இறைவனின் பலியாடு!

தெய்வத்தின் பலியாடு!  

நற்செய்தி: யோவான் 1:35-36. 

நல்வழி: 
தவற்றின் முடிவு தண்டனையாகும். 
தவறும் ஆன்மா இறந்தும்போகும்.
எவற்றைச் செய்தால் விடிவுண்டாகும்? 
எதுவுமில்லை, வீணாய்ப்போகும்.   
இவற்றைத் திருத்த யாராலாகும்? 
இறைவனால்தான் தண்டனை போகும். 
அவற்றை முடிக்கும் பலி ஆடாகும், 
ஆண்டவராலே இறப்பும் போகும்!  
ஆமென்.  
-செல்லையா. 

புறா!

புறா!

நற்செய்தி: யோவான் 1: 32-34.

நல்வழி:

வராதிருந்தவர் வருவாரென்றால்,

வருகைக்கென்ன அடையாளம்?

புறாயிறங்கி அவர்மேல் அமரும்;

புனிதர் பணியும் தொடங்கிவிடும்.

சுறா விழுங்கல் போல் பலரும்,

சுற்றுங் காட்சி அட்டூழியம்.

இராதவரை நினையாரென்றால்,

இறை அமைதி முடங்கிவிடும்!

ஆமென்.

-செல்லையா.

கற்றபின் ஊழியமா?

எல்லாம் கற்றபின் ஊழியமா? 
நற்செய்தி: யோவான் 1:29-31.  

நல்வழி: 
எல்லாம் கற்றபின் ஊழியமென்றால்,  
எவரும் செயாமல் சாவாரே.  
சொல்லாம் இறையின் சொல் தரக்கேட்டு, 
சொற்படி நடப்பின் ஆவாரே. 
பொல்லாப் புவியைத் திருத்தும் பணியை,  
புனிதர் தருவார் பெறுவீரே.  
இல்லார் என்ற இழிசொல் நீங்கும்;   
இயேசு போதும், வருவீரே!  
ஆமென்.  
-செல்லையா.  

யோவானின் குளியல்!

யோவான் கொடுத்த குளியல்! 
நற்செய்தி: யோவான் 1:24-28.  

நல்வழி: 
வேற்றுச் சமய மக்களைச் சேர்க்க,   
விதித்தக் குளியல் வேறாகும்.  
ஏற்றுக் கொள்ள, யூதரைத் திருப்ப,    
யோவானளித்ததும் வேறாகும். 
மாற்றும் வலிமை, ஆற்றில் உண்டோ?
மனந்திருந்தலே பேறாகும்.  
போற்றும் இயேசு, ஊற்றும் குருதி,  
புகுவீர், பேறிலும் பேறாகும்!  
ஆமென்.  
-செல்லையா.     

காட்டில் கேட்ட ஒலி

காட்டில் கேட்ட ஒலி!  

நற்செய்தி: யோவான் 1:21-23.  

நல்வழி:  


காட்டிலொலிக்கும் கடவுள் வாக்கு,  
வீட்டிலும் வந்து, ஒலிக்கட்டுமே. 
மீட்டியிசைக்கும் அவ்வொலி கேட்டு,  
நாட்டிலும் மக்கள், சொலிக்கட்டுமே.   

ஏட்டினில் பார்த்து, எதையோ சேர்த்து,,  

தீட்டினில் புரள்தல், முடிக்கட்டுமே.  
மாட்டிக்கொண்டோர் நிலையும் கண்டு,  
நீட்டிடும் அன்பு, பிடிக்கட்டுமே! 
ஆமென்.  
-செல்லையா.

மகிழு! மகிழ்வி!

யாவரும் ஒன்றே!
இறைவன் முன்பு யாவரும் ஒன்றே.

இதுவே சட்டம், எண்ணுதல் நன்றே.
பறையர் பார்ப்பர் என்பது போன்றே,
பாரைப் பிரித்தல் நேர்மை அன்றே.
திறமை, அறிவு வளர்த்தல் இன்றே,
தேவையாகும், தேடு, சென்றே.
மறையோன் ஈந்த வாழ்வு என்றே,

மகிழ்வி, மகிழு, தீமை வென்றே!
-செல்லையா.

உன்னை அறிவாய்!

தன்னை அறியும் அறிவு! 

நற்செய்தி: யோவான் 1:19-20. 

முன்னம் நிற்போர் தன்மை அறிந்தோம்;  
முழு வரலாறும் இயல்பும் அறிந்தோம்.  
என்னென்ன குறையோ யாவும் அறிந்தோம்;  
எல்லாம் விற்று வாங்கவும் அறிந்தோம்.  
இன்னில வாழ்வின் பொருளை அறிவோம். 
என் செயவேண்டும் என்றும் அறிவோம்.  
தன்னை அறியும் அறிவை அறிவோம். 
தன் குறையறிந்தால், இறையும் அறிவோம்!  
ஆமென்.
-செல்லையா.

எங்கே இறைவன்?

எங்கே இறைவன்? 

நற்செய்தி: யோவான் 1:18.

நல்வழி: 
எங்கே இறைவன்? எங்கே இறைவன்?  
என்றே வெளியில் தேடுகிறார்.  
இங்கே வந்து உள்ளில் தேடும்;
என்றே சொன்னால் ஓடுகிறார். 
உங்கள் தேடல் நிறைவில் முடியும்;  
உங்களை அவரும் நாடுகிறார்.  
மங்கா அவ்வொளி இயேசுவாகும்

மனிதர் இறையுள் கூடுகிறார்!   
ஆமென்.  
-செல்லையா.    

வாய்மையும் அருளும்!

வாய்மையின் அருட்திட்டம்!  

நற்செய்தி: யோவான் 1:16-17.  

நல்வழி:  


தூய்மைப் படுத்தும் திருச்சட்டம் ஈந்தீர்.  

தூது கொடுக்கும், மோசேயும் தந்தீர். 


வாய்மை குறையவே அருட்திட்டம் வகுத்தீர்; 

 வாழ்ந்து காட்டவே உம்மையும் பகுத்தீர்.  


தேய்மை ஆளும் எங்களைக் கண்டீர்;  


தெளிவில் வாழும்படிக்குக் கொண்டீர்.   


தாய்மை நெஞ்சில் அன்புடன் ஏற்பீர்;  


தமிழருயர உம்முடன் சேர்ப்பீர்!   


ஆமென்.  


-செல்லையா.