ஒரு பக்கம் பார்த்து நடக்கிற நமக்கும்,

ஊரின் முழுமை தெரியாது.

மறு பக்கச் செய்தியைக் கேட்கும்போதும்,

மதி மயங்கினால் புரியாது.

வருவதும் வந்ததும் அறிந்த இறைதான்,

வாழ்வின் பொருள் உணர்த்தட்டும்.

பொருளை அறிய, உவமையைக் கற்போம்;

புனிதம் நம்மைப் புணர்த்தட்டும்!

(மத்தேயு 13:1-52)

போற்றும் இயேசு பொழிந்தது எல்லாம்,

புதிரை அவிழ்க்கும் உவமைகள்.

தூற்றும் மனித மடமைகள் போக்கும்,

தூய அறிவுப் புலமைகள்.

ஏற்றம் மிகுந்த இறைவனின் விருப்பை,

எளிமையாக்கும் நிகழ்ச்சிகள்.

மாற்றம் தருமே, மகிழ்ந்து கற்போம்;

மைந்தன் அருட் புகழ்ச்சிகள்!

(மத்தேயு 13: 1-52)

தாழ்மைப் பண்பைத் தவறாய் எண்ணும்,

தமிழக மக்களே வாருங்கள்.

ஏழ்மைக் கோல வடிவில் மின்னும்,

இறையின் மகனைப் பாருங்கள்.

வாழ்வில் உயர்வு காண விரும்பின், 

வரட்டும் நம்முள் தாழ்மை.

ஆழ்கடல் நோக்கித் தாழும் ஆற்றின்,

அமைதிக் கொடையே செழுமை!

(யோவான் 13:1-17)

இன்னொரு பண்பு பொறுமையாகும்;

இயேசுவின் வாழ்வே சான்று ஆகும். 

முன்னொரு நாளில் யோபுவில் கண்டோம்;

முழுமை காண, இயேசுவேயென்போம்.

என்னிலும் நம்மிலும் வருமா பொறுமை?

இல்லா இடத்தில் யாவுமே வறுமை. 

நன்னெறி என்பது உரைப்பதில் இல்லை;

நாம் நடப்போம், அவரே எல்லை!

(லூக்கா 4:14-44)

இரக்கம் என்பது இறையின் பண்பு;

இயேசு மொழிந்தார் யூதர் முன்பு.

சிறக்கச் செய்வது செல்வம் என்று, 

சிந்தித்தாரைத் திருத்த அன்று.

உரக்கப் பேசிச் செய்யார் கண்டு,

ஊரில் பற்பல கதைகள் உண்டு. 

மறக்க மாட்டா இயேசுவோ வந்து,

மன்னிக்கிறார் தம்மைத் தந்து!

(லூக்கா 6)

நன்மை செய்து நடந்த இயேசு,

நவின்ற செய்தி அன்பாகும்.

பன்மை இனமும் சேர்ந்து வாழ, 

பயிற்றுவிக்கும் பண்பாகும்.

வன்மை செய்து காட்டும் மாசு,

வழங்கும் முடிவு துன்பாகும். 

தன்மை என்ன? விதைப்பதுதான்

தரும் விளைச்சல், பின்பாகும்!

(யோவான் 13)

நல்லவர் யார்? கெட்டவர் யார்?

எல்லோரும் கெட்டவரே, ஏதேனும்  நேரத்திலே.

எண்ணாது விட்டவரே, ஏமாந்தார் வீரத்திலே. 

நல்லோரும் கெட்டவரே, நாம் காணா தூரத்திலே.

நம்புவீர் ஒருவரையே, இறை அதிகாரத்திலே! 

அருஞ்செயல் புரிந்த இடங்களில் கூட,

ஆண்டவர் இயேசுவை எதிர்க்கிறார்.

பெருந்திரள் கூட்டம் அவர் புகழ் பாட,

பெருமைக்காரரோ கொதிக்கிறார்.

வருந்திடும் நாட்கள் வரும் வரை ஆட,

வானிறையும்  அனு மதிக்கிறார். 

திருந்தும் நமக்கோ திருவடி  நாட,

திருச்செயலாலே விதிக்கிறார்!

(யோவான் 12:37-38)

ஆண்டவர் செய்த அருஞ்செயல் யாவும்

அவருக்கில்லை, பிறருக்கே.

மாண்டவர் கூட அவர் குரல் கேட்டு,

மறுபடி வாழ்ந்தது உறவுக்கே.

தோண்டிப் பார்க்கும் நம் நிலை இன்று,

தூய நினைப்பில் யாருக்கே?

வேண்டிடும் நன்மை பகிருவதாலே,

விளையும் நூறாய் ஊருக்கே!

(யோவான் 11).

தன்னிடம் வந்த எளியரைக் கண்டு,

தாங்கும் மைந்தன் உருகுகிறார்.

இன்னிலம் வாழும் உரிமை உண்டு;

இயலார் நிலைக்கு மருகுகிறார்.

எண்ணி முடியா அருஞ்செயல் கொண்டு,

எளியருக்குதவி, பெருகுகிறார்.

நன்மை செய்வதே நமக்கும் தொண்டு;

நடப்பார் மேலும் மெருகுகிறார்!

(மத்தேயு 14).