மானிடனாக வாழ்ந்திட்ட நாளில்,

மைந்தனும் அறியா அந்நாளை.

தானறிந்ததுபோல் ஒருவர் கூறின்,

தாங்கி அவரைச் சுமக்காதீர்.

ஏனிந்த பொய்கள்? ஏய்க்கும் மக்கள்?

என்கிற அறிவுதனைப் பெற்று,

வானின் மைந்தன் வருகிற வரையில்,

வழி தவறா விழி இமைக்காதீர்!

(மத்தேயு 24).

ஆளும் ஆண்டவர் ஆண்டிட வருவார்;

ஆயத்தமாகிட நாம் அறிவோம்.

வாழும் புனிதரும் எடுக்கப்படுவார்;

வருவது என்றென நாம் அறியோம்.

நாளும் அறியோம், நாழிகை அறியோம்;

நம்பும் வாக்கையே நாம் அறிவோம்.

மாளும் மனிதரை மீட்க உழைப்போம்;

மறுப்பவராயின், நாம் அறியோம்!

(மாற்கு 13)

ஏரோது அரசன் கட்டிய கோயில்,

எடுத்துக் காட்டிய அழகு கண்டு,

ஈராறு அடியரும் வாய் பிளந்தார்;

இப்படி மனிதர் இன்றுமுண்டு. 

தேறாது போகும் எருசலேம் கோயில்;

தெரிந்துரைத்த இயேசு கண்டு,

வாராதிருப்பார் வாழ்விழப்பார்;

வாக்கை நம்பு, மீட்பு உண்டு!

(மத்தேயு 24:1-2)

பசுமை இலைகள் மேல் வரு முன்பு,

பழங்கள் கொடுப்பது அத்தி மரம்.

புசிக்க ஒன்று கிடைக்குமோ என்று,

போனார் ஆண்டவர் பசி நேரம்.

அசையும் இலைகள் அடியில் சென்று,

ஆண்டவர் கேட்டார் கனி எங்கே?

இசைபட வாழக் கொடுத்தல் நன்று.

ஏய்த்தவர் பட்டார், பார்  அங்கே!

(மாற்கு 11:11-26)

கோயிலில் நுழைந்த கிறித்துவின் கண்கள் 

கொடியரின் செயலால் வருந்தினவே.

வாயிலைக் காக்கும் காவலர் போன்று, 

வழங்கிய கசையடி திருத்திடவே.

ஆயிரமாய் இன்று பிரிந்து கிடைக்கும், 

அவைகளின் நிலையும் தெரிந்ததுவே.

பாயிரம் பாடி இறையைக் கேட்போம்; 

பழித்திட அன்று, விழி திறந்திடவே!

(மத்தேயு 21:12-17)

எருசலேம் நகரில் இயேசு வருகையில்,

எளியர் ஏழையர் வரவேற்றார்.

பெருந்திரள் சிறுவர் பெரியோர் அவரில்,

புகழும் வாழ்த்தொலி இறை கேட்டார்.

அருவருப்பென்கிற கழுதை மேலமர்ந்து,

அமைதியினாண்டவர் வலம் வந்தார்.

இறையரசமைக்கச் சண்டையிடாதீர்;

இயேசு தாழ்மையில் நலம் தந்தார்!

(லூக்கா 19:28-38)

கொல்வார் என்று தெரிந்தே இயேசு,

கொல்கதா நகருக்கு விரைகிறார்.

வல்லிறை வகுத்த திட்டம் முடித்து,

வாழ்வு கொடுத்திட வருகிறார்.

செல்கிற ஊர்களில் அருஞ்செயல் செய்து,

சேர்ப்பின் செய்தி தருகிறார். 

இல்லார் பெற்றார், இயேசுவில் உற்றார்;

இங்குளோர் ஏற்பின் பெறுகிறார்!

(யோவான் 11:1-10)

தம்மடியார்கள் தம் நிலை உணர,

தவறா இயேசு எச்சரித்தார்.

மும்முறை தந்த முதிர்ந்த வாக்கை, 

முடிவில் நமக்கும் அச்சடித்தார்.

இம்மறை நூலைக் கல்லாதவர்தான்,

ஏற்படும் ஐயத்தில் நச்சரிப்பார்.

நம்மிடமுள்ள திருமறை ஆய்வோம்;

நன்மையின் இயேசு மெச்சிடுவார்!

(மத்தேயு 16:21; 17:22-23 & 20;17-19;

மாற்கு 8:31; 9:30-32 & 10:33-34;

லூக்கா 9:21-22; 9:44 & 18:31-34)

விலைக்கு போவார் தம்முடன் இருப்பதை,

விண்மகன் இயேசு அறியலையா?

தலைக்கு வருகிற ஏதம் உணர்கிற,

தகுந்த அறிவும் பெறவிலையா?

மலைத்து நின்றிட்ட அவரது அடியரும்,

மாறும் சூழலைப் புரியலையா?

நிலைத்து நிற்கும் திருமறை கற்போம்; 

நேயன் முன்னுரை தெரியலையா?

(மத்தேயு 16)

இன்றைய தலைவர்கள் சூழ்ச்சிகள் புரிந்து,
ஏய்த்தலை இறைப்பணி என்பதுபோல்,
அன்றைய கயவர்கள் காசுகள் சொரிந்து,
அடியரில் ஒருவனை வாங்கிட்டார்.
நன்றியை மறந்து, நல் வழி துறந்து,
நாமும் பணத்தின் பின் சென்றால்,
பன்றிகள் கூட்டம் என்றே அழைப்பார்;
பரிவில் இயேசு ஏங்கிட்டார்!

(லூக்கா 22:1-6)