மற்றொரு அடியார் சிமியன் பேதுரு,

மறுதலிப்பாரென இயேசுரைக்க,

ஊற்றவர் யாவரும் கை விட்டாலும்,

உயிர் தருவேனெனெ முழங்கினார்.

சற்று நம் வாழ்வை நாமும் பார்த்தால்,

சறுக்கி அவர் போல் வீழ்கிறோம்.

பற்றுறுதி வெறும் சொற்பேச்சல்ல;

பண்பிருப்பவரே வழங்குவார்!

(லூக்கா 22:31-34).

கேட்டின் மகனாம் யூதசு அன்று,

கெட்டிட காசு பெற்றது போல், 

ஏட்டுக் கல்வியைக் கற்றவர் இன்று,

இயேசுவை நாட்டில் விற்கிறார்.

தீட்டின் தன்மை நன்கு தெரிந்தும்,

திருந்தா திருப்பணி ஊழியரால்,

கூட்டே வேண்டாமென்று பலரும்,

கிறித்துவுள் வராது நிற்கிறார்!

(மத்தேயு 26: 14-25)

முன்பொரு நாளில் முதல் மகன் ஆதம்,

மோசம் செய்வது கண்டிருந்தும்,

நன்மையின் தெய்வம் அது தவறென்று,

நன்கு தெரிந்தும் தடுக்கலையே.

தன்னுடன் இருந்த அடியரில் ஒருவன்,

தவற்றின் கூலி கொண்டிருந்தும்,

அன்புடன் இயேசு அனுப்புதல் போன்று,

அடியன் இன்று நடக்கலையே!

(யோவான் 13:21-30).

பொங்கல் வாழ்த்துகள்!

புத்தரிசி பொங்குகின்ற,

புது திங்கள் தை நாளில்,

இத்தரையோர் மகிழுகையில்,

இணைத்தேன் என்னையே.

எத்திசையில் வாழ்ந்தாலும்

யாவரும் ஒன்றென்று,

கத்திடுவோம், களித்திடுவோம்;

கடவுள் ஈவு நன்மையே!

கெர்சோம் செல்லையா,

இறையன்பு இல்லம்,

24,செக்ரடேரியட் நகர்,

இரட்டை ஏரி, சென்னை-99.

எந்த வழியில் நாம் இனி நடந்தால்,

இறையுள் இணைந்து வாழலாம்?

அந்த வழியை இயேசு திறந்தார்.

அன்பின் வழியில் தாழலாம்.

இந்த அன்பை விட்டவர் கடந்தால், 

எங்கே எப்படி வாழலாம்?

வந்த நோக்கம் மறந்திறந்தார்;

வாழ்வை இழந்து தாழலாம்!

(யோவான் 13:34-35).

கழுவித் துடைக்கும் கடவுளின் மைந்தன்,

கருத்தை உணர்த்த மொழிகிறார்.

புழுதிக்கொத்த நம் புவி வாழ்வை,

புனிதம் ஆக்கிடப் பொழிகிறார்.

தொழுகைக்குரிய அவரது அன்பை, 

தூயரும் தொடர அழைக்கிறார்.

எழுவாய் மனிதா, இயேசு வழி பார்;

ஏற்பார் வாழ்வில் தழைக்கிறார்!

(யோவான் 13:31-35)