ஆண்டவர் செய்த அருஞ்செயல் யாவும்

அவருக்கில்லை, பிறருக்கே.

மாண்டவர் கூட அவர் குரல் கேட்டு,

மறுபடி வாழ்ந்தது உறவுக்கே.

தோண்டிப் பார்க்கும் நம் நிலை இன்று,

தூய நினைப்பில் யாருக்கே?

வேண்டிடும் நன்மை பகிருவதாலே,

விளையும் நூறாய் ஊருக்கே!

(யோவான் 11).

தன்னிடம் வந்த எளியரைக் கண்டு,

தாங்கும் மைந்தன் உருகுகிறார்.

இன்னிலம் வாழும் உரிமை உண்டு;

இயலார் நிலைக்கு மருகுகிறார்.

எண்ணி முடியா அருஞ்செயல் கொண்டு,

எளியருக்குதவி, பெருகுகிறார்.

நன்மை செய்வதே நமக்கும் தொண்டு;

நடப்பார் மேலும் மெருகுகிறார்!

(மத்தேயு 14).

யார் விளித்தாலும் இயேசு சென்று,

இறையிடம் திரும்ப அழைக்கிறார்.

தார் மணி மாலை தற்புகழ் என்று,

தம்பட்டமின்றி உழைக்கிறார்.

பேர் புகழ் பெருமை ஈட்ட இன்று,

பிழைப்போர் திருந்த அழைக்கிறார்.

போர் முகில் அன்று, பொறுமை நன்று;

புரிந்தோர் நன்கு உழைக்கிறார்!

(மத்தேயு 10 & 11).