யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?

The Truth Will Make You Free
யாரைத் தேடுகிறோம்? என்ன தேடுகிறோம்?
நலம் தரும் இயேசு!
தீயோன் ஓடுதல் பார்!
நற்செய்தி மாலை: மாற்கு: 1:23-24.
“அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, ‘ நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ‘ என்று கத்தியது”.
நற்செய்தி மலர்:
தீயோன் அறிவான், திருடனும் அறிவான்,
தெய்வ மைந்தன் இயேசென்று.
நீ யார் என்று நம்மவர் கேட்கும்,
நிலையை இங்கு பாரின்று!
பேயோன் பிடியில் இருப்பவர் மீள,
பிழை உணர்வாய், இது நன்று.
சேயாய் நாமும் வாழ்ந்தால்தானே,
சிறக்கும் தெய்வப் பணி வென்று!
ஆமென்.
நற்செய்தி மாலை: மாற்கு 1:21-22.
எதை விட்டோம், இயேசுவிற்காக?
நற்செய்தி மாலை: மாற்கு: 1:19-20.
“பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.”
நற்செய்தி மலர்:
தந்தையை விட்டார், தம் பணி விட்டார்;
தகப்பன் வீட்டுச் செல்வமும் விட்டார்.
மைந்தனாய் இறைவன் வந்து அழைத்தார்;
மண்ணின் பெருமை யாவும் விட்டார்.
அந்த நாள் மீனவர் அப்படியிருந்தார்.
அதனால் அவரும் அடியார் ஆனார்.
இந்த நாள் இதனை எடுத்துரைப்பார்,
எதனை விட்டார்? இறைவன் அறிவார்!
ஆமென்.
முதல் சீடர்களை அழைத்தல்:
“அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, ‘ என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ‘ என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.”
நற்செய்தி மலர்:
தூய்மை அற்றோர் எனக் கருதித்
தூரம் விலகிய மீனவரை
வாய்மை வேந்தன் விளிக்கின்றார்;
வாழ்வுப் பணியை அளிக்கின்றார்.
தாய்மை அன்பினும் மேலான,
தன்மை நிறைந்த இறைப்பணியால்,
மகிழ்ந்து பிடிக்க அழைக்கின்றார்!
ஆமென்.