உணர்ச்சிப் பேச்சு!

Poetry is the spontaneous overflow of powerful feelings: it takes its  origin from emotion recollected in tranquility. De… | Thought provoking  quotes, Quotes, Poetry

உணர்ச்சிப் பேச்சு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:33.    

33  அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.

கிறித்துவில் வாழ்வு:  

உணர்ச்சிப் பெருக்கால் பொழிதல் வேறு;  

உணர்த்தும் இறையால் மொழிதல் வேறு.    

கணக்குப் பார்த்து உழைத்தல் வேறு;  

கடவுளுக்காக இழத்தல் வேறு.  

மணக்கும் கிறித்தவத் தாழ்மை வேறு;  

மனிதர் விரும்பும் ஆளுமை வேறு.  

இணைக்கும் இறையால் வேறு வேறு, 

என்றறிந்தால் பேறு பேறு!   

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

நலமடைந்து நலப்படுத்து!

நலமடைந்து நலப்படுத்து!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:31-32.  

31  பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

32  நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

இரு விழி இழந்தோர் தெரு வழி காட்டின்,  

ஒரு விழியுடையோர் ஏற்பாரா?  

திரு மொழி அறிவைக் கற்க விரும்பின்,  

தெளிவில்லார்முன் நிற்பாரா?  

பெரு வழி காட்டும் இறையின் முன்னில்,

பேசித் திரிவார் சேர்ப்பாரா? 

கிருத்தவ வாழ்வைத் தம்மில் தொடங்கின்,  

கிறித்துவினடியார் தோற்பாரா?   

ஆமென். 

-கெர்சோம் செல்லையா. 

பெரும்பேறு!

பெரும்பேறு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:28-30.  

28  மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.

29  ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.

30  நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

உழைக்கும் பேறு, பெரும் பேறு.

உழியம் செய்வோரிடம் கூறு.  

தழைக்கும் வாழ்வு தருவதுடன், 

தலைவராக்குவார், அரசேறு.  

பிழைக்கும் பணியாய் எண்ணாது,

பேச்சுக் கலைபோல் பண்ணாது,  

கழைக்கூத்தாடும் மனிதருக்கு,  

காட்டு, செயலில் விண்தூது!  

ஆமென்.

மேன்மை அடைய !

மேன்மை காண, தாழ்மை பார்!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22: 24-27.

24  அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.

25  அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள்.

26  உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன்.

27  பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்.  

கிறித்துவில் வாழ்வு:  

எப்படி பெரியோர் ஆவது என்று,    

யாவரும் இங்கு ஏங்குகிறார்; 

தப்பித வழிமுறை எடுத்துக்கொண்டு,   

தலைவர் கனவில் தூங்குகிறார். 

இப்படி நாட்டோர் இருக்கும்போது,  

இயேசு போன்று வாழ்வோர் யார்?   

முப்படி அவரே அளக்கிறார், நம்பு;  

மேன்மை காண, தாழ்மை பார்!  

ஆமென்.  

-செல்லையா. 

மன்னிப்பதுதான் கிறித்தவம்!

மன்னிப்பதுதான் கிறித்தவம்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22: 21-23.

21  பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது.

22  தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார்.

23  அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

பன்னிரு அடியார் பந்தியிருந்தார்;  

பாதகன் யூதசும் உடன் இருந்தான். 

தன்னிலை அறிந்த மைந்தனோவென்றால்,  

தள்ளிவிடாது விருந்து படைத்தார்.   

என்னிலை இப்படி இருக்குமென்றால் ,  

இழிஞனுக்குணவு கொடுத்திருப்பேனா?  

மன்னியும் என்று வேண்டுவதல்ல;  

மன்னிப்பதுதான் கிறித்தவமென்றார்!  

ஆமென்.

-செல்லையா.

மறக்கலாமா?

மறக்கலாமா?  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:19-20.

19  பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

20  போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:

ஊனைக் கொடுத்தும் உதிரம் கொடுத்தும்,  

உடன்படி செய்த இறைமகனை,  

பானைச் சோறு விருந்து படைக்கும்,  

பந்தியில் கூட  மறந்தோமே?  

தேனைப் போன்று வாழ்வு கொடுக்கும்,  

தெய்வத்தினையே நாம் மறப்பின்,  

பூனைக் கண்ணில் விழாமல் துடிக்கும்,  

பெருச்சாளி போல் பறப்போமே! 

ஆமென்.  

-செல்லையா.

புளிப்பிலா வாழ்வு!

புளிப்பிலா வாழ்வு!  

கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:14-18.  

14  வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்.

15  அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.

16  தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,

17  அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;

18  தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

புளிப்பிலா வாழ்வைப் புவியோரடைய,   

புளியா அப்பம் இயேசுண்டார்.  

களிப்பிலா அடிமைகள் விடுதலையடைய, 

கடவுப் பண்டிகைச் சாறுண்டார். 

ஒளித்திடயியலா உண்மையை விளம்ப, 

உண்ணும் உணவைப் பகிர்ந்துண்டார்.  

விளித்திடும் அவரது குரலைக் கேட்பார்,  

விண்ணின் விருந்தில் பங்குண்பார்!  

ஆமென்.  

வீடற்ற இயேசுவின் விருப்பு!

வீடற்ற இயேசுவின் விருப்பம்!  

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:9-13.  

9   அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

10  அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய்,

11  அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள்.

12  அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.

13  அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.  

கிறித்துவில் வாழ்வு:  

வீடற்ற இயேசுவின் விருப்பம் அறிந்து,  

வீட்டைக் கொடுத்தவரே வாழ்க.  

பாடற்ற வாழ்வை, பரிசாய்த் தெரிந்து,  

பயன்படா நெஞ்சே, நீ மாள்க.  

ஈடற்ற  மீட்பை ஈவாய்க் கொடுத்து,

இயேசு வாழ்ந்தார் பலியாக.  

கேடற்ற அவரது வாக்கை எடுத்து,    

கீழ்ப்படிவேன் என் வழியாக! 

ஆமென். 

-செல்லையா.  

பலியாடு பாரீர்!

பலியாடு பாரீர்!

கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:7-9.  

7   பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.

8   அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்.

9   அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

கிறித்துவில் வாழ்வு:  

அழிக்காது ஆண்டவர் கடக்க,  

ஆட்டை அடித்தார் அன்று.   

பலிக்கான ஆடாய்க் கொடுக்க,  

பரமன் வந்தார் இன்று.  

வலிக்காது நாமும் நடக்க,  

நம்மைக் கொடுப்பது என்று?  

விழிக்காது வீழ்தல் தடுக்க,  

வேண்டுவதுதான் நன்று!

ஆமென்.  

-செல்லையா.

காட்டிக் கொடுத்தல்!

காட்டிக் கொடுத்தல்! 
கிறித்துவின் வாக்கு: லூக்கா  22:3-6.  

3   அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.

4   அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.

5   அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.

6   அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.  

கிறித்துவில் வாழ்வு:  

காட்டிக் கொடுத்தல் பலவகையாகும்;  

காசிற்கென்பது ஒருவகையாகும்.  

கூட்டின் உறவில் குழி பறிப்பாகும்;

கொல்லும் கொடிய மெது நஞ்சாகும்.

கேட்டின் மகனை அறிந்திருந்தாலும்,  

கிறித்து விடாதது அன்பேயாகும்.  

நாட்டில் இவன்போல் பலரிருந்தாலும், 

நம்மைக் காப்பது இறையருளாகும்!  

ஆமென்.  

-செல்லையா.