அப்பாலே போ!

அப்பாலே போ, அலகையே!

ஒருவர் ஒரு சமயத்தைக் குறித்துப் பேசுகிறார் எனில், அச்சமயத்தைக் குறித்து ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். அடிப்படைக் கருத்துகள் அறியாமல், அதைப் பின்பற்றுவோரின் பற்றினைப் புரியாமல், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று, பலர் பேசி இன்று, தங்கள் அறியாமையைப் பறைசாற்றுகிறார்கள். இவர்கள் நாக்கு, வாக்கிற்கும் பேசலாம், பதவிபெறும் நோக்கிற்கும், பேசலாம்.

ஆனால் அறிவுடையார் ஏற்கார்,

அவர் வரிசையில் சேர்க்கார்!

அன்று சீமோன், இன்று சீமான்! அவ்வளவுதான்.

அன்று ஆண்டவர் சொன்னதை இன்று நாமும் கூறுவோம்.

“அப்பாலே போ சாத்தானே!”

-கெர்சோம் செல்லையா.

தெரிந்தார்!

என்னையும் தெரிந்தார்!
இறை மொழி; யோவான் 15:16.

  1. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.  

இறை வழி:

முன்னிலை வாழ்க்கையை நோக்கிப் பார்த்தேன்.
முரடன் மூடன் எனத்தான் இருந்தேன்.
என்னிலை காண்கிற  இயேசுவைப் பார்த்தேன்;
இடைவெளி பெரிது, யானோ பொருந்தேன்.
அந்நிலை  அகற்றிட அழைத்ததும் பார்த்தேன்;
அவர் தெரியாவிடில் அடியனும் திருந்தேன்.
நன்னிலை என்ன? நான் இன்று பார்த்தேன்;
நற்கனி அன்பு, வருவதால் வருந்தேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

நண்பர்!

நண்பன்!

இறை மொழி: யோவான் 15:14-15.

14. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

இறை வழி:

அன்புடன் ஒருவர்  பணி செய்வாரெனில்,
அவரை மதிப்பார் அவர் தலைவர்.
இன்புறு நெஞ்சில் இடமும் கொடுத்து,
இவர்  என்  நண்பர் என அணைப்பர்.
பண்புடன் வாழ, தமை அளிப்பாரெனில் 
பலர் முன்னிலையில் உயர்வடைவர்.
பின்னால் வருவதை முன்னால் அறியும், 

பேரறிவிலும் இறை இணைப்பர் !

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

பேரன்பு!

பேரன்பு!

இறை மொழி: யோவான் 15:13.

13. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.  

இறை வழி:

தன்னுயிர் கொடுக்கத் தயங்காதிருத்தல்,
தகைசால் அன்பெனக் கற்கிறேன்.
இன்னுயிர் ஈந்து, என்னையும் மீட்கிற,
இறைமகன் பண்பினால் நிற்கிறேன்.
என்னுயிர் மூச்சு இயங்காதிருத்தல்,
என்கிற நொடி வரை கேட்கிறேன்.
அன்பையே தாரும், அன்பையே தருவேன்.
அடியனும் ஆன்மா மீட்கிறேன்!  

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அன்பு!

அன்பு!

இறை மொழி: யோவான் 15:12.

  1. நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.

இறை வழி:

இன்னொரு மாதிரி தேவை இல்லை.
இயேசுவே போதும், ஏற்கிறேன்.
நன்னரும் வாழ்க்கை வேறேயில்லை.
நானவரையே பார்க்கிறேன்.
இன்னில வாழ்வின் நோக்கம் என்ன?
இறையன்பென்று அறிகிறேன்.
சொன்னவர் இயேசு, செய்வது என்ன?
சொல்பவரையே தெரிகிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

மகிழ்ச்சி!

இறை மொழி: யோவான் 15:11.

  1. என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.

இறை வழி:

நாம் பெறும் இன்பம் சிறிது;
நம்மிறை தருவதோ பெரிது.
ஆம், இதை அறிவது அறிவு.
அறியார் நிலையோ சரிவு.
ஊமையும் பேசுவார் அழகு;
உண்மை அன்பில் பழகு!
தீமைகள் விட்டு நீ விலகு;
தெரியுமே மகிழ் வுலகு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா. 

திருச்சட்டம்!

சட்டம்!

இறை மொழி:  யோவான் 15: 10.

  1. நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

இறை வழி:

இறை ஆணை, இறை சட்டம்,
இவற்றின் பொருள் அறிவீரா?
பிறை பார்த்து உரை கேட்கும்,
பெரியோரே நீர் சிந்திப்பீர்.
நிறைவான வாழ்வு ஒன்றை  
நேர்மை மீறிப் பெறுவீரா?    
கறை நீக்க தேவை அன்பு
காட்டும் இறை சந்திப்பீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இறையன்பு!

இறையன்பு!
இறைமொழி: யோவான் 15:9.

9. பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

என் வழி:

தந்தை இறையிடம் அன்பைப் பெற்று,
தரணியருக்கு இறைமகன் ஈந்தார்.
எந்தையர் அன்பை அவரிடம் கற்று,
எங்களுக்கும் பகிர்ந்து தந்தார்.
முந்தி இறையிடம் பெறுகிற அன்பு,
முக்காலமும் நிலைக்கும் என்றார்.
இந்த அன்பே இறைவனின் பண்பு;
ஏற்பவரும் அமைதி கண்டார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

யாருடன் இணைந்தோம்?

யாருடன் இணைந்தோம்?

இறை மொழி : யோவான் 15:7-8.

7. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

என் வழி:

தேருடன்  பூட்டிய குதிரைகள் இணைந்து
தெரு வழி சென்றால் நன்மை.
யாருடன் செல்கிறோம் என்பதை மறந்து,
எண் திசை நோக்கின் தீமை.
வேருடன் இணைந்து வளரும் செடியால்,
விளைகிற கனிகள் நன்மை.
ஆருடம் நம்பி அன்பைப் பிடியார்,
அறுவடை செய்வதோ தீமை!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா

கிளை!

கிளை!

இறை மொழி: யோவான் 15:4-6.

என் வழி:

முறிந்த கிளையால் பயனொன்றில்லை;
மூடர் பிரிந்து செல்கின்றார்.
உரிந்த பட்டை வளர்வதும் இல்லை;
உடையை கிறித்து நல்கின்றார்.
அறிந்த அடியார், தனியாய்ச் செல்லார்;
ஆண்டவரோடு கனி தருவார்.
எரிந்த விறகு எனப்படும் பொல்லார்,
ஏமாற்றமே இனி பெறுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.