பார்ப்பவரே!
நற்செய்தி: யோவான் 4:45.  

நல்வழி: 

பார்ப்பவர் பார்ப்பதைச் சொல்லுங்கள். 

பலபேர் பார்க்க இது உதவும். 

சேர்ப்பவர் பகிர்ந்திடச் செல்லுங்கள்.

சிலபேர்க்கேனும் அது உதவும்.

தோற்பவர் மீளவும் நில்லுங்கள்.

தோல்வி ஆளவே தீதுதவும்.

ஏற்பவர் யாவரும் வெல்லுங்கள்.


இறையின் அன்புத் தூதுதவும்!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

ஊர் ஒதுக்கும்!

யோவான்4: 43-44

ஊர் ஒதுக்கும், உறவொதுக்கும்,

உடன் பிறப்பும் நமை ஒதுக்கும்;

பேர் சிறந்தோர் என்றழைக்கும்,

பெருமை வருமுன் ஒதுக்கும்.

யார் ஒதுக்கிக் கை விடினும்,

இறையுண்டு, அவர் ஒதுக்கார்.

நேர் கோடே எளிதிணைக்கும்;

நினைத்து வழி இனி புதுக்கும்!

யாருக்கு மதிப்பு?

அடியரா? ஆண்டவரா?

நற்செய்தி: யோவான் 4:41-42. 41.

அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

நல்வழி:

வாக்குரைக்கும் அடியருக்கு,

வழங்குகின்ற மதிப்பை,

ஆக்குகின்ற இறைவனுக்கு,

அளிப்பாயா மனிதா?

தூக்கியுன்னை உயர்த்துகின்ற,

தூயவரின் கரத்தை,

போக்குரைத்து உதறுவது,

போதாதோ? இனி வா!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

பிரிவினை வேண்டாம்!

மனிதம் பிரிக்கும் மடையோரே!
நற்செய்தி: யோவான் 4:39-40.

39. நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

40. சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.

நல்வழி:

இரு பத்து நூறு ஆண்டுகள் முன்பு,

யூதரில் இருந்த  இனவெறியின்,

மறு பதிப்பென்று சாதியை வைத்து,

மனிதம் பிரிக்கும் மடையோரே,

ஒரு குலமாக இணைவீர் என்று,

இயேசு தருகிற  இறையன்பின்,

திருவடி கண்டு, திருந்துவோர்தான், 


தெய்வப் பண்பு உடையோரே! 


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

நட்டவன் ஒருவன்!

நட்டவன் ஒருவன்!


நற்செய்தி : யோவான் 4:36-38.

நல்வாழ்வு:


நட்டவன் ஒருவன் நனைத்தவன் ஒருவன்.

நற்பயன் தருவதோ நம்மிறைவன்.

இட்டவன் ஒருவன் எடுத்தவன் ஒருவன்,

எனினும் தருவான் நல்லிறைவன்.

விட்டவன் ஒருவன், விரும்பின் பெறுவன்,

விடுதலை ஈவதோ நம்மிறைவன்.

கெட்டவன் திருந்தின், கேட்பது பெறுவன்; 

கிறித்து அன்பே நல்லிறைவன்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

அறுவடை!

அறுவடை மிகுதி!

நற்செய்தி: யோவான் 4:35.

35. அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

நான்கு திங்கள் அறுக்காது,

நல்விளைச்சல் விடுவாரோ?

தூங்குபவரை ஒறுக்காது,

தொழிலிழந்து கெடுவாரோ?

தேங்கு மந்தம் பொறுக்காது,

திருமறையை எடுப்போமே.

ஏங்குகின்றார் இறைமகனார்;

இன்தொண்டிற்கு நடப்போமே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

உணவாகிய இறைவிருப்பு!

இறைவிருப்பென்னும் உணவு!
நற்செய்தி: யோவான் 4:31-34.

நல்வழி:

உண்ணும் உணவு எவ்வாறுண்டு?
ஒவ்வோர் ஊரில் வெவ்வேறுண்டு.

எண்ணும் அறிவு எதுபோலுண்டு?

எளியோர் உணவு, அதுபோலுண்டு. 

விண்ணின் முடிவு எங்கனமுண்டு?


விருந்து சுவையின் மங்கலமுண்டு!

தின்னும் மக்கள் எங்கேயுண்டு?


தெய்வ அரசில் இங்கேயுண்டு!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

அறிவித்தல்!

அறிவித்தல்! 
நற்செய்தி: யோவான் 4:28-30.

நல்வழி: 


அறிந்து கொண்ட அப்பெண்ணும்,   

அறிவிப்பதற்கு ஓடுகிறாள். 

தெரிந்து மறந்த அவளூரும், 

தெய்வம் காண நாடுகிறாள். 

பரிந்து பேசும் இறைமகனும்,


பழிப்போர் மீளத் தேடுகிறார்.

புரிந்து நாமும் அறிவிப்போம்;


புனிதர் அன்பில் பாடுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

ஏன் எழுதுகிறேன்?

ஏன் எழுதுகிறேன்?

எண்ணி விதைப்பது பலவாகும்.
எழுத்தில் காய்ப்பது சிலவாகும்.
பண்ணும் பாடல் கனியாகும்;

பகிர்நதால் மட்டும், இனிதாகும்.

கண்ணைத் திறப்பது வாக்காகும்;

கடவுளைக் காட்டும் நோக்காகும்.
விண்ணின் விருப்பே சீராகும்;
விருந்தாய் ஏற்போம், பேறாகும்!

-கெர்சோம் செல்லையா.