சேதி வருமோ?

சேதி வருமோ? 

இரக்கம், பொறுத்தல் இறைவனின் பண்பு. 
இறை மறுப்பாளரும் தேடிடும் அன்பு.   
திருக்கும், பொய்யும், அலகையின் கொம்பு.  
திருந்தாதவர்கள் செய்திடும் வம்பு. 
நெருக்கம் நமக்கு எவ்விடம் உண்டு? 

நெஞ்சம் சொல்லும், நேர்மை கொண்டு.    
செருக்கும், வெறுப்பும் அழிவது கண்டு,  
சேதி வருமோ,  அன்பை மொண்டு? 

-செல்லையா. 

யோவானின் சான்று!

யோவானின் சான்று!  

நற்செய்தி: யோவான் 1:15.  

நல்வழி:  
தன்னலம் எதுவும் இல்லாது, 
தற்புகழ் வாக்கும் சொல்லாது, 
பின்னால் வந்த முதல்வருக்கு,
பெருமை சேர்த்தான் யோவான்.
இன்னாள் இதுபோல் நடவாது,
இறையன்பூற்றில் கிடவாது,
சொன்னால் கூசும் திமிருற்று,
சொத்து சேர்ப்பான் போவான்! 
ஆமென்.  
-செல்லையா.

எதைச் செய்தாலும்!

எதைச் செய்தாலும்!   

எதைச் செய்தாலும் இறைவனுக்கென்றே, 
எண்ணிச் செய்வீர் நண்பரே.  
இதைச் சொல்லுகிற அடியனும் நன்றே, 
எண்ண வேண்டும் அன்பரே. 
விதைக்கிற விதையைச் செடி மரமாக்கி,  
விளையச் செய்பவர் தெய்வமே. 
புதைக்கிறத் தொழிலாய், பொய் விதைக்காது,  
புனிதம்  நட்டால் உய்வமே!  
-செல்லையா. 

வாக்கு வடிவெடுத்தது!

வாக்கு வடிவம் எடுத்தது!
நற்செய்தி: யோவான் 1:14.
14. அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
நல்வழி:

வாக்காய் ஒலித்து வழிநடத்தியயென்
வானின் அருளே, வாய்மையே,
நோக்காதிருந்த மாந்தர் கண்முன்
நுழைந்தாய் இயேசு வடிவிலே.
நீக்காதிருப்போர் ஐயம் இனியேன்?
நீங்கச் செய்வாய் மாண்பிலே.
தேக்காதிருந்த மாட்சியை அடியேன்,
தேடினேன் உனது மடியிலே!
ஆமென்.
-செல்லையா.

என்னிறைவன்!

என்னிறைவன்!
அன்பு,அறிவு, ஆற்றல், அமைதி, 
அனைத்தும் நிறைந்தவர் என்னிறைவன். 
உண்மை, ஒழுக்கம், நேர்மை, தாழ்மை,
ஒன்றிலும் குறையார் என்னிறைவன். 
பண்பின் வடிவம் ஒருவரில் கண்டேன்; 
படைத்தருள்கிறார்  என்னிறைவன்.  
நன்மை செய்தல் வாழ்வெனச் சொல்லி, 
நானிலம் ஆள்கிறார்  என்னிறைவன்! 
-செல்லையா.

பிள்ளைப் பேறு!

நல்வழி:  
பற்றும் உறுதி இல்லாதவனாய்,   
பன்னிரு ஆண்டுகள் நானலைந்தேன்.
சற்றும் நேர்மை புரியாதவனாய்,     
சகதியில் விழுந்து சீர்குலைந்தேன்.  
சுற்றம் உணர, சூழ்நிலை வெல்ல, 
சொல்லொளி காட்டி எனையிழுத்தார். 
முற்றும் மீட்டு முழுவாழ்வளிக்க, 
முதலில் பிள்ளை என்றழைத்தார்!  
ஆமென்.
-செல்லையா. 

இறையொளி!

இறையொளி!  

நற்செய்தி: யோவான் 1:10-11

நல்வழி: 

எந்த மாந்தரும் ஒளியைப் பெறுவார்;
இறையும் மகனாய் வெளிப்பட்டார்.  
இந்த ஒளியைப் பெற்றவர் தருவார்; 
எங்கும் ஒளியை பரப்பிட்டார். 
சொந்த உறவோ ஏற்க மறுத்தார்;  
சொல்லால் செயலால் தடுத்திட்டார். 
அந்த ஒளியை அடக்குதல் எளிதோ?  
ஆதவன் முன்பு அடங்கிட்டார்! 
ஆமென்.
-செல்லையா.

ஒளியும், விளக்கும்!

ஒளி வேறு, விளக்கு வேறு!

நற்செய்தி வாக்கு: யோவான்: 1:6-9.

6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

நல்வழி பாட்டு:

வெளிச்சம் கொடுக்கும் விளக்கானாலும்,

விளக்கும் வெளிச்சமும் வேறாகும்.

ஒளியை வழங்கும் யோவாணுர்ந்து,

உரைக்கும் வாக்கும் பேறாகும்.

தெளிவைப் பெற்ற அடியாரெவரும்,

தெய்வம் வாழ்த்தும் விளக்காகும்.

எளிமை, தாழ்மை, தூய்மை, அன்பு,

இவையே இயேசுவின் ஒளியாகும்!

ஆமென்.

-செல்லையா.

ஒளி!

ஒளி!
நற்செய்தி வாக்கு: யோவான் 1:4-5. 
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. 
நல்வழி பாட்டு: 
இருளாயிருக்கும் இப்புவியெங்கும், 

இறையே ஒளியாய் இருக்கின்றார். 

அருளாயதனை நமக்கு ஈந்தும், 

அறிவில்லாதார் வெறுக்கின்றார். 

ஒருநாளேனும் உண்மை உணர்வார்;

உலகம் ஒளியை வெல்லாது. 

பொருளாயிதனைப் பாடி வடிப்பேன்; 

புனைந்துரைத்தல் இல்லாது! 


ஆமென். 


-செல்லையா.

வேண்டு!

அருள் வடிய வேண்டு! 

தொடக்கம் அறியாத் தொற்று ஓன்று,  


தொண்டையின் கீழே வருகிறது. 

கிடக்கும் இடமும், மருந்துமிலாது, 


கேட்கவே அச்சம் தருகிறது. 


அடக்கம், எரித்தல் சடங்கும் இன்று, 

ஆட்களில்லாமல் முடிகிறது.  


முடக்கும் தொற்று முடிய வேண்டு.

முன்னே இறையருள்  வடிகிறது!  

-செல்லையா.