வாளும், வன்முறை ஆயுதமும்,
வாழ்வின் வழிமுறையேயென்றால்,
தாழும் அவரது உள்மதிப்பு,
தலைவன் என்றே இருந்தாலும்.
ஆளும் அரசரின் ஆயுதமாய்,
அன்பும் அறமும் இல்லையென்றால்,
கேளும், அவரது கதைமுடிவு,
கிணறாய் வளமே சுரந்தாலும்.
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
வாளும், வன்முறை ஆயுதமும்,
வாழ்வின் வழிமுறையேயென்றால்,
தாழும் அவரது உள்மதிப்பு,
தலைவன் என்றே இருந்தாலும்.
ஆளும் அரசரின் ஆயுதமாய்,
அன்பும் அறமும் இல்லையென்றால்,
கேளும், அவரது கதைமுடிவு,
கிணறாய் வளமே சுரந்தாலும்.
-கெர்சோம் செல்லையா.
சேய்கள் நாமே!கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:25-26.
| 25கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். |
| 26மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? கிறித்துவில் வாழ்வு: உண்ணக் கவலை, உடுக்கக் கவலை, உறங்கும் முன்னே ஒடுங்காக் கவலை. எண்ணும் நமக்குக் கிடைத்தது என்ன? எங்கு பார்ப்பினும் நோய்கள்தாமே! விண்ணின் அருளால் வாழும் நமக்கு, வேண்டாம் இந்த நோய்தரும் கவலை. கண்ணை மூடி, கடவுளைக் கேட்போம்; காக்கும் அவர்க்குச் சேய்கள் நாமே! ஆமென். |
காகங்களைக் கவனியுங்கள்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:24.
| 2 | காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். கிறித்துவில் வாழ்வு: கூடிழந்து, குஞ்சிழந்து, குரலினிமை தானிழந்து, பாடுகின்ற காக்கைக்கு, பசிக்குணவு தருமிறையே, தேடுகின்ற அடியனுக்கு, தேவையெது, என்றறிந்து, கோடிகள் குவிக்குமன்பு, குறையாது, பெருநிறைவே! ஆமென். |
என்னினம், என் மதம்!
என்னினம், என் மதம், என்ற வெறியும்,
உன்னினம், உன் மதம், என்ற வெறுப்பும்,
வன்னினமாகி, பின்னினம் அழிப்பின்,
இன்னிலம் எப்படி நன்னிலமாகும்?
என்னினம் எனாமல், நம்மினமாக்கும்.
உன் மதமென்பதைச் சம்மதமாக்கும்.
வன்னினம் மறையும், நன்னினமாகும்;
இன்னிலம் இனிமேல் நன்னிலமாகும்!
-கெர்சோம் செல்லையா.
அன்பு! அன்பு!
இந்து சமண பௌத்தர் இன்று,
இசுலாம் கிறித்தவ ரோடிணைந்து,
வந்த பிணக்கம் யாவும் மறந்து,
வாழ வேண்டும் இந்தியர் என்று!
முந்து நாளில் செய்தத் தவறு,
முதலில் போக, இறையை நம்பு.
சொந்தமில்லை வேறு நமக்கு;
சொல்லுகின்றார், அன்பு, அன்பு!
-கெர்சோம் செல்லையா.
கவலைப்படாதீர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:22-23.
| 22பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். |
| 23ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. கிறித்துவில் வாழ்வு: உயிரைக் கொடுத்தவர் உணவு கொடாரா? உடலைக் கொடுத்தபின் உடை மூடாரா? பயிரைக் கொடுத்தவர் நீரை விடாரா? பரிசாய்க் கொடுத்து நிறைத்திடாரா? வயிறை நிரப்பும் கவலை விடாரே, வருந்தல் நிறுத்தும், வலி கொடாரே! மயிர்கள் எண்ணித் தரையில் இடாரே, மன்னித்தும்மைக் காத்திட்டாரே! ஆமென். |
தமிழ் நாடு நாள்!
இன்று தமிழ் நாடு நாள்.
01-11-1956 -ஆம் நாளில் குமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணையுமுன், அம்மக்கள்மீது அன்றைய திரு-கொச்சி அரசு ஏவிய கொடுமைகளை நினைவுகூரும் நாள்.
ஆங்கிலேயர் நாளில்கூட அடக்குமுறைகள் அவர்கள்மீது அவ்வளவாயில்லை. ஆனால், பட்டம் தாணுபிள்ளையின் அரசோ மீண்டும் அவர்களை அடிமைப் படுத்தியது; அடக்கியே வைத்திருந்தது.
