எருசலேம் நகரில் இயேசு வருகையில்,

எளியர் ஏழையர் வரவேற்றார்.

பெருந்திரள் சிறுவர் பெரியோர் அவரில்,

புகழும் வாழ்த்தொலி இறை கேட்டார்.

அருவருப்பென்கிற கழுதை மேலமர்ந்து,

அமைதியினாண்டவர் வலம் வந்தார்.

இறையரசமைக்கச் சண்டையிடாதீர்;

இயேசு தாழ்மையில் நலம் தந்தார்!

(லூக்கா 19:28-38)

கொல்வார் என்று தெரிந்தே இயேசு,

கொல்கதா நகருக்கு விரைகிறார்.

வல்லிறை வகுத்த திட்டம் முடித்து,

வாழ்வு கொடுத்திட வருகிறார்.

செல்கிற ஊர்களில் அருஞ்செயல் செய்து,

சேர்ப்பின் செய்தி தருகிறார். 

இல்லார் பெற்றார், இயேசுவில் உற்றார்;

இங்குளோர் ஏற்பின் பெறுகிறார்!

(யோவான் 11:1-10)

தம்மடியார்கள் தம் நிலை உணர,

தவறா இயேசு எச்சரித்தார்.

மும்முறை தந்த முதிர்ந்த வாக்கை, 

முடிவில் நமக்கும் அச்சடித்தார்.

இம்மறை நூலைக் கல்லாதவர்தான்,

ஏற்படும் ஐயத்தில் நச்சரிப்பார்.

நம்மிடமுள்ள திருமறை ஆய்வோம்;

நன்மையின் இயேசு மெச்சிடுவார்!

(மத்தேயு 16:21; 17:22-23 & 20;17-19;

மாற்கு 8:31; 9:30-32 & 10:33-34;

லூக்கா 9:21-22; 9:44 & 18:31-34)

விலைக்கு போவார் தம்முடன் இருப்பதை,

விண்மகன் இயேசு அறியலையா?

தலைக்கு வருகிற ஏதம் உணர்கிற,

தகுந்த அறிவும் பெறவிலையா?

மலைத்து நின்றிட்ட அவரது அடியரும்,

மாறும் சூழலைப் புரியலையா?

நிலைத்து நிற்கும் திருமறை கற்போம்; 

நேயன் முன்னுரை தெரியலையா?

(மத்தேயு 16)

இன்றைய தலைவர்கள் சூழ்ச்சிகள் புரிந்து,
ஏய்த்தலை இறைப்பணி என்பதுபோல்,
அன்றைய கயவர்கள் காசுகள் சொரிந்து,
அடியரில் ஒருவனை வாங்கிட்டார்.
நன்றியை மறந்து, நல் வழி துறந்து,
நாமும் பணத்தின் பின் சென்றால்,
பன்றிகள் கூட்டம் என்றே அழைப்பார்;
பரிவில் இயேசு ஏங்கிட்டார்!

(லூக்கா 22:1-6)

கல்லை, தெய்வம் என்பார் நெஞ்சம்,

கல்லாய்ப் போகையில் அழுகிறோம்.

தொல்லை விற்று, தொல்லை வாங்கும்,

துயரம் தீர்க்கவும் எழுகிறோம்.

சொல்லை, தெய்வம் என்பார் வஞ்சம்,

துடிக்க வைக்கையில் விழுகிறோம்.

எல்லை இல்லா இறைவனின் திட்டம்;

இச்சிலுவை முன் தொழுகிறோம்!

(யோவான் 11: 45-57)

உண்மை உரைக்கிற இடங்களிலெல்லாம்

ஊரார் நம்பி ஏற்பதில்லை.

நன்மை செய்கிற மனிதரையெல்லாம்

நன்றி செலுத்திப் பார்ப்பதில்லை.

இன்மகன் இயேசு மொழிந்தது எல்லாம்,

ஏற்க மறுப்பினும் பதிலில்லை.

அன்றைய அறிஞர், இன்று நம் ஆயர்,

அறிய மறுப்பதும் புதிரில்லை!

(யோவான் 6)

நாடும் மனிதன் வாழ்க்கை சொல்ல,

நன்னூல் நமக்கு பலவுண்டு.

தேடும் இறையின் தன்மை உரைக்க, 

தேர்வுற்றாரும் சிலருண்டு .

வாடும் மனுக்குல மீட்பிற்கென்று, 

வடித்த உவமையை நாமுண்டு, 

ஆடும் மகிழ்ச்சி அடைய இன்று,

அழைப்பதுதான், என் தொண்டு!

தன் மகன் திருந்தி வந்தது கண்டு, 

தந்தை விருந்து அளிக்கிறார்.

நன் மகன் அண்ணனோ சினம் மூண்டு,

நடுவில் வராது பழிக்கிறார்.

அன்பினின் உருவாம் அப்பா அறிந்து, 

அவனை வருந்தி விளிக்கிறார்.

என் மகன் இறந்தான், எழுந்து வந்தான்;

இன்புறவேயென அழைக்கிறார்!

(லூக்கா 15:11-32)

வந்த மகனை வாரி அணைத்தார்.

வாய் மணக்க முத்தி இணைத்தார்.

நிந்தை அகற்ற, புத்துடை கொடுத்தார்.

நேர்மை வழிக்கு, காலணி தொடுத்தார்.

நொந்த அவனுக்கு மோதிரம் இட்டார்;

நீயும் மகனே, உடன்படி போட்டார். 

எந்த தந்தை இப்படி மகிழ்வான்?

எனக் கேட்பான், இறை புகழ்வான்!

(லூக்கா 15:11:32)