பிறப்பும் தாழ்மை, வளர்ப்பும் தாழ்மை,

பேசிய அறிவும் தாழ்மை, தாழ்மை .

இறப்பும் தாழ்மை, எதிலும் தாழ்மை,

இயேசு வழியோ தாழ்மை, தாழ்மை.

சிறப்பும், மேன்மையும் தருவது தாழ்மை;

சிலுவை சொல்கிற செய்தியும், தாழ்மை.

முறைக்கும் என்னில் இல்லை தாழ்மை;

மும்மை இறையே, தருவீர் தாழ்மை!

(யோவான் 13:13-17)

தாழ்மை வடிவில் வந்த மைந்தன், 

தம் அடியாரின் முன் மாதிரி.

வாழ்வின் முடிவில் நுழையும் மனிதன்,

வளர்த்தெடுப்பின் நன் மாதிரி.

காழ்ப்புணர்வோடு கட்டி முழங்கும்,

கதைகள் யாவும் துற் செய்தி.

ஏழ்மை எனினும், இயேசு வழங்கும்,

இந்த அன்பே நற் செய்தி! 

(யோவான் 13:13-17).

உடன்படி முடித்த ஒருசில நொடியில்,

உயர்ந்தோன் யாரென வாதிட்டார்.

கடன் நெறி அறியா அடியர் அன்றும்.

கருத்தை இழந்து மோதிட்டார்.

அடிமையின் வடிவாய் ஆண்டவர் தாழ்ந்து,

அடியரின் கால்கள் கழுவிட்டார்.

பிடிபடா வாழ்வில் பெரியவர் யாரோ?

பிறரிடம் அன்பில் தழுவிட்டார்!

(லூக்கா  22:24-30 & யோவான் 13: 1-20)

இறுதி விருந்தால் இணைக்கும் வழியை,

இயேசு உரைப்பது கேட்டீரா?

உறுதி செய்யும் உடன்படி மொழியை, 

உள்ளில் புதிதாய் ஏற்றீரா?

திறுதி செய்யவே பலியாய் மடியும், 

தெய்வ உடலை உண்டீரா?

குருதி ஆறும் சாறென வடியும், 

கிறித்து அன்பைக் கண்டீரா?

(மத்தேயு 26:17-29)

விடுதலை நாளை விழாவாய் எடுத்து,

விருந்து உண்கிற யூதரைப்போல்,

அடியவரோடு ஆண்டவர் அமர்ந்து, 

அந்த இரவில் உணவுண்டார்.

கெடுதலை நினைத்த யூதாசிருந்தும்,

கிறித்து பகிர்ந்து கொடுத்ததுபோல்,

மடிகிற மாந்தர் உடன் இருந்தாலும்,

மைந்தனை எண்ணி உண்போமா?

(லூக்கா 22:1-23)

மானிடனாக வாழ்ந்திட்ட நாளில்,

மைந்தனும் அறியா அந்நாளை.

தானறிந்ததுபோல் ஒருவர் கூறின்,

தாங்கி அவரைச் சுமக்காதீர்.

ஏனிந்த பொய்கள்? ஏய்க்கும் மக்கள்?

என்கிற அறிவுதனைப் பெற்று,

வானின் மைந்தன் வருகிற வரையில்,

வழி தவறா விழி இமைக்காதீர்!

(மத்தேயு 24).

ஆளும் ஆண்டவர் ஆண்டிட வருவார்;

ஆயத்தமாகிட நாம் அறிவோம்.

வாழும் புனிதரும் எடுக்கப்படுவார்;

வருவது என்றென நாம் அறியோம்.

நாளும் அறியோம், நாழிகை அறியோம்;

நம்பும் வாக்கையே நாம் அறிவோம்.

மாளும் மனிதரை மீட்க உழைப்போம்;

மறுப்பவராயின், நாம் அறியோம்!

(மாற்கு 13)

ஏரோது அரசன் கட்டிய கோயில்,

எடுத்துக் காட்டிய அழகு கண்டு,

ஈராறு அடியரும் வாய் பிளந்தார்;

இப்படி மனிதர் இன்றுமுண்டு. 

தேறாது போகும் எருசலேம் கோயில்;

தெரிந்துரைத்த இயேசு கண்டு,

வாராதிருப்பார் வாழ்விழப்பார்;

வாக்கை நம்பு, மீட்பு உண்டு!

(மத்தேயு 24:1-2)

பசுமை இலைகள் மேல் வரு முன்பு,

பழங்கள் கொடுப்பது அத்தி மரம்.

புசிக்க ஒன்று கிடைக்குமோ என்று,

போனார் ஆண்டவர் பசி நேரம்.

அசையும் இலைகள் அடியில் சென்று,

ஆண்டவர் கேட்டார் கனி எங்கே?

இசைபட வாழக் கொடுத்தல் நன்று.

ஏய்த்தவர் பட்டார், பார்  அங்கே!

(மாற்கு 11:11-26)

கோயிலில் நுழைந்த கிறித்துவின் கண்கள் 

கொடியரின் செயலால் வருந்தினவே.

வாயிலைக் காக்கும் காவலர் போன்று, 

வழங்கிய கசையடி திருத்திடவே.

ஆயிரமாய் இன்று பிரிந்து கிடைக்கும், 

அவைகளின் நிலையும் தெரிந்ததுவே.

பாயிரம் பாடி இறையைக் கேட்போம்; 

பழித்திட அன்று, விழி திறந்திடவே!

(மத்தேயு 21:12-17)