தமிழர், தமிழ் பயில இயலாது; தமிழருக்கு, அரசுப் பணியிலும் இடம் கிடையாது. கல்வியில் சிறந்திருந்தும், கயமைச் சாதியின் பெயரால் புறக்கணிப்பு. காசு ஒதுக்கீடுகளிலும், வளர்ச்சித் திட்டங்களிலும், கன்னியாகுமரி முற்றிலும் ஒதுக்கி வைப்பு.
கேட்டவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். போராடியவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
“கண்டால் அறியாம்” என்ற கூற்றின்படி, கண்டபடிச் சுட்டுத் தள்ளப்பட்டார்கள்.
ஆனால், நொண்டியாக்கப் பட்டும் அவர்கள் விழுந்துவிடாமல், மீண்டும் ‘குஞ்சன்நாடர்களாய்’ எழும்பினார்கள்.
கையில் விலங்கிடப்பட்டும், கால் முதல் தலை வரை அடிக்கப்பட்டும், குழித்துறை ஆற்றில் குதித்துத் தப்பி, ‘மணிகளாய்த்’ திரும்பி வந்து, வீர முழக்கமிட்டார்கள்.
உயிரிழந்தவர் பலர், உடமையிழந்தவர் பலர், ஓடி ஒளித்தவர் பலர், ஒப்பனையிட்டு மறைந்திருந்தவரும் உண்டு சிலர்.
இப்படியெல்லாம் இவர்கள் இழந்தபின்னரே, இறுதியாக, இன்பத் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டார்கள்.
அந்த நாள்தான் 01-11-1956.
இங்கு வந்தபின் இவர்கள் மேன்மேலும் வளர்ந்தார்களா?
வளர்ந்தார்கள்; ஆனால் வளர்த்தியது அரசு இல்லை! கல்வியும், கடின உழைப்பும், எல்லாவற்றிற்கு மேலாக, கடவுளின் அருளுமே அவர்களை உயர்த்தியதேயன்றி, அரசுகள் துரும்பையுந் தூக்கவில்லை!
செய்யமாட்டேன் என்றுகூறித் தமிழ் நாட்டில் சேர்த்த காமராசர், முன்பு கல்லடிப் பட்டிருந்தும், அவர்களுக்குச் சிலவற்றைச் செய்தார். அவர்களும், அவரை நன்றியோடு பார்த்தார்கள்.
ஆனால், அவருக்குப்பின் வந்தவர்களுக்கு, நெல்லை எல்லையாயிற்று; குமரியோ தொல்லையாயிற்று!
ஆட்சிக்கு வந்துவிட்டால் அனைவரும் அசுரரோ?
தெரியாமல் கேட்கும்,
-கெர்சோம் செல்லையா.
எங்கிருக்கிறது என் சொத்து?
கிறித்துவின் வாக்கு: லூக்கா12:21
| 21 | தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். கிறித்துவில் வாழ்வு: இங்கு சேர்க்கும் சொத்தில் சிறிது இந்திய ஏழைக்கீவதினால், அங்கு விண்ணில் ஆண்டவருக்கு, அளிக்கும் கடனாய்ப் பெருத்திடுதே. தங்க மாளிகை கட்டி எழுப்பி, தவற்றைக் காசாய்க் குவிப்பதினால், எங்கு எவர்க்கும் பயனில்லாது, இறைமுன் கடுகாய்ச் சிறுத்திடுதே! ஆமென். |
இன்று அழைத்தால்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:20.
| 20 | தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். கிறித்துவில் வாழ்வு: என்று செல்வேன், எப்படிச் செல்வேன், என்று அறியா என் வாழ்வில், இன்று வாயென இறைவன் அழைப்பின், என்ன சொல்லி எதிர் கொள்வேன்? ஓன்று மட்டும் உணர்ந்து சொல்வேன்; என் பணி முடிந்ததா எனக் கேட்டு, நன்கு அப்பணி நானும் முடித்து, நன்றி சொல்லி, உடன் செல்வேன்! ஆமென். |
கேட்டேன், கேட்டேன்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:16-19.
| 16அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. |
| 17அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; |
| 18நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையம் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, |
| 19பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். கிறித்துவில் வாழ்வு: பத்தின் நாளில், நூறினைக் கேட்டேன். பல நூறானபின், ஆயிரம் கேட்டேன். சொத்தும் சேரவே, இலட்சம் கேட்டேன். சொந்தமாகவே, கோடிகள் கேட்டேன். வித்தை கற்றிட, காசுகள் கேட்டேன்; வேலை கிடைக்கவே, திருப்பிக் கேட்டேன். நித்தமும் உம்மிடம் சொத்தே கேட்டேன்; நேர்மை இல்லை, அதனால் கெட்டேன்! ஆமென். |