வாய்ப்பூட்டு!

வளர்ச்சியும் வாய்ப்பூட்டும்!

வளர்ச்சி என்ற வாக்கை வைத்து,
வந்தார் ஒருவர் ஆட்சிக்கு.
சுழற்சியாக உலகம் சுற்றிச்
சொன்னார் கதைகள் கட்சிக்கு.
தளர்ச்சியுற்ற நாட்டோருக்கோ,
தந்தார் சில அதிர் வேட்டு.
கிளர்ச்சி என்று எவரும் பேசார்;

கொரோனாகூட  வாய்ப்பூட்டு!

-கெர்சோம் செல்லையா.

இரண்டு பேர்க்கு ஊழியமா?

இரண்டு பேர்க்கு ஊழியமா?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:13-14.

13  எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.

14  இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம் பண்ணினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:

இருவர் அமர்ந்து என்மேல் ஆண்டால்,

யார் சொல் கேட்டுப் பிழைத்திடுவேன்?

ஒருவர் பேச்சும் இரண்டாய் இருந்தால்,

உண்மையில் எப்படி உழைத்திடுவேன்?

அருமை வாழ்க்கை ஒருமுறை என்றால்,

அதனை எப்படி வாழ்ந்திடுவேன்?

விருப்பம் ஓன்று இறையென்றானால்,

விண்ணின் வாக்கில் ஆழ்ந்திடுவேன்!

ஆமென்.

உயிர்ப்பு நாள் வாழ்த்து!

உயிர்ப்பு நாள் வாழ்த்துகள்!

இறப்பின் பின்பு வாழ்வு உண்டோ?
என்று கேள்வி கேட்பவரே,
சிறப்பின் தெய்வ மகன் எழும்பும்,
செய்தியை ஆய்ந்து பார்ப்பீரே.
பிறப்பின் நோக்கம் ஓன்று உண்டோ?
பெரிய கேள்வி கேட்பவரே,
திறப்பின் வாயில் தீமை ஒழியும்;
தொண்டின் உயிர்ப்பில் பார்ப்பீரே!
-கெர்சோம் செல்லையா.

நல்வெள்ளி!

நல் வெள்ளி!
நல்வெள்ளி என்னும் நாளில்,
நாங்கள் செல்வோம் கோயில்.
சொல்லேழும் தருகிற போதில்,
சுமைகள் இறங்குமே அதில்.
பல்லாண்டாய் வந்த பேறு,
பாதித்ததை எண்ணிப் பாரு.
இல்லங்களில் வேண்டல் கூறு.
இறையருளே இனிச் சோறு!
-கெர்சோம் செல்லையா.

நல்வெள்ளி!

நல் வெள்ளி!


நல்வெள்ளி எனும் நாளில்,

நாங்கள் செல்வோம் கோயில்.

சொல்லேழு தரும் போதில்,

சுமைகள் விழுமே அதில்.

பல்லாண்டாய் வந்தப் பேறு,


பாதித்ததை எண்ணிப் பாரு.


இல்லமதில் வேண்டிக் கூறு.


இறையருளே நம் சோறு!

-கெர்சோம் செல்லையா.

கொடிய தொற்று!

கொல்லும் தொற்று!

பல்வகைத் தொற்று பார்த்த எனக்கு,

பரவும் கொரோனா பொருட்டல்ல.

இல்லம் பூட்டி அடைந்து கிடக்க,

இப்பகல் வேளை இருட்டுமல்ல.

சொல்லும் ஊரார் சுற்றுகின்றாரே,

சொல்லின் விளைவு புரியாமல்.

கொல்லும் தொற்று கீழ்ப்படியாமையே;

கொண்டோர் அழிகிறார் அறியாமல்!

-கெர்சோம் செல்லையா.

அறுப்பவர் வரலாறு!

அறுப்பவர் வரலாறு!

மறுப்பவர் என்று தொடங்குபவர்,
மனதில் வேறாய் மாறுகிறார்.
வெறுப்பவர் என்று வளருமவர்,
வெறித்தன வேராய்த் தேறுகிறார்.
பொறுப்பவர் என்று மாறாதார்,
பொறுமை அற்றுச் சீறுகிறார்.
அறுப்பவராகி அறுபடுவார்,
அழிவுப் பாதை கூறுகிறார்!

-கெர்சோம் செல்லையா.

குதிரையா? கழுதையா?

குதிரையா? கழுதையா?

பதின்மடங்காகப் பயன் தந்தாலும்,

பணியும் கழுதையை விரும்பாமல்,

அதிவிரைவாகப் பகைவருள் பாயும்,

அரபுக் குதிரையை விரும்புகிறோம்.

எதிரியை நண்பர் என்று ஏற்கும்,

இயேசுவோ அப்படிப் பாராமல்,

குதிரை அல்ல, கழுதை கேட்டார்;

கழுதையில் அமைதி திரும்பிடுவோம்!


-கெர்சோம் செல்லையா.

உண்மை உண்டோ?

உண்மை உண்டோ?

கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:11-12.

11  அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்?

12  வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்?

கிறித்துவில் வாழ்வு:

உண்மை என்றால் என்னவென்று,

உலகோர் கேட்கும் காலமிது.

நன்மை செய்யும் இறையுமின்று,

நம்முள் தேடும் பண்புமிது.

அன்றே கொன்ற நாட்களன்று;

அரசிலும் தேடவேண்டுமிது.

என்றானாலும் சொல்வேன் ஒன்று;

இன்றும் விடுதலை கொடுக்குமிது!

ஆமென்.

ஐந்து காசு உண்மை!

ஐந்து காசு உண்மை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 16:10.

10  கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.

கிறித்துவில் வாழ்வு:

ஐந்து காசு இருந்தபோது,

அதையே ஏய்த்து எடுத்தவர்,

வந்து கொட்டும் கோடி கண்டு,

வடி கட்டாமல் போவாரா?

சொந்த வீட்டில் உண்மையற்று,

சீர் அழியச் செய்பவர்,

இந்த நாட்டை ஆள்வதற்கு, 

ஏற்ற தலை ஆவாரா?

ஆமென்.