்யும் நன்மையைக்கூட 
மடமை என்று கடிக்கிறது!
வெற்றுவேட்டு வெடிப்பதைக் காட்ட 
வேலையற்றோரைப் பிடிக்கிறது.
பற்றினால்தான் நன்மை பிறக்கும்;
படைத்தவர் வாக்கு முடிக்கிறது!
ஆமென்.

எல்லா நாளும் இறைவனின் நாளே!

 நற்செய்தி மாலை: மாற்கு 2:27-28.
“மேலும் அவர் அவர்களை நோக்கி, ‘ ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே ‘என்றார்.”
நற்செய்தி மலர்:
எல்லா நாளும் இறைவனின் நாளே;
என்றும் எங்கும் பணிவோமே.
இல்லா ஏழைக்கிரங்கல்தானே,
இனியவர் ஊழியம் அணிவோமே.
செல்லாக் காசாய் கிடந்ததுபோதும்;
செய்தியை நன்மையில் சொல்வோமே.
பொல்லார் கூட வந்து கேட்பார்;
பொறுமையில் உலகை வெல்வோமே!
ஆமென்.

மாற்றுவீர் சட்டங்களை!

​நற்செய்தி மாலை: 2:25-26.

அதற்கு அவர் அவர்களிடம், ‘ தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
ஒழுங்குபடுத்தும் சட்டம் இன்று,
உயிரைக் காக்க வெறுக்குமெனில், 
விழுங்கி அதனை ஏப்பம் விடுவோம்;
வேறொரு சட்டம் பிறப்பித்து!
அழுது கதறும்குழந்தையின் ஒலிக்கு,
அன்னையின் காது மறுக்குமெனில்,
எழுந்து அவளை அடக்கம் செய்வோம்;
இறந்துபோனாள் அவள் என்று!
ஆமென்.

வரலாற்றுப் பிழை!


​சேரனும் பாண்டியும் ஆண்ட அந்நாட்டை,
கேரளம் என்று மாற்றி விட்டார்கள்.
வேருடன் மரத்தை வெட்டிடும் கோடரி
விளைநிலம் அமைத்த கதை புனைந்தார்கள்.
பாரினை ஆண்ட பழம் பெருங்குடிகள்
படைவலி இழந்து  தாழ்ந்துவிட்டார்கள்.
வாருங்கள் அருமை நண்பராய் நீங்கள்,
வரலாற்றின் பிழை திருத்திவிடுங்கள்!

இவரது வெறியை மாற்றீரோ?


​இவரது வெறியை மாற்றீரோ?

நற்செய்தி மாலை: மாற்கு: 2:23-24.

“ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ‘ பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
புல்லை மாடு மேய்ந்ததனாலே,
புனிதம் போனது எனலாமோ?
நெல்லை ஓய்வில் கொய்ததனாலே,
நேர்மையில் விழுந்தார் எனலாமோ?
கல்லாதவரும் சரி என்றுரையார்;
கடவுளின் மக்கள் அறியீரோ?
எல்லாச் செயலும் காணும் இறையே, 
இவரது வெறியை மாற்றீரோ?
ஆமென்.

வேண்டாம் பழமை!


​பழையதும் புதியதும்!

நற்செய்தி மாலை: மாற்கு 2:21-22.

“எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப்போடுவதில்லை. அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச் செய்யும்; மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கே ஏற்றது ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
கிழிந்த பழைய ஆடையைத் தைக்க  
கோடித் துணியை ஒட்டுகிறேன்.
பிழிந்த சாற்றை ஊற்றி வைக்க,
பழைய குவளையில் கொட்டுகிறேன்.
இழிந்த வாழ்க்கைத் தவற்றைக் கொண்டு 
இந்த நாளைக் கட்டுகிறேன்.
வழிந்த அருளால் புதுமையாக்கும்;
வேண்டாம் பழமை, வெட்டுகிறேன்!
ஆமென்.

விருந்தின் மகிழ்வே கிறித்தவ வாழ்வு!

நற்செய்தி மாலை: மாற்கு 2:18-20.

“யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பு இருந்துவந்தனர். சிலர் இயேசுவிடம், ‘ யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை? ‘ என்று கேட்டனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ‘ மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் நோன்பு இருக்கமுடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது.ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”
நற்செய்தி மலர்:
விருந்தின் மகிழ்வாம் கிறித்தவ வாழ்க்கை;
வேறு விதமாய் விளக்காதீர்.
மருந்து விழுங்கிய மந்தியைப் போன்று,
மயங்கி வாழ்வையும் இழக்காதீர்.
திருந்த வைக்கும் கிறித்துவின் வாக்கைத் 
தெரியா தெதுவும் உரைக்காதீர்.
இருந்து அழிக்கும் அழுக்கை நீக்கும்,
இறைவனின் அருளையும் மறக்காதீர்.
ஆமென்.

நோயுற்றவருக்கே மருத்துவர்!

நோயுற்றவருக்கே மருத்துவர்!

நற்செய்தி மாலை: மாற்கு 2:15-17. “பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ‘ இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்? ‘ என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ‘ நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ‘ என்றார்.”

நற்செய்தி மாலை:

அணியணியாய் மருத்துவர்கள்

ஆயிரம்பேர் வந்தாலும்,

பிணியென்று தெரிந்தால்தான்

பேதையர்கள் திரும்பிடுவார்.

மணியொலியாய் இறைவாக்கு

மன்றங்களில் ஒலித்தாலும்,

பணிவுள்ள நெஞ்சினைத்தான்

படைத்தவர் விரும்பிடுவார்!

ஆமென்.