கனி!

கனி!

இறைவாக்கு: யோவான் 15:1-3.

  1. நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
  2. என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
  3. நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

இறை வாழ்வு:

எங்கே ஒருவர் என்னிடம் வந்து,
யானும் கிறித்தவனே என்றால்,
அங்கே அவரது செயலில் கிறித்து,
எங்கே என்று நான் பார்ப்பேன்.
இங்கே இப்படி கிறித்துவின் அன்பு,
இவரால் உதவி செய்யுமென்றால்,
பங்கம் இல்லா பழச் சாறென்று,
பாசத்தோடுதான் சேர்ப்பேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பேச்சைக் குறைப்போம்!

பேச்சைக் குறைப்போம்!
இறை வாக்கு: யோவான் 14:29-31

  1. இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
  2. இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
  3. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

இறை வாழ்வு:

நன்முறை எதுவென அறியாருக்கு,
நாளும் நாளும் சொல்கிறேன்.
வன்முறை அல்ல, வாள் வழியல்ல,
வாழும் அன்பால் சொல்கிறேன்.
என்னுரை கேட்க விரும்பருக்கு,
என் வாய் மூடிச் செல்கிறேன்.
இன்னுரை என்பது, இயேசு மொழிவது;
ஏற்பவர் தேடிச் செல்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

தன்னிலும் பெரியவர்!

தன்னிலும் பெரியவர்!

இறைவாக்கு:யோவான் 14: 28.

  1. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

இறை வாழ்வு:

இன்னில மக்களை மீட்பதற்கென்று,
இரங்கி ஏழையாய் வந்தவரே,
தன்னிலும் பெரியவர் தந்தையென்று,
தரணி வாழ்விலே சொன்னவரே,
என்னிலையாயினும் என்னிலுமின்று,
இருந்திட ஆவியார் தந்தவரே,
முன்னிலை மறவா மகனென இன்று,
முன்னே நின்றேன் என்னவரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

வேண்டாம் வெறி!

வேண்டாம் வெறி!

எரிந்த மக்கள், கோயில், வீடு,

ஏதோ மணிப்பூர் காட்டிலாம்.

விரிந்த பரந்த எங்கள் நாடு

விரும்பார், இப்படிக் காட்டலாம்.

தெரிந்த சிலரின் இவ்வித வாக்கு,

தீயை மீண்டும் கூட்டலாம்.

புரிந்த நண்பா, ஒளியே நோக்கு;

போகும் வெறி, கூட்டிலாம்!.

வருந்தி மன்றாடும்,

கெர்சோம் செல்லையா.

அமைதி!

அமைதி தாரும் ஆண்டவரே!

இறைவாக்கு: யோவான் 14: 27.

  1. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.

இறை வாழ்வு:

எழுதும் எனக்கும், அமைதி தாரும்.
இங்கே தருபவர் எவருமில்லை,
அழுதும் அரற்றும், அகமும் பாரும்.
அப்படிக் கேட்பது தவறுமில்லை.
தொழுதும் பணிந்தும், தேய்ந்து மாறும்,
தெய்வ பிள்ளைக்குக் கதியுமில்லை.
விழுவது என்றும், தீங்கெனக் கூறும்;
விண்ணை மிஞ்சும் மதியுமில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

துணையாளர்!

துணையாளர்!

இறைவாக்கு: யோவான் 14:26.

  1. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

இறைவாழ்வு:

இணையாய் வந்த இல்லாள் கூட,
இறுதிவரைக்கும் இருப்பாளோ?
பிணையாய் நின்ற பிள்ளையுங்கூட
பிரியாதிருந்து, பொறுப்பானோ?
அணையா ஒளியாய் அன்பு காட்ட,
ஆண்டவர் அமைத்த வழி ஏதோ?
துணையாயிருந்து, தூதாய் மாற்றும்,
தூய ஆவியார் இதோ, இதோ!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அன்பு!

அன்பு!

இறை வாக்கு: யோவான் 14: 23-25.

  1. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
  2. என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.
  3. நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

இறை வாழ்வு;

ஆட்டும் தலையால் ஆமென் என்பார்;
ஆயினும் அவரோ கீழ்ப்படியார்.
கேட்டும் நடவார் கிறித்தவர் என்பார்;
கிறித்து எப்படி வாழ்த்திடுவார்?
வாட்டும் துன்பம் போக்க நினைப்பார்,
வந்து கைகள் நீட்டுகிறார்.
ஓட்டும் இறையும் உள்ளில் வருவார்;

உணர்த்தி, அன்பு கூட்டுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஒன்றிலிருந்து!

ஒன்றிலிருந்து தொடங்குவீர் !

இறை வாக்கு: யோவான் 14:22.

  1. ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.

இறை வாழ்வு:

ஓரொளிக் கதிர் ஆடியில் விழுந்தால்
ஊரின் இருள் மறைந்துபோகும்.
பேரொளியுள்ள ஒருசிலர் எழுந்தால்
பிறரது வாழ்வும் சிறந்ததாகும்.
யாரொளி வீசத் துணிவாரென்றால்,
இறையின் ஆவி உடையோராகும்.
நீரிதை உணர்ந்து பணிவீரென்றால்,
நிலை வாழ்வுறுதி அடைவீராகும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அன்பு!

அன்பு!

இறைவாக்கு: யோவான் 14:21.

  1. என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

இறை வாழ்வு:

விரும்பும் இறையின் விருப்பம் என்ன?
விண் மகன் வாக்கு கற்போமா?
திரும்பும் நெஞ்சின் தீர்ப்பும் என்ன?
தெய்வத்துடனே நிற்போமா?
துரும்பும் கூட துணையாய் உதவ,
தெரிந்திருப்பதை அறிவோமா?
அரும்பும் மொட்டு அழகாய் மலர,
அன்பை நாமும் தெரிவோமா?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

தந்தையும் மைந்தனும்!

தந்தையும் மைந்தனும்!

இறை வாக்கு: யோவான் 14: 19-20.

  1. இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.
  2. நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

இறை வாழ்வு:

அங்கு போனால் ஆசிகள் பெருகும்;
அதனால் சென்றேன் என்றவரே,
எங்கு போயினும் எல்லாம் கருகும்;
என்றுமிருப்பது திருவன்பே.
இங்கு இதனை எமக்கு அருளும்,
இறை எங்கென்று சொன்னவரே,
தங்க மைந்தன் இயேசுவின் உருவம்,
தந்தைக்குரிய அருளன்பே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.