எத்தனை விழுக்காடு?

எத்தனை விழுக்காடு உண்டு?


எத்தனை விழுக்காடு உண்டு?

இனிய பண்பை, நான் அளந்தேன்.

அத்தனை பேரிலும் குறைவு கண்டு,

அவருடன் தோற்று, வருந்துகிறேன்.

மொத்தமும் நூறாய் எவரில் உண்டு?

முன்பின் தேடி நான் அலைந்தேன்.

சித்தர் இயேசு வாழ்வில் கண்டு,

சிறிய நெஞ்சுள் திருந்துகிறேன்!


-செல்லையா.

என்னானார்?

அப்புறம் என்னானார்?
நற்செய்தி: யோவான்: 2:23-25.  

நல்வழி: 
நாடி நின்ற நன்மையை, 
நல்லீவாய்ப் பெற்றவர்,
ஆடி ஆடிப் பாடினார்; 
அப்புறம் என்னானார்?
தேடி வந்த உண்மையை, 
நாடு என்று சொல்லவே,
ஓடி ஓடி ஒளிகிறார்;
உதவாத மண்ணானார்! 
ஆமென்.
-செல்லையா.

பாதிரியார் சாமி!

பாதிரியார் சாமி!

மாதிரியாய் வழி காட்டியும்,

மனிதர் வரவிலை, சாமி.

மா திரியாய் ஒளி ஊட்டியும்,

மாயிருள் போகலை, சாமி,

பாதிரியாய் அருள் நீட்டியும்,

பாவியர் ஏற்கலை, சாமி.

பார் தரா விடுதலை கிட்டும்;

பரனிடம் பெறுவீர், சாமி!

-செல்லையா.

வெளிச்சம் பெற்ற விளக்கு!

வெளிச்சம் பெற்ற விளக்கு!
நற்செய்தி : யோவான்  2:18-22.  

நல்வழி:  
எதை உரைத்தார் என்றறியாமல்,  

எண்ணக் கதவைத் திறவாதீர்.

கதை அளப்பார் இறையறிவித்தால்,

காண்போர் நகைப்பார், மறவாதீர்.

புதை பொருளாய் மறைந்திருந்தாலும்,  

புரிந்தோர் உண்டு, அளக்காதீர்.

விதை மரமாகும், வெளியே கனியும்; 

வெளிச்சம் பெற்ற விளக்காவீர்! 

ஆமென்.

-செல்லையா.

கோயில்!

நல்வழி:
விண்ணை அரியணையாகக் கொண்டு,  
வீற்றாள்கின்ற நம் தெய்வம்.  
மண்ணை அடிச்சுவடாகக் கொண்டு,   

மக்களை வாழ்த்தும் இடம் கோயில். 
கண்ணை இழுத்து மூடிக் கொண்டு, 
காதையும் அடைக்கும் நமதுயினம், 
எண்ணை மிஞ்சும் தீமை கொண்டு,  
இறையை வருத்தும் இடம் கோயில்!  
ஆமென்.
-செல்லையா.

சுழலும் சாட்டை!

சுழலும் சாட்டை!


நற்செய்தி: யோவான் 2:13-16.  

நல்வழி: 

விற்பனை செய்யும் நற்பொருளென்று,

விடுதலை வாங்க வருவாருண்டு. 

கற்பனை சொன்னால் ஏற்பாரென்று,  

கடவுளை விற்கும் வணிகருமுண்டு.

நற்பணி என்றும் விற்பனையன்று.


நம்பியுழைத்தால் நன்மையுண்டு.

சொற்படி நடவார் செயலாலின்று,


சுழலும் சாட்டை வருகிறதுண்டு!  

ஆமென்.

செல்லையா.

காணும் அதிசயம்! காணப் பற்று!

அதிசயமா?  பற்றா? 
நற்செய்தி யோவான்: 2:11-12.  

நல்வழி

கண்ட அதிசயம், பற்றினைத் தரலாம்.   

காணாப் பற்றும், அதிசயம் தரலாம். 
அண்டுவோரிடம், ஆண்டவர் வரலாம். 
அண்டாதிருப்பினும், அவரே வரலாம். 
கொண்ட வேளையில், நன்மை உறலாம். 
கொடுக்கும்போதும், நன்மை உறலாம்.  
வண்டுபோல் தேடி எதனைப் பெறலாம்?  

வந்துதருகிற அருள் பெறலாம்! 
ஆமென். 
-செல்லையா. 

இனிப்பு!

இனிப்பு வழங்கும் வாழ்வு! 


நற்செய்தி: யோவான் 2:9-10.  

நல்வழி:  

தொடங்கும் நாளில் வழங்கும் இனிப்பு,   

தொடர் பணியென்று வர வேண்டும்.  


கிடங்கும் நிறைத்து, கேட்பவர்க்களித்து,   

கேளாரடையவும் தர வேண்டும்.  


முடங்கும் நெஞ்சில் முளைக்கும் கசப்பு, 


முற்றும் முடிய அற வேண்டும்.


அடங்கும் தீது, அதற்கிறை தூது,  


ஆவியரருளில் பெற வேண்டும்!  

ஆமென்.  


-செல்லையா. 

நீரும் சாறாகும்!

நீரும் சாறானது!

நற்செய்தி: யோவான்  2:6-8.  

நல்வழி: 


நீராய் இருந்த எளியன் வாழ்க்கை,
நெருப்பாய்க் கொதித்த வேளைகளில்,
சாறாய் மாற்றிப் பகிரக் கொடுத்தீர்.  
சான்றுரைத்தேன், வல்லிறையே.  

வேராய் இருக்கும் எனது பற்றை,  
வேண்டிய ஆழம் நீட்டுகையில், 
பேறாய் மகிழ்ச்சிச் சாறருள்வீர்;  
பேதையறிந்தேன், நல்லிறையே!

ஆமென்.

-செல்லையா.

என் தந்தையார்!

என் தந்தையார்! 

குடித்து வந்த மகனைக் கண்டு, 

குடியா தந்தை என் செய்வார்? 

அடித்து வைய விருப்பம் அற்று,

 அனுப்பி விட்டார், தந்தையார்.  

பிடித்து வந்த விவிலியம் கண்டு,   

பின்னாட்களில் என் செய்தார்?  

படித்து, அப்படி வாழு என்று,

பணித்து விட்டார், தந்தையார்! 

-செல்லையா.