என்னிறக் கட்சிகள் வந்தாலும்,
இந்தியர் இவரென எண்ணவில்லை.
அன்னியர் என்று ஒதுக்காத
ஆண்டவா, இவரை மீட்பீரே!
சென்னிறக் குருதி சிந்துமிவர்,
சீக்கிரம் உயிர் வாழ்வடைவதற்கு,
பொன்னிற நெஞ்சு கொண்டோரே,
புவியில் ஏழையை நினைப்பீரே!
-கெர்சோம் செல்லையா.

The Truth Will Make You Free
என்னிறக் கட்சிகள் வந்தாலும்,
இந்தியர் இவரென எண்ணவில்லை.
அன்னியர் என்று ஒதுக்காத
ஆண்டவா, இவரை மீட்பீரே!
சென்னிறக் குருதி சிந்துமிவர்,
சீக்கிரம் உயிர் வாழ்வடைவதற்கு,
பொன்னிற நெஞ்சு கொண்டோரே,
புவியில் ஏழையை நினைப்பீரே!
-கெர்சோம் செல்லையா.
இந்திய விடுதலை நாள் வாழ்த்து:
வீடும் குடும்பமும் போதுமென்று
விரும்பிப் பதுங்கும் இந்தியரே,
நாடும் இனமும் வாழ்ந்தால்தானே,
நமக்கு உயர்வு அறிவீரே!
ஓடும் வாழ்வின் உண்மையறிந்து
ஒருவரையொருவர் மதிப்பீரே.
கேடும் துன்பும் கிட்டவராது;
கிறித்து அருளில் மகிழ்வீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
ஏங்கும் நெஞ்சம் இருக்குமிடத்தில்
இரக்கம் பொழிவோம், என் நண்பா.
வாங்கும் நன்மை வழங்குமிடத்தில்
வறுமை ஒழியும், இது என் பா!
-கெர்சோம் செல்லையா.
நல்வாழ்த்து:
எதிர்ப்பவர் எவராய் இருந்தாலும்
இறைவன் இருக்கக் கவலையில்லை!
மதிப்பவர் சிலராய் இருந்தாலும்
மகிழ்ந்துரைப்போம் அவர் சொல்லை!
நல்வாக்கு:
மத்தேயு 26:51-52.
“உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ‘ உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.”
நல்வாழ்வு:
வாள் எடுத்துக் கொன்றவர்கள்
வாளால்தான் வீழ்ந்தார்கள்.
தோள் கொடுத்து நின்றவர்கள்
துன்பத்திலும் உயர்ந்தார்கள்.
நாள் முழுதும் கேட்பவர்கள்
நம்புகையில் வாழ்வார்கள்.
தாள் பணிந்து வேண்டுகிறேன்;
தமிழர்களே உணருங்கள்!
ஆமென்.
நல்வாழ்வு:
காட்டிக் கொடுக்கும் கயவனையும்
கனிந்து தோழன் என்றாரே.
கூட்டில் குதிக்கும் குருவியெனக்
கொதிக்கும் எனையும் காண்பாரே.
நாட்டின் நடப்பு பார்க்கையிலே
நல்லவர் வடிவில் யூதாசே.
கேட்டின் மக்கள் கெட்டொழிவார்;
கிறித்து போன்று இரு நெஞ்சே!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:47
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்:
“இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.”
நல்வாழ்வு:
காசிற்காக எதையும் செய்யும்
கயவர் இன்றும் வருகின்றார்.
கத்தி, தடியைக் கையில் வைத்து,
கண்ணீர் ஊற்றித் தருகின்றார்.
பேசிச் செல்லும் உறவுகளாக
பேய் பிடித்தோர் இருக்கின்றார்.
பிழையுள் நானும் விழாதிருக்க,
பெரியவர் இயேசு பிரிக்கின்றார்!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:45-46.
“பிறகு சீடர்களிடம் வந்து, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான் ‘ என்று கூறினார்.”
நல்வாழ்வு:
முக்காலம் அறிந்தவர் நீர்;
மும்மையு மாயிருந்தீர்.
எக்காலம் அறிந்திருந்தும்
யூதாசைச் சேர்த்திருந்தீர்
இக்காலம் எம் வாழ்வில்
ஏய்ப்பவரைக் காண்கின்றீர்.
அக்கோலம் அறியாத
அடிமையின் கண் திறப்பீர்!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:43-44.
“அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.”
நல்வாழ்வு:
துன்பம் தமக்கென்றால்,
தூங்காது இருப்பவரே,
அன்பர் அடைந்தாலும்,
அயராது உழைப்பவரே,
இன்முக இயேசன்று
யாரை எதிர்பார்த்தார்?
மன்றாடிக் கேட்பவரை
மறுபடியும் தேடுகிறார்!
ஆமென்.
நல்வாக்கு:
மத்தேயு 26:42.
“மீண்டும் சென்று, ‘ என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும் ‘ என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.”
நல்வாழ்வு:
குடித்து முடித்தால்தான்
குவளை அகலுமெனில்,
கொஞ்சமும் வையேன் நான்;
குவளைத் துன்பந்தான்.
மடிந்து போனால்தான்
மணிக்கதிர் பிறக்குமெனில்,
மடிவேன் நெல்லாய் நான்;
மாநிலம் மகிழத்தான்!
ஆமென்.