திருடாதேயெனச் சொல்வோர் இன்று, திருடும் காட்சி காண்கிறோம். அருளாளர் போல் அவரும் நின்று, அள்ளிச் செல்வதும், காண்கிறோம். ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி, ஊரை உண்பதும், காண்கிறோம். இறைவ னொருவரே மெய் வழி காட்டி; இயேசுவில் கண்டு, வேண்டுவோம்!
வாக்கால் அலகை வென்றவர் எழுந்து, வானக அரசைத் தொடங்கினார். நோக்காதிருந்த கலிலெயர் விழுந்து, நொடியில் திருந்தி அடங்கினார். சேர்க்காதிருக்க விழைந்தோர் மட்டும், செரிக்க விடாது மடங்கினார். தீர்க்காதிருக்கும் தீவினை கொட்டும்; திருந்தாவிடில் அவர் முடங்குவார்! (மத்தேயு 4:11-17)
நாற்பது நாட்கள் உண்ணாதிருந்த, நன் மகன் பசியில் வாடினார். தோற்பது காணும் எண்ணமிருந்த, துயர் தரு அலகை நாடினான். ஏற்பது என்றும் இறைவிருப்பென்ற, இயேசுவோ வாக்கால் சாடினார். பார்ப்பது போதும் என நாம் போனால், பகைவன் விழுங்கத் தேடுவான்! (மத்தேயு 4:1-11).